;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்து இளைஞர் மாநாடு – ஒரு கண்ணோட்டம்..!! (படங்கள்)

0

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கைக் கிளை முன்னெடுத்த ஐந்தாவது இந்து இளைஞர் மாநாடு கடந்த 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து பாரம்பரியக் கலை ஆற்றுகைகளுடன் ஆன்மீக ஊர்வலத்துடன் மாநாடு ஆரம்பமாகியது. ஊர்வலம் நீராவியடி இலங்கைவேந்தன் கலைக்கல்லூரி வரை நடைபெற்றது. ஊர்வலத்தின்போது நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் இறைவேடங்களைப் பூண்டவர்களாகப் பங்கேற்றனர். நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை மாணவர்கள் கரகம் எடுத்து ஆடி வந்தனர். வட்டுக்கோட்டை கலாபூசணம் நாகப்பு கிராமியக் கலைக்குழுவினர் மயிலாட்டம், குதிரையாட்டம், பொம்மலாட்டம் என பல்வேறு கலை ஆற்றுகைகளை மேற்கொண்டனர்.

இலங்கை இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த மகராஜ், யாழ். சின்மயாமிசன் வதிவிட ஆச்சாரியார் சுவாமி சிதாகாசானந்தா, கந்தர்மடம் வேதாந்தமடத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் வேதவித்தியாசாகர சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகிக்க நானூறுக்கும்; மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் பங்கேற்புடன் ஆன்மீக ஊர்வலம் இடம்பெற்றது.

காலை அமர்வு சிவயோகசுவாமிகள் அரங்காக பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா தலைமையில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சைந்தவி ஜனார்த்தனன் கடவுள் வாழ்த்து இசைத்தார். ஆசிரியர் சி.சிவகாந்தன் வரவேற்புரையாற்றினார். திருமுன்னிலை வகித்த சமயத்தலைவர்களுடன் முத்தமிழ்க் குருமணி கலாநிதி நா.சர்வேஸ்வரக் குருக்கள், பேராசிரியர் வ.மகேஸ்வரன் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். நிகழ்வின் அமைப்பாளர் இலக்கியக்கலைமணி சி.கணேஸ்குமார் அமைப்பாளர் உரை ஆற்றினார். யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சி.ரமணராஜா அரங்கத்திறப்புரை ஆற்றினார். சர்வதேச இந்து இளைஞர் பேரவை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என அமைப்பாளர் தனது உரையில் தெரிவித்தார்.

யோகக் கலை ஆசிரியர் சி.உமாசுதனின் நெறியாள்கையில் யாழ். யோக அரங்கம் இயக்கம் நிகழ்த்திய யோக அசைவுகள் சபையோரை ஆச்சரியத்தில் உறையவைத்தன. நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற பொருளில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இணுவில் மைந்தன் அ.அமிர்தசிந்துஜனின் இசைக்கச்சேரி இடம்பெற்றது. அதனை அடுத்து தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இந்துசமயம் நேற்று இன்று நாளை என்ற பொருளில் கருத்தாடுகளம் நடைபெற்றது. இதில் சி.சிவாம்சன், த.கருணாகரன், குண.சுதாகரன், மேழிக்குமரன் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.

மாலை அமர்வு சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அரங்காக இடம்பெற்றது. சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கைக் கிளை தலைவர் சிவ. கஜேந்திரகுமார் இந்த அரங்கிற்குத் தலைமை தாங்கினார். யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் வே.சதுசிகன் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அரங்கத்திறப்புரை ஆற்றினார். வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ், ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, பேராசிரியர் கி.விசாகரூபன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.

சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் தலைமையில் இந்து அறிவியல் என்ற பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது. சிவஸ்ரீ ஜெகதீஸ்வர மயூரக்குருக்கள், சிவஸ்ரீ தியாக. மயூரகிரிக்குருக்கள், ப.கதிர்தர்சினி, சி.மதீசன் ஆகியோர் இங்கு கருத்துரைகளை வழங்கினர்.

தொடர்ந்து சமய சமூகப் பணிகளால் ஏற்றம் பெறும் சான்றோர் மூவர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். மிருசுவில் வடக்கைச் சேர்ந்த புராண வித்தகர் வே.விநாசித்தம்பி, ஓய்வு பெற்ற அதிபர் ஐ.தயானந்தராஜா, ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாகம் ஆகியோர் கௌரவங்களைப் பெற்றனர்.

ஐந்தாவது மாநாட்டை அடையாளப்படுத்தும் வகையில் மாநாட்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி இ.ஜெயந்திரன் ஆற்றினார்.
தொடர்ந்து யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவியர் வழங்கிய திருப்புகழ் நடனமும் பிரியதர்ஷினி வாகீசனின் நர்த்தனஷேத்திரா நடனக்கலையகம் வழங்கிய கண்ணப்பர் குறவஞ்சி நாட்டிய நாடகமும் இடம்பெற்றன.

நிறைவு நிகழ்வாக தமிழ்நாடு இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் தலைமையில் மானுடத்துக்கு மகிழ்ச்சியும் ஏற்றமும் தருவதில் முந்தி நிற்பது பக்தியா? தொண்டா? என்ற பொருளில் பட்டிமண்டபம் இடம்பெற்றது. இதில் பேராசிரியர் தி.வேல்நம்பி, செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், விரிவுரையாளர் கு.பாலஷண்முகன், நீதிமன்றப் பதிவாளர் க.கஜரூபன், சட்டத்துறை மாணவர்களான சி.சிவஸ்கந்தசிறி, ஜீ.சஜீவன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்துகொண்டனர்.

காலை 9.30 மணியளவில் ஊர்வலத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் இரவு 9.30 மணியளவில் பட்டிமண்டபத்துடன் நிறைவுற்றன. நிகழ்வின் நிறைவில் யாழ். மாநாட்டிற்கு ஆதரவளித்து ஒழுங்கமைப்பில் உதவிய விரிவுரையாளர் ச.லலீசன், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் அமைப்பாளர் சி.கணேஸ்குமார் ஆகியோர் முத்தமிழ்க் குருமணி நா.சர்வேஸ்வரக் குருக்களால் கௌரவிக்கப்பட்டனர்.

மாநாட்டின் சமூகச் செயற்பாடுகளாக வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்கள் எழுவருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. அத்துடன் பங்கேற்ற மாணவர்கள் யாவருக்கும் கொம்பாஸ் பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

நல்லூர்க் கந்தனின் பதினோராம் திருவிழா, செல்வச்சந்நிதியில் தீர்த்தோற்சவம் என முக்கிய திருவிழாக்கள் இடம்பெற்ற சூழலில் பலநூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் விழா இடம்பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும் ; ஆச்சரியத்துக்குரியதும் ஆகும். இருப்பினும் பங்கேற்றோரில் கணிசமானோர்; இலவசப் போக்குவரத்து வசதி வழங்கி வெவ்வேறு ஊர்களில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதனால் நானூறுக்கும் மேற்பட்டோருடன் ஆரம்பித்த நிகழ்வுகள் நூற்றைம்பது வரையானோரின் பங்கேற்புடனேயே நிறைவுக்கு வந்தன.

மாநாடு என்ற நிலையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பாடுகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. உரைகளை ஆற்றியோருள் பெரும்பாலானவர்கள் நேரமுகாமைத்துவத்தைப் பேணாத நிலையையே அவதானிக்க முடிந்தது. இது இந்து சமயம் சார்ந்த நிகழ்வுகளுக்கான சாபக்கேடோ என்று சிலர் பேசிக்கொண்டனர். இதனால் முக்கிய நிகழ்வுகளுக்குரிய நேரங்களும் முடங்கிப்போனமையையும் சபையோர் அமைதி இழந்து இருந்தமையையும் காண முடிந்தது. நாட்டிய நாடகம், பட்டிமண்டபம் என்பன முத்தாய்ப்பான நிகழ்வுகளாக அமைந்திருந்தபோதிலும் நேரங்கடந்தமையால் அவற்றை கண்ணுற்றவர்களின் எண்ணிக்கை நூற்றைம்பதிற்குள் மட்டுப்பட்டிருந்தது.

இளையோருக்கான களம் என்ற வகையில் இளைஞர் மாநாடு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்பிற்குரியதே. ஆயினும் போதிய திட்டமிடலுடன் எதிர்கால மாநாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனால் பணவிரயம் நேரவிரயம் மனித உழைப்பு என்பவற்றிற்கான நேர்முகமான பிரதிபலனை அனுபவிக்க முடியும்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 17 =

*