;
Athirady Tamil News

16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம் தொடங்குகிறது..!!

0

ஸ்ரீராமரின் வாழ்வோடு தொடர்புடைய இடங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் 16 நாள் பக்தி சுற்றுலாவாக செல்லும் ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் என்னும் சிறப்பு ரெயிலை இயக்க இந்திய ரெயில்வே துறை தீர்மானித்தது.

இந்த சிறப்பு ரெயிலின் முதல் சேவை டெல்லி சப்தார்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் 14-11-2108 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.

அன்று மாலை சுமார் 4.30 மணிக்கு தொடங்கும் இந்த பக்தி பயணம் ராமர் பிறந்த அயோத்தியில் பஜனை, கீர்த்தனைகளோடு இரண்டாம் நாளும், அயோத்தியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள, ராமரின் வனவாச காலத்தில் பரதன் வாழ்ந்த இடமான நந்திக்கிராமத்தை மூன்றாம் நாளும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

சீதை பிறந்த இடமாகக் கருதப்படும் சீதாமதியில் உள்ள ஜானகி கோவில், பினாரா, ராமன் – சீதை மணமுடித்த இடமான ஜானக்பூர் கோவில் ஆகிய இடங்களில் நான்காம் நாளும். வாரணாசியில் உள்ள துளசி மந்திர், சங்கட் மூச்சன் அனுமான் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவை ஐந்தாம் நாள் பயணத்தில் இடம்பெறும்.

ஆறாம் நாளில் சீதையை பூமி மாதா தன்னுள் கொண்ட இடமாகச் சொல்லப்படும் சீதா சமகிஸ்தலம், சீதை கோவில், ராமன், சீதை, லக்ஷ்மணன் கங்கையைக் கடந்த ஸ்ரீரங்கவேற்புரம் கோவில்கள், கங்கா – யமுனா- சரஸ்வதி சங்கமமாகும் அலகாபாத் பரத்வாஜ் ஆசிரமம் மற்றும் ஏழாம் நாளில் சித்திரக்கூடத்தில் சங்கமம் ஹனுமான் கோவில் தரிசனம்.

எட்டாம் நாள் சீதையை ராவணன் கவர்ந்து சென்ற இடமான தண்டகாரண்யம் என்றழைக்கப்பட்ட நாசிக் தன்மசாலையில் ஓய்வு. அங்குள்ள திரயம்பகேஸ்வரர் கோவில், அதை அடுத்து கோதாவரிக் கரையோர பஞ்சவடி ராமர் கோவில், லக்ஷ்மணனுக்கு உள்ள ஒரே கோவில் போன்றவை ஒன்பதாம் நாள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.

பத்தாம் நாள் அனுமன், ராமனையும் லக்ஷ்மணனையும் சந்தித்த கிஷ்கிந்தை (ஹம்பி) போய்ச் சேர்வது. பதினொன்றாம் நாள் எழில் கொஞ்சும் கோவில்கள் காட்சி விருந்து. பன்னிரெண்டாம் நாள் ராமேஸ்வரம் சென்றடைதல்.

பதிமூன்றாம் நாள் ராமேஸ்வரம் கோவில் தரிசனம், தனுஷ்கோடி பயணம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்.

பதினான்காம் நாள் சென்னை வரும் அந்த ரெயிலில் வரும் பயணிகள் இரு குழுவாக பிரிந்து விருப்பப்படும் குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை செல்வார்கள். மற்றவர்கள் டெல்லிக்கு ரெயில் மூலம் புறப்படுவர்.

இரண்டாவது குழுவினர் பதினைந்தாம் நாள் முழுக்க ரயிலில் பயணித்து, பதினாறாம் நாள் டெல்லி சென்றடைவார்கள். டெல்லி-டெல்லிக்கான இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் நபர் ஒன்றுக்கு 15 ஆயிரத்து 120 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ரெயிலில் 800 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை சென்று 5 இரவுகள் மற்றும் 6 பகல் அங்கு தங்கி சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணம், உணவு, தங்கும் விடுதி செலவு மற்றும் சென்னையில் இருந்து கொழும்புவுக்கும், கொழும்புவில் இருந்து டெல்லிக்குமான விமான கட்டணம் என நபர் ஒன்றுக்கு 47 ஆயிரத்து 600 ரூபாய் மொத்த கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விமானம் மூலம் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அழைத்துச் செல்லப்படும் பயணிகள், ராவணன் இறந்த பிறகு விபீஷணன் முடிசூடிய கெளனியா, சீதையை தேடிவந்த அனுமன் ராவணனுடன் போர் செய்த ரம்பொட கோவில், மேகநாதன் சிவனிடம் வரம் வாங்கிய நுவரெலியா காயத்ரி பீடம், சீதை கோவில், அசோகவனம் உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவார்கள்.

மேலும், திவ்கும்போலா கோவில், ராவணனைக் கொன்ற பின் பிரம்மமகஸ்தி தோஷம் கழிய ராமன், சிவனை கற்சிலையாய் வழிபட்ட முன்னேஸ்வரம் கோவில், மானாவாரி கோவில் ஆகிய கோவில்களும் இதில் அடங்கும்.

பின்னர் அவர்கள் கொழும்புவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றடைவர். சைவ உணவு, தங்குமிடம், சுற்றிக் காண்பித்து தல வரலாறுகளை சொல்லும் வழிகாட்டி உள்பட எல்லாம் இந்த சுற்றுலாவுக்கான கட்டணத்தில் அடங்கும் என்று இந்திய ரெயில்வே சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை தெரிவித்துள்ளது.

அதாவது, இலங்கை பகுதி சுற்றுலாவையும் சேர்த்து 62 ஆயிரத்து 720 ரூபாயில் இந்த பக்தி சுற்றுலாவில் பங்கேற்கலாம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*