;
Athirady Tamil News

யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு கைதானவர் தொடர்பாக விசாரணை..!!

0

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் பின்புலத்திலிருக்கும் முக்கிய சூத்திரதாரியான பெண் உத்தியோகத்தர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டார்.

“வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கின் முறைப்பாட்டாளருக்கு மின்னஞ்சல் ஊடாக மிரட்டல் விடுக்கப்படுகிறது. அரசியல்வாதி மற்றும் ஊடகவியலாளருக்கு எதிரான வழக்கை மீளப்பெறவிடின், மறியலுக்குத் தள்ளப்படுவீர் என மின்னஞ்சல் ஊடாக அச்சுறுத்தப்படுகிறது.

இவ்வாறான அச்சுறுத்தல் இந்த வழக்கின் 2 சந்தேகநபர்களும் கடந்த 23ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட தினத்திலிருந்து தொடர்ச்சியாக விடுக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தலின் பின்னணியில் வெளிவிவகார அமைச்சின் பெண் உத்தியோகத்தரே உள்ளார்” என்று முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி திருமதி சிவபாதம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.

“இந்த வழக்கின் முறைப்பாட்டாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், யாருடைய மின்னஞ்சல் ஊடாக வந்துள்ளது உள்பட பின்னணி தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

அரச துறையில் இடம்பெற்றுள்ள இந்த மோசடிகள் தொடர்பிலும் முக்கிய சூத்திரதாரியான பெண் குறித்தும் முழுமையான விசாரணையை பொலிஸார் முன்னெடுக்கவேண்டும்” என்று மல்லாகம் நீதிவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

சுவிஸ் நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பெண் உள்பட மூவரின் அறிமுகத்தின் ஊடாக 7 இலட்சம் ரூபா பணம் பெறப்பட்டது.

அந்தப் பணம் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஆவணங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி சேவை நிறுவன அலுவலகத்தின் பணியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த இளைஞனின் விண்ணப்பத்துக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. பணம் மற்றும் ஆவணங்கள் பெற்றவர்களையும் அந்த இளைஞனால் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கினார். முறைப்பாட்டில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கம், அந்த இளைஞனால் ஆவணங்கள் கையளிக்கப்பட்ட ஊடகவியலாளருடையது என பொலிஸார் கண்டறிந்தனர். அதனால் ஊடகவியலாளரை பொலிஸார் கைது செய்யதனர்.

அத்துடன், வங்கிக் கணக்கிலக்கத்தின் அடிப்படையில் அரசியல்வாதி கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட இளைஞன் வைப்புச் செய்த வங்கிக் கிளையின் அமைவிடத்தின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் கடந்த வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (27) திங்கட்கிழமை வரை விளக்கமறியல் வைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மல்லாகம் மாவட்ட நீதிபதியும் நீதிவானுமான ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வை.சுபாஸ்கரன், சந்தேகநபர்களுக்குப் பிணை கோரி மன்றில் நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

“சந்தேகநபர்கள் இருவரும் மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். ஆனால் அவர்களால் பெறப்பட்ட பணம் நேரடியாக ரூபினி என்ற பெண்ணுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்தான் முறைப்பாட்டாளருடன் தொடர்புகொண்டு சந்தேகநபர்களிடம் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

எனவே முறைப்பாட்டாளருக்கு செலுத்தவேண்டிய 7 இலட்சம் ரூபா பணத்தையும் ரூபினி என்ற பெண்ணிடம் பெற்று வழங்குவதற்கு சந்தேகநபர்களுக்கு நீதிமன்று அவகாசம் வழங்கவேண்டும்.
முறைப்பாட்டாளருக்கு இன்றைய தினம் 50 ஆயிரம் ரூபா பணத்தை சந்தேகநபர்கள் வழங்குவர். மிகுதி 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தையும் ரூபினியிடம் பெற்று வழங்க சந்தேகநபர்களுக்கு அவகாசம் தந்து அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சட்டத்தரணி வை.சுபாஸ்கரன் மன்றிடம் சமர்ப்பணம் செய்தார்.

அத்துடன், ரூபினி தொடர்பான விசாரணைகளுக்கு அவர் தொடர்பான முழுமையான விவரங்களையும் வழங்பி சந்தேகநபர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் ” என்றும் அவர் மன்றுரைத்தார்.
“முறைப்பாட்டாளருடன் தொடர்பு கொண்ட பெண் தாரணி, ரூபினி என பல பெயர்களையும் கைபேசி இலக்கங்களையும் பயன்படுத்தியுள்ளார்” என்று முறைப்பாட்டாளரின் சட்டத்தரணி மன்றுரைத்தார்.

“சந்தேகநபர்கள், முறைப்பாட்டாளருக்கு இன்றைய தினம் வழங்கும் 50 ஆயிரம் ரூபா பணத்தை மன்று அனுமதிக்கிறது. மிகுதி 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை வரும் ஒக்டோபர் 29ஆம் திகதியோ அதற்கு முன்னதாக வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் சந்தேகநபர்களுக்கு கட்டளையிடப்படுகிறது.

சந்தேகநபர்கள் முழுத் தொகையையும் முறைப்பாட்டாளருக்கு குறித்த தவணையின் போது வழங்காவிடின் அவர்களின் பிணை அனுமதி நீக்கப்பட்டு மீளவும் விளக்கமறியலில் வைக்கப்படுவர்” என்று நீதிவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கட்டளை வழங்கினார்.
வழக்கு வரும் ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இருவரும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 3 =

*