கூட்டணி கட்சிகள் விருப்பப்பட்டால் நான் பிரதமர் ஆக தயார் – ராகுல் காந்தி..!!

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் ஏற்பாடு செய்த தலைவர்கள் சந்திப்பு எனும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, அயல்நாட்டு கொள்கை உள்பட பல்வேறு விவகாரங்களை அவர் விமர்சனம் செய்தார்.
மேலும், கூட்டணி கட்சிகள் விரும்பினால் தான் பிரதமராக தயார் என அவரது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். அதில் இரண்டு செயல்முறைகள் உள்ளன. முதலாவது, மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும்.
இரண்டாவது, தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் கலந்தாலோசித்து பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேலை கூட்டணி கட்சிகள் விருப்பப்பட்டால் நான் பிரதமர் ஆக தயார் என அவர் தெரிவித்தார்.
இப்போதெல்லாம் அதிகமாக கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது ஏன் ? என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நான் கோவில், குருத்வாரா மற்றும் மசூதிகளுக்கு எப்போதும் சென்று வழிபாடு செய்து வருகிறேன். ஆனால், இதை பாஜக விரும்பவில்லை. அவர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். அதனால், கோவில்களுக்கு செல்வதை விமர்சித்து திடீர் விளம்பரப்படுத்திவிட்டனர் என கூறினார்.
நான் விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன், ஆனால், பிரதமர் மோடியால் அவ்வாறு ஏன் இருக்க முடிவதில்லை ? என அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தன்னுடைய தலைமைக்குமான வித்தியாசம் குறித்து பேசிய ராகுல் காந்தி, சோனியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும், பொருமையின்றி இருந்த தனக்கு பொருமையை கையாள்வது குறித்து சோனியா பயிற்றுவித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், சோனியா எந்த முடிவுகளையும் தைரியமாக எடுத்ததாகவும், தான் நன்றாக சிந்தித்து முடிவுகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.