குருநானக் ஜெயந்தி – 3800 சீக்கியர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான்..!!

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவரது பிறந்த இடமான நங்கானா சாகிப் பகுதி மற்றும் அங்குள்ள சீக்கிய புனித தலங்களுக்கு சென்று சீக்கியர்கள் வழிபடுவது வழக்கம். இந்த பகுதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் அருகே உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவுக்கு சீக்கியர்கள் அங்கு வழிபடுவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் விசா வழங்குகிறது.
இந்த ஆண்டு குருநானக் ஜெயந்தி இன்று முதல் 30-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நங்கானா சாகிப் பகுதிக்கு சென்று வழிபடுவதற்காக ஏராளமான சீக்கியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 3800க்கும் மேற்பட்டோருக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது. இதேபோல் உலகின் பிற நாடுகளில் வசிக்கும் சீக்கியர்களுக்கும் பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக அளவில் விசா வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.