;
Athirady Tamil News

இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்கு போலி எப்.ஐ.ஆர் தயாரித்த ஐகோர்ட்டு ஊழியர்-வாலிபர் கைது..!!

0

இன்சூரன்ஸ் தொகை கேட்டு வக்கீல்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் ஆவணங்களின் உண்மை தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீதிபதிகள் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிப்பார்கள். இதன் அடிப்படையில் விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை அளிக்கப்படும்.

விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர் விபத்து இழப்பீடு தொகையை பெறுவதற்கு எப்.ஐ.ஆர். முக்கிய ஆவணமாக உள்ளது. போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்து நடந்தது எப்படி? என்பது பற்றி விரிவாக முதல் தகவல் அறிக்கையை தயாரிப்பார்கள்.

இதனை வைத்தே இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். சமீப காலமாக இது போன்ற இழப்பீடுகளை பெறுவதற்கு போலீசுக்கு தெரியாமல் போலியாக எப்.ஐ.ஆர்.கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சி.பி.சி. ஐ.டி போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில் தங்களது நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பெறுவதற்காக போலியான முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி போலி எப்.ஐ.ஆர். விவகாரம் குறித்து சி.பி.ஐ.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு நீதிபதி டி.என்.பிரகாஷ் உத்தர விட்டார்.

இதையடுத்து சென்னை சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது மேற்பார்வையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த விசாரணையில் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவரிடம் கிளர்க்காக பணிபுரிந்து வரும் ஸ்டீபன் மற்றும் பட்டதாரி வாலிபரான மோகன் ஆகியோர் போலி எப்.ஐ.ஆர்.களை தயாரித்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஸ்டீபன் சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர். மோகன் உள்ளகரத்தை சேர்ந்தவர். பி.பி.ஏ. முடித்துள்ள இவருக்கு கம்ப்யூட்டரில் அனைத்து வி‌ஷயங்களும் அத்துபடியாகும். இதனை மூளையாக வைத்தே மோகன் ஸ்டீபனுடன் சேர்ந்து போலியாக முதல் தகவல் அறிக்கைகளை தயாரித்துள்ளார்.

தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மோகன் என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காகவே போலியான எப்.ஐ.ஆர். தயாரிக்கப்பட்டுள்ளது. சோமங்கலம் காவல் நிலையத்தில் மோகனின் விபத்து மரணம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதனை அடிப்படையாக வைத்தே போலி எப்.ஐ.ஆர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வைத்து 4 கோர்ட்டுகளில் லட்சக் கணக்கில் இழப்பீடு தொகை கேட்டு வக்கீல்கள் சார்பில் மனு செய்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

போலி எப்.ஐ.ஆர். தயாரிப்பதற்கு ஆலந்தூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்கள் சிலரும் உதவி செய்துள்ளனர். அந்த மையத்தில்தான் ஒரிஜினல் எப்.ஐ.ஆர்.களை ஸ்கேன் செய்து அதன்மூலம் போலியான முதல் தகவல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*