;
Athirady Tamil News

ஜனாதிபதி தலைமையில் நாளை மகாவலி விளையாட்டு விழா ஆரம்பம்..!!

0

மகாவலி வலய விவசாயக் குடும்பங்களின் பிள்ளைகளது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேசம் வரை கொண்டு செல்லும் நோக்கில் வருடாந்தம் நடாத்தப்படும் இவ் விழாவானது நாளை ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.மகாவலி விளையாட்டு விழா 30ஆவது முறையாகவும் இம் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் எம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

“தன்னிறைவுமிக்க யுகம் – மகாவலி இளம் சமுதாயத்திற்கு உயரிய மதிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் இவ்வருட விளையாட்டு விழாவில், 10 மகாவலி வலயங்களையும் சேர்ந்த 3,000 விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மகாவலி விளையாட்டு விழாவின் தீபத்தினை ஏந்திய வாகனப் பேரணி நாளை முற்பகல் 06 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டி வரை 111 கிலோ மீட்டர்கள் 111 மகாவலி கிராமங்கள் ஊடாக பயணிக்கும் இப் பயணத்தின்போது விளைநிலங்களை மேலும் பசுமைப்படுத்தும் நோக்குடன் 111,111 பலா மரக் கன்றுகளை வழங்கும் மரநடுகை செயற்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

தேசிய பொருளாதாரத்திற்கு மகாவலி அபிவிருத்தி திட்டம் அளித்துவரும் பங்களிப்பு தொடர்ப்பான புரிந்துணர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில்,ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வ மத அனுஷ்டானங்களுடன், 10 நாட்களாக பயணிக்கவுள்ள இந்த வாகனப் பேரணியில் 100 துவிச்சக்கர மற்றும் மோட்டார் சைக்கிள்களும் மகாவலி தீபம் ஏந்திய ஐந்து வீர, வீராங்கனைகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை விளையாட்டு துறைக்கு சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு அதிகாரிகள் மற்றும் நடுவர்களை உருவாக்கியுள்ள நாட்டின் பழைமை வாய்ந்த விளையாட்டு விழாவாக இது கருதப்படுகிறது.

32 வருடங்களுக்கு முன் 1986ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டு விழா 7 வலயங்களை உள்ளடக்கியதாக இருந்ததுடன், தற்போது 10 வலயங்கள் வரை அது விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

1986 இல் கல்னேவே நகரில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விளையாட்டு விழா 2012ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இடம்பெற்றதுடன், 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெறவில்லை.

புதிய அரசு பதவியேற்றதன் பின் 2015ஆம் ஆண்டு முதல் மீண்டும் இவ் விளையாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய மகாவலி வலய மாணவ, மாணவிகளின் திறமைகள் சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் வருடந்தோறும் இவ் விளையாட்டு விழா விமரிசையாக ஏற்பாடு செய்யப்படுகின்றது.

அன்று முதல் இன்று வரை சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த பல விளையாட்டு வீர வீராங்கனைகள் மகாவலி அரங்கில் உருவாகியுள்ளனர்.

இலங்கையில் உருவான மிகச் சிறந்த ஓட்ட வீராங்கனைகளுள் ஒருவரான ஸ்ரீயாணி குலவங்ச, மகாவலி எச் வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றிபெற்றதுடன், அதன் பின்னர் ஆசிய போட்டிகள் வரை பதக்கங்களை வென்றுள்ளார்.

இலங்கை துவிச்சக்கர வண்டி ஓட்ட வீராங்கனையான யூ.டீ. ஸ்ரீயலதா, இலங்கை கரப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ரேணுகா அபேகுணவர்தன யாப்பா மற்றும் இலங்கை கபடி ஆண்கள் அணியின் முன்னாள் தலைவர் விமல் ரோஹண ஆகியோர் மகாவலி விளையாட்டு விழாவின் ஊடாக உருவாகிய விளையாட்டு வீரர்களுள் சிலராவர்.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய ஈட்டி எறிதல் வீரர் சுமேத ரணசிங்க விக்டோரியா வலயத்தை சேர்ந்தவர் என்பதோடு, அவர் மகாவலி வலயங்களில் சமீப காலத்தில் உருவான மிகச் சிறந்த விளையாட்டு வீரராவார்.

இவ்வாண்டு மகாவலி விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு பல விசேட நன்மைகள் காத்திருக்கின்றன. முதலாம் இடத்தை பெறும் மகாவலி வலயத்திற்கு உடற்பயிற்சி நிலையம் வழங்குதல், சிறந்த விளையாட்டு வீர,வீராங்கனைகளுக்கு மகாவலி காணியொன்றை வழங்குதல், விசேட திறமைகளை வெளிக்காட்டும் 10 வீர, வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்கான புலமை பரிசில்கள், தேர்ந்தெடுக்கப்படும் 20 விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தொழில்சார் கற்கைநெறிகள்,சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனையை உருவாக்கிய பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

விளையாட்டு விழாவின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், இலங்கை விமானப் படையினரின் பரசூட் வான வேடிக்கை மற்றும் மகாவலி விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்குபற்றும் விசேட நிகழ்வுகள் இந்நிறைவு விழாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*