;
Athirady Tamil News

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரனுக்கு ஒரு கடிதம்..!! (முகநூலில் இருந்து)

0

வணக்கம் .

கடந்த ஒரு வருடமாக உங்களையும் உங்கள் அரசியல் நகர்வுகளையும் மிக உன்னிப்பாக அவதானித்துவரும் பலரில் நானும் ஒருவன்.

வேண்டியோ வேண்டாமலோ ஈழத்தமிழர்களின் அரசியல் கிளித்தட்டு விளையாட்டில் நீங்களும் ஒருவர்.

அரசியலுக்கு நீங்கள் உட்புகுந்த காலத்தில் “மிகக்கடுமையாக” உங்களை விமர்சித்த ஆயிரத்தில் ஒருவன் நான்.

அண்மையில் உங்கள் நல்லாட்சியின் சகபாடி சனாதிபதி மைத்திரியை “போடா.. வாடா… நீ” என்று பொதுமேடையில் வெளுத்து வாங்கியதை விட நூறு மடங்கு உங்களை முகப்புத்தகத்தில் விமர்சித்தேன்.

இண்டைக்கு உங்களின் கோபம் எந்தளவு நியாயமானதோ அந்தநேரம் என்னுடைய கோபமும் நியாயமானது.

எனக்கு “அதிர்ச்சியளித்த” உங்களின் தேர்தல் வெற்றிக்கு பின்னர் உங்களைப்பற்றிய நேரடியான “விமர்சனங்களை” அடக்கியே வாசித்தேன்.

காரணம் அந்த நேரம் உங்களின் “தேர்தல் வெற்றி” என்பது என்னைப்பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.

ஆனால் அதன் பின் உங்களின் பல அரசியல் “சுழியோட்டங்களை” தூர இருந்து பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். சிலநேரம் ஆச்சரியமடைந்தும் இருக்கிறேன்.

உங்களின் சர்ச்சையான பல பேச்சுக்களில் “எரிச்சல்” அடைந்தது மட்டுமல்ல சில நேரம் மிகக்கடுமையாக கோபம் அடைந்தேன். எனக்குள் நானே ஏசிவிட்டு உங்களை கடந்து சென்றிருக்கிறேன்.

என்னதான் உங்களை விலத்தி நடக்க முயன்றாலும் மீண்டும் மீண்டும் உங்களை சந்திக்கவேண்டிய கட்டாயம். காரணம் ஈழத்தமிழர்களின் அரசியல் பள்ளிக்கூடத்தில் நீங்கள் A/L படிக்கிறீர்கள். நான் ஹொலசிப் படிக்கிறன். அதனால் ஒவ்வொரு நாளும் உங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

இத்துடன் முன்னுரையை நிறுத்தி விசயத்துக்கு வாறன்.

கடந்த இரண்டு வாரமாக உங்களுடைய பேச்சுக்களையும் நடவடிக்கையையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்த போது; மீண்டும் பழையபடி உங்கள் மீது மிகக்கடுமையாக விமர்சனங்களை வைத்து விடுவேனோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கடந்த நாலு வருடமாக “மைத்திரி, ரணில், நல்லாட்சி” இந்த மூன்று வார்த்தைகளும் உங்களுக்கு “தேனாக” இனித்தன.
உங்களுக்கு இனிப்பாய் இருந்ததால் எங்களுக்கும் இனிப்பாய் இருக்கும் எண்ட உங்களின் எதிர்பார்ப்பு மிகவும் தவறானது.
காரணம் சிங்களப்பேரினவாத அடியாட்களின் சுயத்தை அனுபவத்தில் புரிந்து வைத்த தமிழ் மக்களுக்கு அவர்கள் எப்பவும் “வேப்பெண்ணை தான்”!

நல்லாட்சி மீதான உங்களின் பேராசையும்; மைத்திரி மீது வைத்த நம்பிக்கையும்; ரணில் மேல் வைத்த காதலும்; என்றோ ஒருநாள் “கிழிந்து” தொங்கும் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் நீங்களோ….
“இரும்புச்சங்கிலி அறுந்தாலும் அன்புச்சங்கிலி அறாது” என்று தீபாவளிக்காட்டில் முந்தி நாங்கள் எழுதிய வசனத்தை சொல்லிக் கொண்டு திரிந்தீர்கள்.

நான்கு வருடங்களாக; ரணில், மைத்திரியுடன் நல்லாட்சி என்ற ஐந்து நட்சத்திர விடுதியில் கூடிக்கும்மாளம் இட்டுவிட்டு; இன்று திடீரெண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து மக்கள் முன் அழுகிறீர்கள். மைத்திரி சாப்பிட்ட சாப்பட்டில் உப்பு இல்லாதது போல நீங்கள் அழும் கண்ணீரிலும் “உப்பு” இல்லை.

ஏதோ முந்தநாள் மைத்திரி ஏமாற்றி விட்டதை போல நீங்கள் “கதை அளப்பதை” பார்க்க உங்களை “நீ… உப்பு… குழிதோண்டி புதைச்சிடுவம். உனக்கு இறுதிகாலம்” என்று நீங்கள் மைத்திரியை ஏசிய ஏச்சுக்கள் எங்கள் வாயிலும் வருகின்றன.

என்ன ஆச்சரியம் என்றால்;
மைத்திரி மீது உங்களுக்கு இருக்கும் கோபத்தில் ஒரு துளிகூட நல்லாட்சியின் இன்னொரு பங்காளியான ரணிலின் மீது இல்லை.

மைத்திரியின் மீதான கடும் கோபத்தில் ஒரு துளியெண்டாலும் ரணிலின் மீது காட்டியிருந்தால் நிச்சயம் இந்த நீண்ட கடிதத்தை நான் கையுளைய எழுதவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இன்று “நல்லாட்சி” என்ற நாடகத்தின் உண்மையான முகத்திரை கிழிந்து தொங்கும் போது அந்த திரையில் எங்கள் எல்லார் கண்களுக்கும் மைத்திரியும் ரணிலும் தெரிகிறார்கள். ஆனால் உங்களுக்கு மட்டும் மைத்திரி மட்டும் தெரிகிறார்.ஆச்சரியம் ஆனால் உண்மை!

தென்னிலங்கையில் இரு பெரும் பேரினவாத கட்சிகளுக்கு இடையில் நிகழும் அதிகாரப் போட்டியில்; தமிழர்கள் தரப்பு அவசியம் இல்லாமல் மூக்கை நுழைத்ததும் தேவையில்லாமல் முந்திரிக்கொட்டை போல கருத்துக்கள் சொன்னதும்;

தேவையில்லாமல் முச்சந்தியில் நின்று தொண்டை கிழிய கத்தி கோபப்பட்டதும் வீணான செயல் என்பது அரிவரி படிக்கும் சின்னப்பொடியனுக்கு கூட தெரியும். ஆனால் உங்களுக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் அது தெரியமல்ப் போனது தூரதிஸ்ரவசமானது.

“பேரம்பேசுதல்” என்பதன் அர்த்தம் உங்களுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை.

எப்போதெல்லாம் தமிழர்களுக்கு “பேரம் பேசும் வலு” அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் அதை “பூச்சியம்” ஆக்கும் கபடவேலையை சிங்களப் பேரினவாதம் செய்து வருகிறது. இது வரலாறு. கடந்த கால வரலாற்று புத்தகத்தை எடுத்துப் படியுங்கள்.
“வரலாறு என்பது என் மிகச்சிறந்த வழிகாட்டி” என்று தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் சொல்லியிருக்கிறார்.

மகிந்தவிடம் “எழுத்துமூல வாக்குறுதியை” கேட்ட நீங்கள் ரணிலிடம் அதைக்கேட்காமலே அவரை ஆதரிப்பது என்பது நியாயமான செயலா?

“நாங்கள் எப்ப ரணிலை ஆதரிச்சது எண்டு சொன்னம்? மைத்திரியின் சனநாயக விரோத செயலைத் தான் கண்டிக்கிறோம். அதற்கு எதிராகவே நிற்கிறோம்” என்று நீங்கள் பாராளுமன்ற வளாகத்தில் BBC செய்தியாளரிடம் கோபத்தோடு சொன்னீர்கள். பார்க்கும் போது ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் எரிச்சலாகவும் இருந்தது.

கடந்த இரண்டு வாரத்தில் உங்களுக்கும் ரணிலுக்கும் இடையில் உள்ள “நெருக்கமான உறவு” தெட்டதெளிவாக புலப்பட்டது. பச்சையாக சொன்னால் ,உங்களுக்கு இடையில் இருக்கும் “கள்ளக்காதல்” ஊரறிந்த பரகசியமாகி விட்டது.

கடந்தவாரம் மகிந்தவை பிரதமாராக அறிவித்தார் மைத்திரி. மகிந்தவுக்கான ஆதரவுத்தளம் உடைந்து போக; இப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாய் மைத்திரி அறிவித்துள்ளார்.

இவை இரண்டும் சனநாயக விரோத செயல்கள்,. அரசியல் யாப்புக்கு எதிரானவை.

நாளை இந்த இரண்டு விடயங்களும் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தால்; ரணிலுக்கு ஆதரவான சட்டத்தரணியாக நீங்கள் களமிறங்கக்கூடும்.
கேட்டால் ….
“நான் ரணிலுக்காய் வரவில்லை. இலங்கையின் சனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய செயலை தட்டிக்கேட்கவே வந்தேன்” என்பீர்கள்.

தயவுசெய்து இனியாவது தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் உணர்வுகளை புரிந்து நடவுங்கள்.

நல்லாட்சி அரசு தந்துவிடும் என்று நீங்கள் கூவித்திரிந்த “அரசியல் தீர்வை” ஒரு போதும் சிங்களப் பேரினவாதம் தரப் போவதில்லை.

இது இன்றல்ல பலதடவைகள் நடந்திருக்கிறது.

தமிழர்களுக்காக அரசியல் தீர்வு கைகூடி வரும் போது; தென்னிலங்கை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி அந்த அரசியல் தீர்வு முயற்சியை குழப்புவது வழமையான வரலாறு. அதுதான் இப்போது நடந்துள்ளது.

“அரைகுறைத் தீர்வெண்டாலும்” அதுகூட தமிழர்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதே சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் ஒருமித்த முடிவு. அதை இனியாவது உணர்ந்து நடவுங்கள். பேசுங்கள்!

இன்று “நுள்ளி” விளையாடும் ரணிலும் மைத்திரியும் மகிந்தவும் நாளை ஒன்றாக கைகோர்க்கலாம்.
ஆனால்; அவசரப்பட்டு மைத்திரியை ஏசிப்போட்டு எந்த முகத்தோடு மீண்டும் அவர்களோடு இணைந்து பயணிக்கப் போகிறீர்கள்?

தயவுசெய்து இனியாவது; தமிழ்மக்களின் எதிர்கால நன்மை கருதியும்… கஜேந்திரகுமார் சொல்லும் “பூகோள அரசியல்” தத்துவத்தின் படியும்…. மெளனமாக இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்பதே நல்லது.

மேற்குலகமும் தென்னிலங்கை பேரினவாத சக்திகளும் தமிழர் தரப்பை ஒரு “ஊறுகாயாக” மட்டுமே நினைக்கிறார்கள்.

அதனால்; இனியாவது தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் யார் என்ன பேசினாலும் அதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். வாக்குறுதிகளை எழுத்துமூலம் வாங்குங்கள்.

ஏனெனில்….
நல்லாட்சியுடனான உங்களின் “இயதபூர்வமான இணைப்பின்” இணைப்பு கம்பிகள் அறுந்து தொங்கும் லட்சணத்தை பார்க்க வெறுப்பாக இருக்கிறது.

சனவரி மாதம் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் (நடந்தால்!!!) ….. மக்கள் முன்னால் நின்று பேசும் போது, மறக்காமல் உங்களின் “மனச்சாட்சியையும்” கூட்டிக்கொண்டு செல்லவும்.

நன்றி.

இப்படிக்கு
தமிழ்ப்பொடியன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − four =

*