;
Athirady Tamil News

யாழ் மாநகர சபை உறுப்பினர் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு..!!

0

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 21ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

“இந்த மேன்முறையீட்டு மனுவை வெற்றி பெற்று சட்டத்தரணி மணிவண்ணனுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன்” என்று அடிப்படை உரிமைகள் மற்றும் நிர்வாகச் சட்ட வல்லுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சஞ்சீவ ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். அவரே இந்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் வதியும் வாக்காளர் ஒருவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

மனு தாரர் கோரிய இடைக்கால நிவாரணங்களில் ஒன்றான, மனு மீதான விசாரணை நிறைவடைந்து கட்டளையிடும்வரை யாழ்ப்பாண மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க உறுப்பினர் வி.மணிவண்ணனுக்கு தடை உத்தரவை வழங்கவேண்டும் என்பதை ஏற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட்டில் இடைக்காலக் கட்டளை வழங்கியது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தே மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படுகிறது. இந்த மனு வரும் 21ஆம் திகதி உயர் நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று மனுதாரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தன, பிரபல மேன்முறையீட்டு சட்ட நிபுணராக அறியப்படுகிறார். அவரே இந்த மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*