;
Athirady Tamil News

உலக வெப்பமயமாதல்தான் கேரள வெள்ளத்திற்கு காரணம்.. பேரழிவு தொடரலாம்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

0

நூற்றாண்டில் கண்டிராத மிகப் பெரிய மழை, வெள்ளத்தை கேரளா சந்தித்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தாங்கள் வாழ்ந்த பகுதியில் இருந்து இடம்பெயர நேர்ந்துள்ளது. இந்த மாபெரும் மழைக்கும் அதைச் சார்ந்த வெள்ளத்திற்கும் என்ன காரணம்? வேறொன்றும் கிடையாது.. பலகாலமாக சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் ‘உலக வெப்பமயமாதல்’ தான் இதற்கு முக்கிய காரணம். இத்தோடு நின்றுவிடப்போவதில்லை இந்த வெள்ளம். இன்னும் பல வெள்ளங்களை நாம் பார்க்கப்போகிறோம், இன்னும் பல இயற்கை பேரழிவுகள் காத்திருக்கிறது என்று எச்சரிக்கிறது ஆய்வு முடிவுகள். இரண்டரை மடங்கு அதிக மழை கேரளாவில் பெய்துள்ள மழை சாதாரணமானது கிடையாது.

வழக்கமான பருவ மழையை விட இரண்டரை மடங்கு அதிகமாக கொட்டித் தீர்த்துள்ளது. இதைப்போன்ற ஒரு மிக மோசமான ஒரு தட்ப வெப்ப மாற்றத்தை காண்பது மிகவும் அரிது என்பதே வானிலை ஆய்வு மைய புள்ளி விவரம் கூறும் பாடம். “கேரளாவில் ஏற்பட்ட இந்த ஒரு வெள்ள நிகழ்வை மட்டுமே வைத்து பருவநிலை மாறுதலுடன் தொடர்புபடுத்துவது கடினமானது. எனினும் 1950 முதல் 2017ம் ஆண்டுகளுக்கு நடுவேயான மழை, வெள்ள அளவு சில நேரங்களில் மும்மடங்கு அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது” என்கிறார் மும்பை அருகேயுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை தொழில்நுட்பத்தின் பருவநிலை பிரிவு விஞ்ஞானி ராக்சி மேத்யூ கொல்.

69,000 மக்கள் பலியான சோகம் 1950 முதல் 2017 ஆண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில் மழைப்பொழிவு என்பது சில காலகட்டங்களில் மும்மடங்கு வரை அதிகரித்து கொட்டியதும், அதன் காரணமாக மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் எங்கள் ஆய்வுகளில் பதிவாகி உள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார். இந்த காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மழைப்பொழிவு மற்றும் அதைச் சார்ந்த அழிவுகளால் 69 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 17 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் கடந்த ஆண்டு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியாகியுள்ள மேத்யூ எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரபிக் கடல் மாற்றம் “அரபிக் கடலில் ஏற்படும் அதிவேக வெப்பம், பருவ மழை மேகங்களை சுழன்றடிக்க செய்து மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான மழைப்பொழிவை அளிக்கின்றது.

அரபிக் கடலிலின் ஈரப்பதம் உள்நாட்டில் கொண்டு பெரு மழையாக கொட்டப்படுகிறது” என்கிறார் ராக்சி மேத்யூ கொல். கேரளாவைப் பொறுத்த அளவில் அங்குள்ள அனைத்து 35 மிகப் பெரிய அணைகளும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு முன்பே நிரம்பிவிட்டன. இதன் காரணமாக 26 ஆண்டுகளில் முதல் முறையாக இடுக்கி அணை மதகுகள் கூட திறக்கப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. ஜெர்மனி விஞ்ஞானி சொல்வதை பாருங்கள் இப்போது நாம் பார்த்த கேரள வெள்ளம் என்பது உலக வெப்பமயமாதலின் ஒரு பகுதி தான் என்கிறார் ஜெர்மனியிலுள்ள பருவநிலை தாக்கங்கள் குறித்த ஆய்வுக்கான Potsdam Institute-ன் விஞ்ஞானி கிரா வின்கே. இப்போது உள்ள மாசு அளவு அப்படியே தொடர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியாத அளவுக்கு பேராபத்தில் சிக்கிக் கொள்வோம் என்று தெரிவிக்கிறார் அவர்.

ரஷ்ய விஞ்ஞானி எச்சரிக்கை “கடந்த பத்தாண்டுகளில் பருவநிலை மாறுதல் காரணமாக நிலப்பகுதி வெப்பம் அதிகரித்ததால், மத்திய மற்றும் தென்இந்தியாவில் பருவ மழைப்பொழிவு அதிகரித்துள்ளது” என்கிறார் ரஷ்யாவின் அறிவியல் அகாடமியை சேர்ந்த பருவமழை நிபுணரும், பேராசிரியருமான எலேனா சரோவ்யத்கினா. பூமி தொழில்மயமாதல் காலத்திற்கு முன்பாக இருந்ததை விட இப்போது ஒரு டிகிரி அளவுக்கு சராசரி வெப்பநிலை அதிகரிப்பை சந்தித்துள்ளது. இந்த மாற்றத்திற்கே இவ்வளவு பெரிய பேரழிவுகளை உலகம் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

உலக வங்கி சொல்வது என்ன? உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையொன்றில் “சரியான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் வெப்ப உயர்வு மற்றும் மழைப்பொழிவில் உருவாகும் மாறுபாடு, இந்தியாவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி, அதன் உள்நாட்டு உற்பத்தியை (GDP) 2.8% சதவீதம் அளவுக்கு குறைத்து விடும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, 2050ஆம் ஆண்டுக்குள், இந்திய மக்கள் வாழ்க்கைத் தரம் இப்போதுள்ளதைவிட பாதியாக குறையும் வாய்ப்புள்ளது” என்று கடும் எச்சரிக்கையை தெரிவித்துள்ளது. 196 நாடுகள் ஏற்றுக்கொண்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக வெப்பமயமாதலை, 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

முடிந்தால் 1.5 டிகிரி செல்சியசுக்கும் கீழே வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறது. ஆனால் தற்போதுள்ள நிலையில் 3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பமயமாதலின் உயர்வு உள்ளது. கடும் வெயில், கன மழை “இதன் காரணமாக மழைக்காலம் மிக அதிக மழைப்பொழிவை சந்திக்கும் என்றும் கோடை காலம் மிக அதிகமான வெப்பத்தை சந்திக்கும்” என்று எச்சரிக்கிறார் கிரா வின்கே. ஏற்கனவே நமது வழக்கமான கணிப்பு முறைகளை கொண்டு, இந்திய மழைக்காலத்தை சரியாக கணிக்க முடியாத நிலை உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மனிதர்களால் ஏற்படும் கார்பன் மாசு இப்படியே தொடர்ந்தால் வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் வாழ்வதற்கு முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படும். கோடையில் ஏற்படும், கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று இந்த நிலைக்கு மக்களை தள்ளி விடும் என்கிறது ஆய்வுகள். கங்கை பிரம்மபுத்திரா பாசன பகுதிகளை உள்ளடக்கிய தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகள், அழிவை சந்திக்க வாய்ப்புள்ளது. கடற்கரையோர நகரங்களும், உலக வெப்பமயமாதலால் பாதிப்பை சந்திக்கப்போகின்றன. பனிப் பாறைகள் உருகுவதன் காரணமாக, கடல் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்தப்படி உள்ளது.

இது கடலோர நகரங்களுக்கான அபாய எச்சரிக்கை என்கிறது இந்த ஆய்வுகள். பஞ்சமும், வெள்ளமும் சகஜமாகும் இதையேதான் கிறிஸ்டியன் எய்ட் அமைப்பும் கூறுகிறது. இந்த அமைப்பின் பருவநிலை மாற்றத்துக்கான உலகளாவிய தலைவராக உள்ள டாக்டர் கேட் கிராமர் கூறுகையில், இந்தியா உட்பட தெற்காசிய பிராந்தியத்தில், கேரளாவில் தற்போது நாம் பார்த்தது போன்ற மிகப்பெரிய வெள்ளப்பெருக்குகளை, சந்திக்க நேரிடும் என்பதே அறிவியல் நமக்கு உணர்த்தும் பாடமாகும். வெப்பம் 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்ல வாய்ப்புள்ளது. இதனால் குளிர்காலத்தில் மழைப்பொழிவு என்பது இந்தியாவில் மிக அரிதாகி விடும். இதன் காரணமாக கோடைகாலத்தில் கடும் பஞ்சம் தலைவிரித்தாடும்.

மழைக்காலத்தின்போது பெரு வெள்ளம் ஏற்படும். கேரளாவில் நடந்தது போன்ற நிகழ்வுகள் நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி. எந்த அளவுக்கு வெப்பமயமாதல் பிரச்சினை பெரிதாகிவிட்டது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து உள்ளனர் என்பதை நாம் கண்ணெதிரே பார்க்கிறோம். இதன் பிறகும் கூட நாம் மாசுக்களை குறைக்காவிட்டால், இதுபோன்ற பேரழிவுகளை அடிக்கடி நாம் பார்க்க வேண்டி வரும் என்கிறார் அவர்.

மீட்பு பணிகள் கிறிஸ்டியன் எய்ட் அமைப்பு, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவு வசதி, கொசு வலை, சோப்பு உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள், தார்ப்பாய், கயிறு போன்ற இருப்பிடம் அமைக்க தேவையான வசதிகளை இந்த அமைப்பு செய்து கொடுப்பதற்காக நிதி திரட்டி வருகிறது. முதல் கட்டமாக, கேரளாவில், அதிக பாதிப்புக்கு உள்ளான, வயநாடு மாவட்டம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மக்களுக்கு உதவி செய்ய இந்த அமைப்பு முடிவு செய்து களமிறங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*