;
Athirady Tamil News

வவுனியா நகரசபையில் 31 வேலை வெற்றிடங்கள் இருக்கின்றன: அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தெரிவிப்பு..!!

0

வவுனியா நகரசபையில் 31 வேலைவெற்றிடங்கள் இருக்கின்றன. ஒரு சில பதவிகளை விட சுகாதார பகுதிக்கு உடனடியாகவே ஆளணிகளை புதிதாக எடுக்க முடியும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆலோசகர் ந.தேவகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்தவிடயம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வவுனியாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அதன் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த திங்கள் கிழமை வவுனியா நகரசபையில் இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கம் என்றபெயரில் வேலை நிறுத்தம் ஒன்று இடம்பெற்றதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. எனினும் வவுனியா நகரசபையைபொறுத்தவரை அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கமே கடந்த 26 வருடங்காளாக செயற்பட்டு வந்துள்ளது.

அந்த சங்கத்தில் இருந்த போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபட்டவர்கள் தனியாக பிரிந்து நின்று குழுவாக செயற்பட்டு வருகிறார்கள். அன்று நடைபெற்ற வேலை நிறுத்தமானது அரசியல் பின்னனி கொண்டது. போராட்டம் நடந்த அன்றயதினம் 53 சுகாதார தொழிலாளர்கள் பணிக்கு சமூகம் அளித்திருந்தார்கள்.

அத்துடன் மழையுடனான காலநிலை காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படுவதற்குரிய சூழல் உள்ளதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடகூடாது என்று எமது தாய்சங்கமும் கேட்டுகொண்டுள்ளது. சம்பளமீளாய்வு, ஆளணி வெற்றிடம் என்பது அனைத்து இடங்களிலும் இருந்து வருகிறது. அந்த சம்பள மீளாய்வு தொடர்பான விடயங்களை உள்ளுராட்சி ஆணையாளரிடம் நாம் கொடுத்துள்ளோம். அது தொடர்பான விடயங்களை ஆராய்வதாக உள்ளுராட்சி ஆணையாளர் எமது சங்கத்திற்கு தெரிவித்துள்ளார். அதற்கான விசாரணை கமிசனிற்காக ஐந்துபேர் கொண்ட குழு ஒன்றும் அமைத்துள்ளார். அந்த சமயத்தில் நாம் ஒரு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது சரியான விதத்தில் அமையாது.

வவுனியா நகரசபையில் 31 வேலைவெற்றிடங்கள் இருக்கின்றன. ஒரு சில பதவிகளை விட சுகாதாரபகுதிக்கு ஆளணிகளை புதிதாக எடுக்க முடியும். அதனை உடனடியாக செய்யுமாறு உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவித்திருக்கிறோம். அதுபோல மாவட்ட ரீதியாக உள்ளுராட்சி மன்றங்களில் 100 இற்கும் மேற்பட்ட வேலை வெற்றிடங்கள் இருக்கின்றன.

எனவே இவற்றை சரியான முறையில் மேற்கொள்ளாமை மாகாணசபை விட்டதவறாகவே பார்க்கமுடியும். தற்போது மாகாணசபை முடிந்து அரசியல் நெருக்கடியான நிலை எற்பட்டுள்ளது. எனவே இவ்விடயங்களிற்கான தீர்வுகளை இவ்வருட இறுதிக்குள் எமக்கு தரப்படும் என உரியதரப்புகளால் கூறப்பட்டுள்ளது. எனவே அவர்களின் பதிலின் பிரகாரம் நாம் அடுத்தகட்ட நகர்வுகளை எதிர்காலத்தில் மேற்கொள்வோம் என்று கூறினர்.

குறித்த ஊடக சந்திப்பில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் உயர்பீட உறுப்பினர் மற்றும் அச் சங்கத்தின் வவுனியா நகரசபை இணைப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 10 =

*