;
Athirady Tamil News

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணத்தனவைக் கைது செய்ய உத்தரவு..!!

0

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் .கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரி நேவி சம்பத், நாட்டிலிருந்து தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணத்தனவைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அத்துடன், நேவி சம்பத்தின் விளக்கமறியல் வரும் 12ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

2008 மற்றும் 2009ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேவி சம்பத் தேடப்பட்டு வந்தார்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 தமிழ் மாணவர்களில் 6 பேர் சர்வதேசப் பாடசாலையில் கல்வி கற்றதுடன், 5 பேர் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தவர்கள்.

மாணவர்களின் குடும்பங்களிடம் பல இலட்சம் ரூபா கப்பம் பெறுவதற்காக 11 பேரும் கடத்தப்பட்டனர். எனினும் அவர்கள் அனைவரும் பின்னர் கொலை செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடனும் நேவி சம்பத்துக்கு தொடர்பு உண்டு எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

ஹெற்றியாராச்சி முதியான்சலாகே சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி என்ற முழுப் பெயரைக் கொண்ட நேவி சம்பத், கொழும்பு லோட்டஸ் வீதியில் போலி அடையாள அட்டையுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த மாத நடுப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.

நேவி சம்பத் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர், அவருக்கு 5 லட்சம் ரூபா பணத்தை கடற்படையின் உயர் அதிகாரி ஒருவர் வழங்கியுள்ளார். அந்தப் பணம் கடற்படையின் வங்கிக் கணக்கிலிருந்து மீளப்பெறப்பட்டுள்ளது” என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கடந்த தவணையில் சமர்ப்பணம் செய்தனர்.

அதனை ஆராய்ந்த நீதிவான் லங்கா ஜயரட்ன, “சந்தேகநபரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அனைத்துத் தகவல்களையும் இலங்கை வங்கி, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கவேண்டும்.

சந்தேகநபருக்கு போலியான தேசிய அடையாள அட்டை மற்றும் போலியான தகவல்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு வழங்கிய அதிகாரிகளைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபர் இன்று 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் நேவி சம்பத் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.

“நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதியும் முப்படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண பணம் வழங்கினார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிவான், முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ணவை கைது செய்ய உத்தரவிட்டார்.

மேலும் சந்தேகநபர் நேவி சம்பத்தின் விளக்கமறியலை வரும் 12ஆம் திகதிவரை நீடித்த மன்று, வழக்கு விசாரணையை அன்றுவரை ஒத்திவைத்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + one =

*