;
Athirady Tamil News

பிரதமர் மோடியை கொல்வதற்கு வெளிநாட்டில் சதிதிட்டம்..!!

0

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கோரோகான் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ‘‘எல்கார் பரி‌ஷத்’’ எனும் இடதுசாரி ஆதரவாளர்கள் மாநாடு நடந்தது.

அதில் பேசிய இடது சாரி தலைவர்கள் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டதால் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

மராட்டிய மாநில போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். 6 மாத விசாரணைக்கு பிறகு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக 5 இடதுசாரி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் டெல்லியைச் சேர்ந்த ரோனா வில்சன் என்பவரும் ஒருவர் ஆவார்.

அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது மின்னஞ்சல் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த மின்னஞ்சல் கடிதத்தில் ரோனா வில்சனுக்கும் மாவோயிஸ்டு தலைவர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் இடம் பெற்றிருந்தன.

அதில், பிரதமர் நரேந்திர மோடியை ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது போன்ற பாணியில் படுகொலை செய்ய வேண்டும் என்ற திடுக்கிடும் தகவல் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து பிரதமர் மோடியை கொல்ல மாவேஸ்டுகள் ரகசிய சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு இடது சாரி ஆர்வலர்கள் ஆதரவாக இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இடது சாரி ஆர்வலர்கள் மீதான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினார்கள். அப்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள இடதுசாரி ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து சதி திட்டங்கள் தீட்டி இருப்பது அம்பலமானது. அவர்களை மராட்டிய மாநில போலீசார் கடந்த சில மாதங்களாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவர்களது வெளி உலக தொடர்புகளும் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது இடது சாரி ஆர்வலர்கள், மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து நாசவேலைக்கு முயற்சி செய்வதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மராட்டிய மாநில போலீசார் 7 மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஐதராபாத்தை சேர்ந்த கவிஞர் வரவரராவ், வக்கீல் சுதாபரத்வாஜ், வெர்னன் கோன்சால்வஸ், அருண் பெரைரா, சமூக ஆர்வலர் கவுதம் நவலகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கைதான 5 பேரையும் 1 வாரம் வீட்டுக்காவலில் வைக்கும்படி அறிவுறுத்தியது.

அதன்படி கைதான 5 பேரும் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பரம்பீர்சிங் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கைதான 5 பேருக்கும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை ஆதாரங்களுடன் கூறினார். கைதான 5 பேரும் மாவோயிஸ்டுகளுடன் ஆயிரக்கணக்கான இ-மெயில் கடிதங்களை பரிமாறி இருப்பதை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-

மாவோயிஸ்டு தீவிரவாதிகளும் கைதான 5 பேரும் சேர்ந்து நாசவேலைக்கு திட்டமிட்டனர். மாவோயிஸ்டு தீவிரவாத தலைவன் பிரகாசுக்கு டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோனா வில்சன் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதில் அவர், ‘‘4 லட்சம் துப்பாக்கி குண்டுகளும், கிரனேடு லாஞ்சர்களும் வாங்க ரூ.8 கோடி தேவை’’ என்று கூறி உள்ளார்.

ரோனா வில்சன்

கைதான 5 பேர் வீடுகளில் இருந்து ஏராளமான கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்துள்ளோம். அந்த டிஸ்குகளில் ராக்கெட் லாஞ்சர் படங்களும், அதன் தொழில்நுட்ப தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் காஷ்மீர் தீவிரவாதிகளுடனும் தொடர்பு வைத்திருந்தனர்.

காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவது பற்றியும் பேசி உள்ளனர். நேபாளத்தில் இயங்கும் தீவிரவாத குழுக்களுடனும் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. நாடு முழுவதும் கல்லூரிகளில் இவர்கள் இடதுசாரி தீவிரவாதத்துக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளை செய்ததையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

மத்திய அரசை அகற்ற வேண்டும், பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என்பதுதான் இவர்களது இலக்காக இருந்துள்ளது. இதற்காக இவர்கள் நேபாளத்தில் உள்ள ஆயுத புரோக்கர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி இருந்தனர். ரஷியா மற்றும் சீனாவில் இருந்து ஏராளமான ஆயுதங்களை வாங்கி நேபாளம் வழியாக நாட்டுக்குள் கடத்தி வருவதற்கு திட்டமிட்டிருந்தனர்.

மாவோயிஸ்டு பயங்கரவாத தலைவன் சுதர்சன் மற்றும் மாவோயிஸ்டுகளின் மத்தியக்குழு உறுப்பினர்களுடன் கைதான 5 பேரும் ஆயுதத்தை பயன்படுத்துவது பற்றி பல தடவை பேசி உள்ளனர். அதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தங்களை வரவரராவ் முடிவு செய்துள்ளார். மிகப்பெரிய தாக்குதல் நடத்த அவர்கள் வெளிநாடுகளிலும் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்தியாவில் எங்கெங்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது பற்றி பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், மியான்மரிலும் சதிகாரர்கள் கூடி பேசியுள்ளனர்.

ஒரு கடிதத்தில், ‘‘2013-ம் ஆண்டுக்குப் பிறகு நாம் மிகப்பெரிய தாக்குதல் எதையும் நடத்தவில்லை. எனவே இந்தியாவில் முக்கிய நகரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளனர். அதற்கு முன்னோட்டமாகத்தான் பீமா கோரேகானில் கலவரத்தை நடத்தியுள்ளனர். அங்கு மாநாடு நடத்தியவர்களுக்கு இவர்கள் இரு தவணையாக தலா ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது?

இந்தியா ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது பற்றியும் இவர்கள் கடிதங்களில் தகவல்களை பரிமாறி உள்ளனர். காஷ்மீரில் இளைஞர்களை தூண்டிவிட்டும், பணம் கொடுத்தும் கல் வீசி தாக்க வன்முறையை தூண்டி விட்டது போன்று மற்ற மாநிலங்களிலும் கல் வீச்சு நடத்த கடிதங்களில் ஆலோசித்துள்ளனர்.

இந்தியாவில் வெடிகுண்டுகள் தயாரிப்பது பற்றியும் மாவோயிஸ்டுகளுடன் கைதான 5 பேரும் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு மராட்டிய மாநில டி.ஜி.பி. பரம்பீர் சிங் கூறினார். மராட்டிய போலீசார் கைதான 5 பேர் மீதும் ஏராளமான ஆதாரங்களை வெளியிட்டிருப்பதால் அவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்று தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − ten =

*