;
Athirady Tamil News

பா.ஜனதா தலைவர்களை விஜய் மல்லையா சந்தித்தார் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

0

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்தில் தலைமறைவாக வசித்து வருகிறார். அவர் மீது, ‘தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

ஆனால் லண்டன் கோர்ட்டில் நடைபெறும் நாடு கடத்தக்கோரும் வழக்கின் விசாரணையில் அவர் பங்கேற்பதால், மும்பை கோர்ட்டில் நேரில் ஆஜராகமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக சட்ட பிரதிநிதி ஒருவர் ஆஜராவார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு முன் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்தினருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இது தொடர்பாக கூறியதாவது:-

இந்திய வங்கிகளை மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கும் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் மோடி அரசு கருணையுடன் நடந்துகொள்கிறது. இந்திய சிறைகள் சரியில்லை என மல்லையா கூறியதால், அவருக்காக சிறப்பு ஜெயில் ஏற்படுத்தப்படுகிறது. இதை ஏற்க முடியாது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும்.

விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேறும் முன் பா.ஜனதா மூத்த தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்களின் பெயரை வெளியிடமாட்டேன்.

மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் குறித்த அழகான சுவரொட்டிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த ரெயில் டிக்கெட் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகம். நாளொன்றுக்கு 5 ஆயிரம் மக்களுக்காக ரூ.1½ லட்சம் கோடி என்பது தேவையற்ற முதலீடு.

இந்த திட்டத்தை பற்றி பேசுவதில் மோடி அரசு காட்டும் ஆர்வத்தை, அதை செய்து முடிப்பதில் காட்டவில்லை. வேகமெடுக்காத இந்த திட்டம் வெறும் எண்ணம் மட்டும்தான். அதில் உண்மை இல்லை.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

பின்னர் மேற்கு லண்டனில் இந்திய சர்வதேச காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை என கூறிவரும் பிரதமர் மோடி, இதன் மூலம் காங்கிரசை அல்ல, நாட்டு மக்களையே அவமதித்து வருகிறார். ஏனெனில் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை இந்தியா காட்டியிருக்கிறது. இந்திய மக்கள் இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சி உதவியிருக்கிறது.

அதேநேரம் தற்போது தலித்துகள், விவசாயிகள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் மற்றும் இந்திய ஏழைகள், தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கிறார்கள். இதைக் கேட்டால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தலித் வன்கொடுமை சட்டம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

நாட்டில் யாரும் எதையும் பெறவில்லை. ஆனால் அம்பானி மட்டுமே அனைத்தும் பெற்று வருகிறார். இந்த மனிதர் ரூ.45 ஆயிரம் கோடி கடன் பெற்று இருக்கிறார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை, ஒரு தொழில் அதிபரின் வளர்ச்சிக்காக பா.ஜனதா அரசு கூடுதல் தொகைக்கு அதிகரித்து இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் கமிஷன், ரிசர்வ் வங்கி போன்ற நாட்டின் தூண்கள் அனைத்தும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. சீனா நாளொன்றுக்கு 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியா வெறும் 450 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரும் பிரச்சினை ஆகும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

முன்னதாக இந்த கூட்ட அரங்கிற்கு ராகுல் காந்தி வருவதற்கு முன் அங்கு வந்த ‘காலிஸ்தான்’ அமைப்பு ஆதரவாளர்கள் சிலர் ‘காலிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கூட்டத்தினர் சிலரும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*