;
Athirady Tamil News

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்..!! (வீடியோ)

0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அரசியலமைப்பின் 157 (அ) பிரிவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக விஜயகலா மகேஸ்வரனுக்கு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தின் கீழ் கொண்டுவரப்படும் முதலாவது வழக்கு இது என்பதால், எந்தவொரு நடைமுறை முன்னுதாரணங்களும் இல்லை. அதனால் இந்த வழக்கில் புதிய நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தற்போது சாட்சியப்பதிவு நடைமுறைகள் இல்லை. எனவே சாட்சியங்களைப் பதிவு செய்து நெறிப்படுத்துவதற்கான நடைமுறைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்பாடு செய்யவேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் நீதிவான் நீதிமன்றிலும், அரசியலமைப்பின் 157 (அ) பிரிவை மீறியதாக மேன்முறையீட்டு நீதிமன்றிலும் என இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு சட்ட மா அதிபரி தீர்மானித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சர்வதேச உடன்படிக்கையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் மூன்றாவது குற்றச்சாட்டு முன்வைப்படவிருந்தது. எனினும் அதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அந்தத் தீர்மானம் கைவிடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைக் கோவை 120ஆம் பிரிவின் கீழ் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அடுத்த வாரம் வழக்குத் தொடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த அதிகாரி தெரிவித்ததாக சண்டே ரைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் குறித்த விஜயகலாவின் பேச்சால், ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சரி செய்ய நீதிமன்றத்தின் மூலம் இந்த விவகாரத்தை கையாள அரசு தீர்மானித்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 157 (அ) பிரிவு

(1) இலங்கையின் ஆள்புலக்குள்ளாகத் தனி அரசொன்று அமைக்கப்படுவதற்கு ஆள் எவரும் இலங்கைக்குள் அல்லது இலங்கைக்கு வெளியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளித்தால், ஆக்கமளித்தல், ஊக்கமளித்தல், ஊக்குவித்தல், நிதியுதவுதல் அல்லது பரிந்துரைத்தல் ஆகாது.

(2) அரசியற் கட்சி அல்லது வேறு கழகம் அல்லது ஒருங்கமைப்பு எதுவும் இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாக தனி அரசொன்றை அமைத்தலை தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டிருக்கல் ஆகாது.

முதலாம் பந்தியின் ஏற்பாடுகளை மீறிச் செயற்படுகின்ற ஆளெவரும் குற்றப்பகர்வின் மீதும் சட்டத்தால் விதந்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய நடைமுறைகளுக்கு இணங்கவும் ஆனவிளக்கத்தின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றால் குற்றத்தீர்ப்பளிக்கப்படுகின்றதன் மேல்,

7 ஆண்டுகளுக்கு மேற்படாத ஒரு காலப்பகுதிக்கு குடியியல் தகுதியீனத்துக்கு உட்பட்டவராதல் வேண்டும்.
அத்தகைய ஆளினதும் அவரது குடும்பத்தினதும் சீவனத்திற்கு அவசியமாக உள்ளவை என அத்தகைய நீதிமன்றின் கட்டளை ஒன்றினால் தீர்மானிக்கப்படுகின்ற ஆதனங்கள் தவிர்ந்த அவரது அசைவற்றதும் அசைவுள்ளதுமான ஆதனங்களை இழத்தல் வேண்டும்.

7 ஆண்டுகளுக்கு மேற்படாத அத்தகைய காலப்பகுதிக்கு குடியியல் உரிமைகளுக்கு உரித்துடையவராதலாகாது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பின் அந்தப் பதவியிலிருந்து அவரை நீக்குதல்.

மேற்படி வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றவாளியென தீர்மானிக்கப்பட்டால் அவரது பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதலாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சற்றுமுன்னர் விஜயகலா மகேஸ்வரனை தொடர்பு கொண்டு வினவியது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் வழக்கு தாக்கல் முயற்சியை தான் அறிந்திருப்பதாகவும், தனது சட்டத்தரணிகளுடன் தீவிரமாக ஆலோசனையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இப்போதைய நிலையில் தன்னால் மேலதிகமாக எதையும் குறிப்பிட முடியாதென்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும்- விஜயகலா..!! (வீடியோ)

வாய் தவறி அவ்வாறு சொல்லி விட்டேன்: ஊடகவியலாளர் முன் அழுதார் விஜயகலா..!!

வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி: விஜயகலா மகேஸ்வரனின் உதவியாளரும், ஊடகவியலாளரும் கைது..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 14 =

*