;
Athirady Tamil News

120 போலி கம்பெனிகள்: தெலுங்குதேச எம்.பி. ரூ.6 ஆயிரம் கோடி மோசடி- அமலாக்கத்துறை சம்மன்..!!

0

மத்தியில் ஆளும் பா ஜனதா கூட்டணி அரசில் இருந்து ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார். பா ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி வரும் அவர், பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அதோடு மத்திய அரசை எதிர்க்கும் வகையில் ஆந்திர மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய சந்திரபாபு நாயுடு சமீபத்தில் தடைவிதித்தார். இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி-யும், மோடி ஆட்சியில் இணை மந்திரியாக இருந்தவருமான ஓய்எஸ் சவுத்ரிக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

சவுத்ரிக்கு தொடர்புடைய சுஜானா குழுமத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஐதராபாத்தில் 7 இடங்களிலும், டெல்லியில் ஒரு இடத்திலும் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெலுங்கு தேச எம்பி ஓய்எஸ் சவுத்ரி, 120 போலி கம்பெனிகள் மூலம் வங்கியில் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை பொறியியல் நிறுவன இயக்குனர்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில் சுஜானா குழுமத்துக்கு சொந்தமான 8 இடங்களில் சட்டவிரோத பணபரிவர்த்தனை அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் சுஜானா குழுமத்தின் கீழ் 120 நிறுவனங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் பல தற்போது செயல்பாட்டில் இல்லை.

இந்த நிறுவனங்களின் இயக்குனர்கள் அனைவரும் சவுத்ரி எம்பி-யின் பினாமியாக செயல்பட்டு வந்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டன. அந்த இயக்குனர்கள் அனைவரும் வெறும் பெயர் அளவிலேயே செயல்பட்டு வந்துள்ளனர். எம்பி உத்தரவுப்படியே அனைத்து செயல்பாடுகளும் இருந்துள்ளன. இதற்கான தகவல் பரிமாற்றம் இ-மெயில் மூலம் நடந்துள்ளது.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் சுஜானா குழுமத்துடன் பல நிறுவனங்கள் இணைந்து ரூ.6 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. சவுத்ரி தொடர்பான பென்ஸ், பெராரி உள்பட 6 சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்துவதற்காக தெலுங்கு தேச எம்பி சவுத்ரிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 27-ந்தேதி அவர் ஆஜராகு மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஓய்எஸ் சவுத்ரி மறுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + eleven =

*