வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்வு; ஈரப்பெரியகுளத்தின் வான் கதவுகள் திறப்பு..!!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் 16.11 அடியாக உயர்வடைந்துள்ளதுடன், ஈரப்பெரியகுளம் வான் பாய்ந்து வருவதாகவும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், சில குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் வவுனியா, பாவற்குளத்தின் நீர்மட்டம் 16.11 அடியாக உயர்வடைந்துள்ளது. அத்துடன் இராசேந்திரங்குளம் 9.9 அடியாகவும், முகத்தான்குளம் 11 அடியாகவும் உயர்வடைந்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் சில நட்களில் இவை வான் பாயக் கூடிய நிலை உள்ளது.
இவற்றுடன், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள ஈரப்பெரியகுளம் 15.7 அடியாக உயர்வடைந்துள்ளமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டு 3 இஞ்சி வான் பாய்ந்து வருகிறது. மேலும், வவுனியா வடக்கு மருதமடு குளம் 12.1 அடியாகவும் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் வான் பாய்ந்து வருகின்றது.
பாவற்குளமானது 3 இஞ்சி விவசாய நடவடிக்கைக்காக திறந்து விடப்பட்டுள்ளமையால் சடுதியான நீர்அதிகரிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நீர்மட்ட அதிகரிப்பு காரணமாக இக் குளங்களின் கீழ் உள்ள மக்களுக்கோ, பயிர்ச்செய்கைக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. அத்துடன் அனர்த்தம் ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மாவட்ட மட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா