வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் துரித விவசாய மீள் எழுச்சி திட்டங்களை அமுல்படுத்துவதற்கு தீர்மானம்..!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் துரித விவசாய மீள் எழுச்சி திட்டங்களை அமுல்படுத்துவதற்கு தீர்மானம்.
விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் வடமாகணத்தில் செய்யப்படவேண்டிய உடனடி விவசாய அபிவிருத்தி திட்டங்கள் பற்றி தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி காரணமாக பொதுவான விவாசய உற்பத்தி குறைவடைந்த போதிலும் சில போகச் செய்கைகள் சிறப்பாக அமைந்திருந்தது.விசேடமாக மிளகாய்,நிலக்கடலை,வெங்காயம்,மற்றும் மரக்கறி உற்பத்தி சிறப்பாக அமைந்துள்ள போதிலும் நெல் உற்பத்தியில் பின்னடைவு காணப்பட்டிருந்தது.வடமாகாணத்தில் தற்போது 1000 மேற்பட்ட சிறு குளங்கள் காணப்படுகின்றன. இந்த குளங்கள் கடந்த 50 வருடங்களாக எவ்விதமான புனரமைப்பு பணிகளும் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அவற்றை அபிவிருத்தி செய்து தருமாறும் கோரியுள்ளார்.
எதிர்வரும் வருடத்தில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து குளங்களும் புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வடமாகாணத்தில் நிலத்தடி நீர் இருப்பதனால் அங்குள்ள விவசாய கிணறுகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் விசேடமாக செய்கை பண்ணக்கூடிய கச்சான்,முந்திரிகை,மா,வெங்காயம்,உருளைக்கிழங்கு போன்றவற்றிற்கான விசேட உற்பத்தி வலையங்களை அமைப்பதெனவும் அதற்காக விவசாயிகளை ஊக்குவிப்பதெனவும் அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.மேலும் வடமாகாணத்தில் மேற்படி திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ரூபா 3000 மில்லியனை எதிர்வரும் 2019 வரவு செலவு திட்டத்தில் விஷேட ஒதுக்கீட்டினை பெற்று தருவதாகவும் குறிப்பிட்டார்.
2018 சிறு போகத்தில் கிழக்கு மாகாணத்தில் சிறந்த விளைச்சல் கிடைக்கப்பெற்றதாகவும் மேலும் ஒரு போக பயிர் செய்கை செய்கை பண்ண நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.