;
Athirady Tamil News

வவுனியாவில் 13 போராளிகளை உமியுடன் கொளுத்திய சிவசக்தி ஆனந்தன்(?) என ஸ்ரீதரன் கடும் சீற்றம்..!!

0

எமது மக்களின் எண்ணங்களிற்கு ஒருபோதும் நாம் துரோகமாக இருக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்……

இந்த மண்ணிலே தங்களுடைய இருப்புக்காகவும், விடுதலைக்காகவும் பல ஆண்டுகளாக பல்வேறுபட்ட வடிவங்களில் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்து சென்றவர்கள் தமிழர்கள். அவர்களது போராட்டங்களை ஆயுதமுனையில் சிங்கள ஆட்சியாளர்களால் அடக்கப்பட்ட காரணத்தால் ஆயுதத்தை ஆயுதத்தால் தான் வெல்ல முடியும் என்கிற எண்ணத்தோடு எங்களுடைய இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

அதனால்தான் நாங்கள் எங்கள் விடுதலையினை துப்பாக்கி முனைகளோடு பேச வேண்டிய ஒரு காலம் எங்களுக்கு ஏற்பட்டது. அந்த காலம் 2009 உடன் மௌனிக்கபட்டு 2010-ற்கு பிறகும் அதே வழியிலேயே ஒரு புரட்சிகரமான பாதையிலே தமிழர்களுடைய சுயாட்சியை பெற்றுக் கொள்ளுகின்ற இணைந்த வடகிழக்கில் நாங்கள் ஒரு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை தாயகமண்ணிலே உருவாக்கிக்கொள்கின்ற முயற்சியிலே அந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து நாங்கள் பயணிக்கிறோம்.

ஆனால் காலங்காலமாக இந்த மண்ணிலே வந்த ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் எங்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களை அவர்கள் தங்கள் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்தி யிருக்கிறார்கள். எழுபத்தி எட்டாம் ஆண்டிலே இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்கிய ஜெயவர்த்தனா சமாதானம் என்றால் சமாதானம், போர் என்றால் போர் என்று கூறி நிராயுதபாணிகளாக இருந்த தமிழர்கள் மீது போரை தொடுத்தார்.

அவருக்கு பின்னர் வந்த பிரேமதாச சமாதானம் பேசி படுகொலைகளை மேற்கொண்டார். சந்திரிகா சமாதான தூதுவராக தன்னை அடையாளம் காட்டி பல ஆயிரக்கணக்கான பெண்களை கொலை செய்வதில் பல முக்கியமான பணிகளை இந்த மண்ணிலே மேற்கொண்டார். அதனால் யாழில் ஒரு பாரிய இடப்பெயர்வும் ஏற்பட்டிருந்தது.

பின்னர் வந்த மகிந்த ராஜபக்ச ஒரு பாரிய இன அழிப்பை இந்த மண்ணிலே மேற்கொண்டு உலகம் வெட்கித் தலைகுனிய கூடிய அளவிற்கு இருபத்தியோராம் நூற்றாண்டிலே இனப்படுகொலைக்கு அடையாளம் சொல்லக்கூடிய வகையிலே எங்கள் மீதான பாரிய யுத்தத்தை கட்டவிழ்தார். மைத்திரிபால சிறிசேனவும் வடகிழக்கை இணைக்க மாட்டேன்,சமஸ்டிக்கு இணங்க மாட்டேன் என இனவாதம் பேசும் ஒருவராக மாற்றியுள்ளார்.

சந்திரிகாவின் தீர்வு திட்டத்தை ரணில் தீயிட்டு எரித்தார். இது சிங்களவரின் வரலாறு. நாம் யாரை நம்புகிறோமோ, போற்றுகிறோமோ அவர்கள் எல்லாம் எம்மை அழித்திருக்கிறார்கள். தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதில் அவர்கள் இதய சுத்தியுடன் நடக்கவில்லை என்பதை வரலாறு சொல்லியிருக்கிறது.

இன்று பத்திரிகைகள், தொலைகாட்சிகள், ஊடகங்கள் எல்லாம் பல்வேறுபட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த மண்ணிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், வவுனியாவில் தன்னை முதன்முதல் கரும்புலியாக ஆகுதியாக்கிய மாப்பாணர் மகன் போர்க் அவர்களின் தாய் தந்தையர்களை தெருவிலே பிச்சை எடுக்க வைத்த பாராளுமன்றஉறுப்பினர், பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தந்தையை படுகொலை செய்து மலக்குளிக்குள் போட்ட அந்த பாராளுமன்ற உறுப்பினர், ஈரோஸ் போராளிகள் 13 பேரை இந்த வுனியாவில் வைத்து உமியுடன் கொளுத்திய அந்த பாராளுமன்ற உறுப்பினர், மூத்த போராளி அமுதனின் தந்தையை இந்தியாவில் வைத்து நிர்வாணமாக்கி நடக்க வைத்த அந்த பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருக்கிறார் சாள்ஸ், சிறிதரன், சரணவணபவன் போன்றோர் மகிந்தவிற்கு ஆதரவளிக்க போகின்றனர் என்று.

இந்திய ராணுவம் வந்தபோது அவர்களோடு நின்றுபல படுகொலைகளை செய்தீர்கள், இலங்கை ரானுவத்துடன் ஒட்டுக்குழுவாக இருந்து உங்களை வளர்த்து கொண்டவர்கள் எல்லாம் இன்று எம்மை பார்த்து பேசுகிறார்கள். ஆதாரம் இல்லாத வார்தைகளும், குற்றசாட்டுகளும் எமது மக்களை குழப்ப நிலைக்குள் தள்ளியிருக்கின்றது. தேசிய இனமான நாங்கள் எங்களுடைய மொழியையும் பண்பாட்டையும் இனத்தினது அடையாளத்தையும் இந்த மண்ணிலே நிலைநிறுத்த ஒன்று சேர்ந்திருக்கிறோம். அதற்காக பல்லாயிரம் பேருக்கு இந்தகைகளால் மண் அள்ளி போட்டவர்கள் நாங்கள்.

வரலாற்று பாரம்பரியங்களை கொண்டது தமிழரசுகட்சி. இதனாலே எமது கட்சி இன்றும் நிலைத்து நிற்கின்றது. எங்களை விட்டு ஒரு பதர்போயிருக்கிறது. ஒரு பதர்போனமைக்காக அனைவரையும் பிழையாக பார்க்கமுடியாது.துரோகங்களும், கழுத்தறுப்புகளும் இனத்தை நடுத்தெருவிலே விடுகின்ற சூழல்களை எல்லாம் தாண்டி நாங்கள் பீனிக்ஸ் பறவைபோல விளவிள எழுந்திருக்கிறோம், மீண்டு வந்திருக்கிறோம். எங்களது பயணம் நேர்மையானது, சத்தியமானது நாம் தமிழர்களின் எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் பயணிக்கின்றோம்.

எழுதுகிறவர்கள் எழுதட்டும் நாங்கள் போகின்ற பாதை சத்தியம் நிறைந்தாக நேர்மை பொதிந்ததாக,எமது மக்களின் எண்ணங்கள் சார்ந்ததாக அவர்களின் ஆணையின் பலனாகவிருந்து நிச்சயம் பயணிப்போம். துரோகமான மனிதர்களுடைய எண்ணங்களிற்கும் அவர்களின் சிந்தனைகளிற்கும் நீங்கள் செவிசாய்க வேண்டாம். நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம்.

எமது மக்கள் வீட்டிற்கு வாக்களித்தார்கள் எமது இலக்கங்களிற்கு வாக்களித்தார்கள் அந்த வாக்குகள் வீண்போகாது அதற்குரிய பெறுமதி அழிந்து போகாது எமது மக்களின் எண்ணங்களிற்கு ஒருபோதும் நாம் துரோகமாக இருக்க மாட்டோம். அவர்கள் தந்த ஆணையை நாம் இதயங்களிலே நிறுத்தியிருக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − ten =

*