;
Athirady Tamil News

2 குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற பெண் சிக்கியது எப்படி? – பரபரப்பு வாக்குமூலம்..!!

0

குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் விஜய். இவரது மனைவி பெயர் அபிராமி. 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர்.

குறிஞ்சிப்பாடியை சேர்ந்த விஜய்க்கு தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதனால் குடும்பத்தோடு குன்றத்தூர் பகுதியில் குடியேறினர். அழகான மனைவி, அன்பான குழந்தைகள் என விஜயின் குடும்ப வாழ்க்கை சந்தோ‌ஷமாகவே சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்கு விஜய் மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று குடும்பத்தோடு சாப்பிட்டார். அப்போது அங்கு பணிபுரிந்த வாலிபர் சுந்தரத்தின் மீது அபிராமியின் காதல் பார்வை விழுந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

சில நாட்களுக்கு முன்னர் அபிராமி திடீரென காணாமல் போய்விட்டார். அவளை உறவினர்கள் தேடிக் கண்டுபிடித்து அறிவுரைகூறி கணவருடன் சேர்த்து வைத்தனர். அபிராமி-சுந்தரத்தின் கள்ளக்காதல் அப்பகுதி முழுவதுமே பரவத் தொடங்கியது. இதனால் விஜய் மனைவியை கண்டித்தார். இருப்பினும் அபிராமியால், சுந்தரத்துடனான கள்ளக்காதலை விட முடியவில்லை.

இந்தநிலையில் அபிராமியின் மனதில் விபரீத எண்ணம் தோன்றியது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தனது குழந்தைகளை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். ஆனால் எதையும் அபிராமி வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். நேற்று முன்தினம் விஜய்க்கு பிறந்த நாள். மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு மதியம் 12 மணியளவில் வேலைக்கு சென்றுவிட்டார்.

இதன்பிறகே அபிராமி கொடூர தாயாக மாறினார். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் 2 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கலந்த பாலை கொடுத்தார். எதுவும் அறியாத அப்பாவி குழந்தைகளும் தாய் கொடுத்த பாலை வாங்கிக் குடித்தனர். சிறிது நேரத்திலேயே வாயில் நுரைதள்ளி குழந்தைகள் அஜய், கார்னிகா இருவரும் துடிதுடித்து பலியானார்கள்.

2 குழந்தை களையும் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்த அபிராமி கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தனது மொபட்டை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் மதியம் வேலைக்கு சென்ற விஜய், வேலைப்பளு காரணமாக இரவில் வங்கியிலேயே தங்கிவிட்டார். நேற்று காலையில் அவர் வீட்டுக்கு வந்தபோதுதான் இது வெளியில் தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குன்றத்தூர் போலீசார் விரைந்து சென்று குழந்தைகளின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதி முழுவதும் இக்கொலை சம்பவம் காட்டுத் தீயாக பரவியது. இதனால் கொலை நடந்த வீட்டு முன்பு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவரது மொபட் கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவர் வெளியூருக்கு தப்பி சென்றது தெரிய வந்தது.

இதற்கிடையே அபிராமியின் கள்ளக்காதலனான சுந்தரம் போலீசில் சிக்கினார். அவனை வைத்து அபிராமியை பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி சுந்தரத்தை உடன் வைத்துக் கொண்டே போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அபிராமியிடம் சுந்தரத்தை போனில் பேசவைத்து எங்கு இருக்கிறாய்? என்று கேட்க சொன்னார்கள். அப்போது அபிராமி திருவனந்தபுரத்தில் இருப்பதாக தெரிவித்தார். உடனே போலீசார் நாகர்கோவிலுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்றதும் சுந்தரம், அபிராமியிடம் போனில் பேசினார். நான் நாகர்கோவில் வந்துவிட்டேன். நீயும் வந்துவிடு என்று அழைத்தார். இதனை நம்பி நாகர்கோவில் வந்தபோது தான் அபிராமியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். நேற்று இரவு போலீசில் சிக்கிய அபிராமி, இன்று காலை 10 மணி அளவில் சுந்தரத்துடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

அபிராமி, சுந்தரம் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் 2 குழந்தைகளையும் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியது பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

இதற்கு அவர்கள் அளித்த பதில்களை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். 2 பேரையும் இன்று நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே குழந்தைகள் அஜய், கார்னிகா இருவரது உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தந்தை விஜயிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று இரவே குழந்தைகள் உடலும் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன. குழந்தைகளின் உடல் ஒப்படைக்கப்பட்ட போது அரசு ஆஸ்பத்திரியில் கூடியிருந்த உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

கொலையாளி அபிராமி மீதும், கொலைக்கு உடந்தையாக இருந்த சுந்தரம் மீதும் குழந்தைகளின் உறவினர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

2 குழந்தைகளை கொலை செய்த அபிராமி, போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

8 ஆண்டுகளுக்கு முன்பு நானும், விஜயும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடிபுகுந்த பின்னர் அதே பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு குடும்பத்தோடு சென்று வந்துள்ளோம். அப்போது அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதன் பின்னர்தான் அடிக்கடி பிரியாணி வாங்கு வதற்காக சென்றேன். இதனால் எங்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. கள்ளக்காதல் காரணமாக குடும்பத்தை விட்டு விலகி விட நினைத்தேன். இதற்கு சுந்தரமும் உடன்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கணவருடன் கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற நான், சுந்தரத்தின் வீட்டில் சென்று தங்கினேன். இதன் பின்னர் எனக்கும், கணவர் விஜய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

விஜயோடு 8 ஆண்டு குடும்பம் நடத்தியபோதிலும் சுந்தரத்துடன் 2 மாத கள்ளக் காதலை என்னால் விட முடியவில்லை. இதனால் இதற்கு என்ன வழி? என்று யோசித்தேன்.

அப்போது சுந்தரம், கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டு நாம் எந்த பிரச்சினையுமின்றி சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று கூறினார். இதற்கு நானும் ஒத்துக் கொண்டேன்.

கடந்த 30-ந்தேதியில் இருந்தே 2 நாட்களாக கணவர், குழந்தைகளை கொலை செய்ய திட்டம் போட்டேன். 30-ந்தேதி இரவிலேயே 3 பேருக்கும் வி‌ஷ மாத்திரைகளை கலந்த பாலை கொடுத்தேன். மறுநாள் காலையில் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் மறுநாள் (31-ந்தேதி) காலையில் கணவர் விஜயும், மகன் அஜயும் எழுந்து விட்டனர். மாத்திரையின் வீரியம் குறைவாக இருந்ததால் 2 பேரும் பிழைத்துக் கொண் டனர். ஆனால் மகள் கார்னிகா எழும்பவில்லை. அவள் 30-ந்தேதி இரவே உயிரிழந்திருப்பாள் என்று எண்ணுகிறேன்.

நேற்று முன்தினம் காலையில் கார்னிகா எழும்பாததால் அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டு வேலைக்கு செல்ல விஜய் சென்றார். நான், அதற்கு அனுமதிக்கவில்லை. அசந்து தூங்குகிறாள் நீங்கள் படுக்கை அறைக்கு சென்றால் விழித்துக் கொள்வாள் என்றேன். விஜயும் இதனை நம்பி வேலைக்கு சென்று விட்டார்.

இதன் பின்னர் மறுநாள் மீண்டும் மகன் அஜய்க்கு வி‌ஷம் கலந்த பாலை கொடுத்தேன். அவன் மயங்கிய பின்னர் கழுத்தை நெரித்து கொன் றேன்.

கொலை செய்துவிட்டு வெளியூருக்கு தப்பிச் செல்வதற்கு என்னிடம் பணம் இல்லை. இதனால் தாலி செயினை அடகு வைத்து பணத்தை தயார் செய்து வைத்திருந்தேன். இந்த பணத்துடன்தான் நாகர்கோவில் சென்றேன்.

இவ்வாறு அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தைகள் கொலை வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும், கள்ளக் காதலன் சுந்தரம் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப் பட்டுள்ளனர். சுந்தரத்துக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*