ரஷியாவில் ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் தீப்பிடித்த விபத்தில் 18 பேர் காயம்..!!

ரஷியா நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து தென்பகுதியில் உள்ள சோச்சி நகருக்கு 164 பயணிகளுடன் வந்த போயிங் 737-800 ரக தனியார் விமானம் இன்று அதிகாலை சோச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.
அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் தரையிறங்கியதும் உரிய நேரத்தில் ‘பிரேக்’ போடுவதற்கு விமானி தவறிவிட்டதால் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற அந்த விமானத்தில் திடீரென்று தீப்பிடித்தது.
இதை கண்ட சோச்சி விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் பயத்தால் அலறித் துடித்தனர். உடனடியாக விரைந்துவந்த தீயணைப்பு வாகனங்கள் சுமார் பத்து நிமிடம் போராடி விமானத்தில் பற்றிய தீயை அணைத்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்த மீட்பு நடவடிக்கையின்போது தீயணைப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த விபத்தில் காயமடைந்த 18 பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தின் என்ஜின் மற்றும் இறக்கை பகுதி எரிந்திருக்கும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.