;
Athirady Tamil News

இராணுவத்தினர் சிகை அலங்கார வேலை செய்வதால் பாதிக்கப்படும் வவுனியா..!!

0

இராணுவத்தினர் சிகை அலங்கார வேலை செய்வதால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கம் குற்றச்சாட்டு

இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துவதால் தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா, பம்பைமடு பகுதியில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றை அமைத்து சிகை அலங்கார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிறு மற்றும் விசேட விடுமுறை தினங்களிலும் குறித்த சிகை அலங்கரிப்பு நிலையத்தை திறந்து வேலை செய்வதுடன், அங்கு சென்று சிகை அலங்காரம் செய்பவர்களிடம் குறைந்தளவிலான கட்டணங்களையும் அறவிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக எமது சங்க கட்டுப்பாடுகளுக்கு அமைவாக செயற்படும் எமது சங்கத்தின் கீழ உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடத்துவோர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களது நாளாந்த வாழ்வாதாரம் கூட பாதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தால் நடத்தப்படும் சிகை அலங்கரிப்பு நிலையங்களை மூட வேண்டும் என வடமாகாணம் தழுவிய ரீதியில் அழுத்தம் கொடுத்திருந்த நிலையில், சில மாதங்கள் குறித்த இராணுவத்தின் சிகை அலங்கரிப்பு நிலையம் மூடப்பட்டு இராணுவத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு பொது மக்களுக்கான வேலைகளையும் செய்து வருகின்றனர். இதனால் போரால் பாதிக்கப்பட்ட நிலையில் குறைந்தளவிலான முதலீட்டில் சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடத்தி வரும் பலர் பாதிப்படைந்துள்ளனர். எனவே வடமாகாண சபை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி எமக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவதுடன் எம்மை நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + fourteen =

*