தமிழ் மக்களின் பெரும்பான்மையை குறைவடைய செய்து வேறு இனத்தவர்களை பெரும்பான்மையாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது..!!

தமிழ் மக்களின் பெரும்பான்மையை அந்தந்த தாயக பிரதேசத்தில் குறைவடைய செய்து அதற்கு பதிலாக வேறு இனத்தவர்களை பெரும்பான்மையாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது
தமிழ் மக்களின் பெரும்பான்மையை அந்தந்த தாயக பிரதேசத்தில் குறைவடைய செய்து அதற்கு பதிலாக வேறு இனத்தவர்களை பெரும்பான்மையாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது
தமிழ் மக்களின் பெரும்பான்மையை அந்தந்த தாயக பிரதேசத்தில் குறைவடைய செய்து அதற்கு பதிலாக வேறு இனத்தவர்களை பெரும்பான்மையாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் சம்பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மன்றத்தினர் தெரிவித்திருந்தனர்.
இன்று (27.08) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மன்றத்தினுடைய வடக்கிற்கான இணைப்பாளரும் வவுனியா மாவட்டத்திற்கான இணைப்பாளருமான வே.சுப்பிரமணியம் ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
மகாவலி திட்டத்தின் விரிவாக்கமானது அனுராதபுர மாவட்டம் பதவியா குளத்தில் இருந்து முல்லைத்தீவு ஊடாக வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவை கனகராயனகளத்தின் ஊடாக கொண்டு செல்லத்திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நாம் மிகவும் வரவேற்கும் திட்டமாகும்.
அரசாங்கம் 30 வருடத்திட்டமாவும் 77 களில் அரசியல் மாற்றத்தின் பின் 5 வருடத்திட்டமாக மகாவலி திட்டத்தினை அரசு கொண்ட வந்தபோதிலும் அது வடக்கு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு திட்டங்களை கொண்டிருக்கவில்லை.
எமது அரசியல் தலைவர்களும் ஆன்மீகத்தலைவர்களும் ,சமூகத்தலைவர்களும் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்துக்கொண்டு வந்திருந்தனர். தற்போது இந்த மகாவலித்திட்டத்தினை வடக்குக்கு திருப்பும் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இதற்கு பல்வேறு மட்டங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்ற போதும் இதனை பல்வேறு மட்டங்களும் வேண்டாம் என்கின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. அதற்கு காரணம் அதன் பின்னணி தொடர்பில் சந்தேக கண் கொண்டு பார்க்கின்ற நிலைமை இலங்கையில் உள்ளது. இது குறிப்பாக வடக்கு மக்கள் மத்தியிலும், முல்லைத்தீவு மக்கள் மத்தியிலும் அதிகமாக காணப்படுகின்றது. தமிழ் முஸ்லீம், சிங்கள மக்கள் கலந்து வாழ்கின்ற ஒரு நிலைமையை நாம் வரவேற்கின்றவர்கள். இதற்கு வவுனியா மாவட்டம் நல்லதொரு உதாரணமாகும்.
ஆனால் சிங்கள மக்களோ, முஸ்லீம் மக்களோ எங்கள் பகுதிகளில் காணிகளை வாங்கி சகோதரத்துவமாக வாழ்வது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் அரசாங்கமே திட்டமிட்டு வேறு இன மக்களை தமிழ் இனத்தினுடைய பாரம்பரிய நிலங்களிலே குடியேற்றி அவர்கள் மூலமாக தமிழ் மக்களின் பெரும்பான்மையை அந்தந்த தாயக பிரதேசத்தில் குறைவடைய செய்து அதற்கு பதிலாக வேறு இனத்தவர்களை பெரும்பான்மையாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் சம்பாதிப்பதை துளியும் நாம் விரும்பவில்லை என்பதுடன் ஒட்டுமொத்த தமிழர்களும் இதனை விரும்பவில்லை.
அத்தகைய திட்டத்தின் ஊடாக இங்கு வாழ்கின்ற மக்களுடைய பெரும்பான்மையை சீர் குலைப்பதானது எதிர்காலத்தில் அரசியல், பொருளாதார, சமூக பாதிப்புக்களை ஏற்கனவே பாரம்பரியமாக வாழ்கின்ற மக்களிற்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
உதாரணமாக இந்த பிரதேசத்தில் திட்டமிட்டு பெரும்பான்மையின மக்கள் குடியேற்றபடுவார்களே ஆனால் எங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திலும், மாகாணசபையிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் நிச்சயமாக குறைக்கப்படும்.
இது அரசியல் ரீதியாக எமக்கேற்படும் தாக்கமாகும். பொருளாதார ரீதியாகவும் எமது பாரம்பரிய நிலங்களும், பாரம்பரிய வளங்களும் வேறு பல்லின மக்களிற்கு பங்கிட்டு கொடுக்கும் போது நாங்கள் எங்களுடை காணிகளையும், வளங்களையும், மண்னையும் இழக்க நேரிடும்.
ஓர் இனத்திற்கு உள்ள தனித்துவமான கலாச்சார பாண்புகளை பேணி பாதுகாக்கும் அதே நேரத்தில் வேறு இனத்தை இங்கு கொண்டு வந்து பெரும்பான்மையாக புகுத்தப்படும் போது எங்களுடைய வணக்க ஸ்தலங்களையும், எங்களுடைய கலாச்சார பண்புகளையும், விழுமியங்களையும் நாங்கள் பறிகொடுக்க நேரிடும்.
எந்த வகையில் பார்த்தாலும் இவ்வாறு பாரம்பரிய தாயக மண்ணிலே குடியிருக்கின்ற பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கையை திட்டமிட்டு சிறுபான்மையினராக மாற்றுவது, அந்த மக்களுடைய அரசியல், பொருளாதார, சமூக வாழ்விலே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் துல்லியமாக நம்புகின்றோம்.
எனவே இதனை ஆரம்பத்திலேயே அரசியல்வாதிகளினதும், சமய. சமூக தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அபிலாசை இருக்கின்றது.
நாங்கள் சமூக நல்லிணக்கத்திற்காக போராடிக்கொண்டு இருக்கின்றோம். அதனை ஒரு புறம் கட்டியெழுப்பிக்கொண்டு வரும் நிலையில் இன்னொரு சாரார் வேறு சில முயற்சிகளால் அதனை இடிப்பதனை எம்மால் சகித்துக்கொள்ள முடியாமல் உள்ளது. ஆகவே இந்நடவடிக்கை சமூக நல்லிணக்கத்திற்கு ஒர் அச்சுறுத்தலாக இருக்கின்றமையினால் இதனை பல்வேறு தரப்பினருடைய கவனத்திற்கு கொண்டு செல்ல நிச்சயித்திருக்கின்றோம்.
இதனூடாக நாம் இவ் மறைமுக நிகழ்ச்சித்திட்டத்தினை அவதானித்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதை கூற விரும்புவதோடு, இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கூறுவதன் மூலமாக இந்நீரை வடக்கிற்கு கொண்டு வருவதை நிறுத்துங்கள் என்பது அல்ல. இதன் பின்னால் மறைமுகமாக செயற்படுகின்ற குடியேற்றங்களை நிறுத்துங்கள் என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
ஆகவே திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெறாது என்ற வாக்குறுதி இம்மக்களிற்கு அரசினால் வழங்கப்பட்டால் மாத்திரமே மக்கள் இச்செயற்பாட்டை ஏற்றுக்கொள்வார்கள். அத்துடன் நாளை இடம்பெறவுள்ள முல்லைத்தீவு போராட்டத்திலும் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா