வித்தியா கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தின் அதிரடி முடிவு..!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை மீளப்பெறுவது தொடர்பான சட்ட மா அதிபரின் தீர்மானத்தை ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு உடனடியாக அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கிலிருந்து சந்தேகநபரை விடுவிப்பதற்கான தீர்மானத்தை சட்ட மா அதிபர் எடுத்திருப்பதாக அரச சட்டவாதியால் கடந்த தவணையின் போது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.
அது தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு அறிவித்து சந்தேகநபரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச சட்டவாதிக்கு அறிவுறுத்தல் வழங்கிய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சந்தேகநபர் சார்பான பிணை கோரிய சீராய்வு மனு மீதான விசாரணையை வரும் 10ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.
புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் பூபாலசிங்கம் இந்திரகுமார் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 11 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர் பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது. சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நிராகரித்தது.
இந்த நிலையில் பூபாலசிங்கம் இந்திரகுமார் சார்பில் அவரது மனைவி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
வறுமை காரணமாக மேல் நீதிமன்றில்வழக்குத் தாக்கல் செய்ய சட்டத்தரணி ஒருவரை நியமிக்க முடியாத நிலையில் இந்திரகுமாரின் குடும்பம் அவதியுற்றனர். எனினும் இளம் சட்டத்தரணி சிவலிங்கம் ரிஷிகேசன் இலவசமாக இந்திரகுமாருக்கு சீராய்வு மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சி.ரிஷிகேசனுடன் சட்டத்தரணி வி.திருக்குமரனும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்னிலையாகி இந்திரகுமார் சார்பான சீராய்வு மனுவுக்கு மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.
சீராய்வு மீதான விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே யாழ்ப்பாண மேல் நீதிமன்றால், அரச சட்டவாதிக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, வழக்கு விசாரணை குறுகிய கால எல்லையாக வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.