;
Athirady Tamil News

தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடத்தைக் கபளீகரம் செய்யும் மகாவலி திட்டத்தை கைவிடும்வரை போராடுவோம்..!!

0

தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடத்தைக் கபளீகரம் செய்யும்
மகாவலி திட்டத்தை கைவிடும்வரை போராடுவோம் – சிவசக்தி ஆனந்தன் அறைகூவல்

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் மகாவலி நீரை வழங்குவதற்கான திட்டம் என்ற பெயரில் வடக்கு-கிழக்குவாழ் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை கபளீகரம் செய்து வடக்கு-கிழக்கை நிரந்தரமாகப் பிரிப்பதற்கும், எமது பிரதேசத்தில் அரச அனுசரணையுடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, எம்மை எமது பிரதேசத்திலேயே சிறுபான்மையினராக்குவதற்கும் அரசினால் மேற்கொள்ளப்படும் முயற்சியை முறியடிக்க வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும். அந்த வகையில் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையின் கண்டனப் பேரணிக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளது.

தமது கட்சியின் ஆதரவினை ஈபிஆர்எல்எவ்வின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கையினூடகத் தெரியப்படுத்தியுள்ளார். அவரது அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், தமிழினத்தின் மரபுரிமையை திட்டமிட்டு சிதைப்பதுடன் இனப்பரம்பலையும் மாற்றியமைத்து, தமிழினத்தின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளாகும். இதற்கு எதிராக மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் 28.08.2018ம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் கண்டனப் பேரணிக்கு நாமும் பூரண ஆதரவு வழங்குகிறோம்.

வன்னியில் வாழும் ஈழத்தமிழ் இனம் 1984 இல் தன் முதலாவது இடப்பெயர்வைச் சந்தித்தது. கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஆட்டாங்குளம் போன்ற பிரதேசங்களிலிருந்து மக்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டனர். 1988 இல் வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்விடங்கள் உட்பட்டபெரும் பிரதேசத்தை இலங்கை அரசு மகாவலி டு வலயமாக அறிவித்தது.

அன்று தொடக்கம் மகாவலி அதிகாரசபையையும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தையும் தமிழ் இனத்தை அரசியல், பொருளாதார, கலாசாரரீதியாக பலவீனப்படுத்தும் கருவிகளாகப் பயன்படுத்தி மகாவலி அபிவிருத்திதிட்டம் என்ற போர்வையில் கபடநாடகம் ஒன்றை அரசு மேற்கொண்டுவருகின்றது. இதன் வெளிப்பாடே நெடுங்கேணி பிரதேசசபைக்கு 14 சிங்கள உறுப்பினர்களும் 11 தமிழ் உறுப்பினர்களும் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட துர்ப்பாக்கிய சம்பவமாகும்.

இன்று மகாவலி டு வலையம் வடக்கின் மூன்று இலட்சத்து முப்பத்தாறாயிரம் ஏக்கர் காணிகளை விழுங்கி விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதைவிட இரணைமடுவை மையப்படுத்தி கிளிநொச்சி, யாழ் மாவட்டத்திற்கிடையே மு வலையமும், பறங்கியாறு, மாந்தை, மன்னார் பகுதிகளை உள்ளடக்கி து வலையமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு காணி அதிகாரத்தை இல்லாதொழித்து இங்கும் சிங்கள பெரும்பான்மையை நிறுவி தமிழன் மரபுரிமையை வேரறுத்து அரசியல் பொருளாதார கலாச்சாரரீதியாக தமிழினத்தை மலினப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இம்மகாவலி அபிவிருத்தி திட்டத்தை எதிர்த்திட எம் இனியதமிழ் மக்களே அனைவரும் ஒன்றுதிரள்வீர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறைகூவல் விடுத்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 3 =

*