;
Athirady Tamil News

குழந்தைகள் கடத்தப்பட்டதால் தவிக்கும் பெற்றோர் – போலீஸ் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!!

0

சென்னையில் நேற்று நடந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் குழந்தைகள் கடத்தலின் பின்னணியில் மாபியா கும்பல் செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

ரோட்டில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்து விசாரித்தாலே போதும், பின்னணியில் இருப்பவர்களை பிடித்து விடலாம் என்பது போன்று ரஜினியின் கருத்து அமைந்துள்ளது.

எப்போதுமே ஒரு வி‌ஷயத்தை பற்றி யார் குரல் எழுப்புகிறார்களோ அவர்களின் செல்வாக்கை பொறுத்தே அந்த வி‌ஷயமும் ஆழமாக அலசப்படும்.

அந்த வகையில் குழந்தை கடத்தல் தொடர்பாகவும், அதன் பின்னணி குறித்தும் ரஜினி குரல் கொடுத்த பின்னர் அது விவாதப் பொருளாகி இருக்கிறது. தமிழகம் முழுவதுமே காணாமல் போன பல குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் கடத்தப்பட்ட தங்களது 2 பெண் குழந்தைகளும் தங்களுக்கு மீண்டும் கிடைப்பார்களா? என்கிற ஏக்கத்துடன் 2 பெற்றோர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

சென்னை சாலிகிராமம் மஜித்நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மகள் கவிதா. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி சிறுமி கவிதா வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனாள். அப்போது சிறுமிக்கு 2 வயதே ஆகி இருந்தது.

மகளை காணாததால் கணேசும், அவரது குடும்பத்தினரும் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதுபற்றி போலீசில் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

சிறுமி கவிதா காணாமல் போனது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தந்தை கணேஷ் தனது மகளை மீட்டு தரக்கோரி நடையாய் நடந்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசில் அதிகாரிகள் மாறிக் கொண்டே இருந்தனர். ஆனால் வழக்கு விசாரணை மட்டும் அப்படியே இருந்தது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஒருபக்கம் போலீசை நம்பி கொண்டே… இன்னொரு பக்கம் சாமியையும் நாடினர். போகாத கோவில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கோவில் கோவிலாக சென்றனர். எங்கு சென்று பார்த்தாலும் குழந்தை கண்டிப்பாக கிடைப்பாள் என்றே இப்போதும் கூறு கிறார்கள். இதனால் 7 ஆண்டுகளாக ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் சிறுமி கவிதாவின் பெற்றோர்.

சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் வசித்து வரும் பெருமாள்-லட்சுமி தம்பதியினரின் ஒரு வயது பெண் குழந்தை சரண்யா. கடந்த 2016-ம் ஆண்டு கடத்தப்பட்டது.

நடைபாதையே வாழ்க்கையாகி போனதால் குழந்தையை அரைஞான் கயிற்றோடு தனது உடலில் கட்டியபடியே தாய் லட்சுமி தூங்கினார். அப்போது காரில் வந்த ஒரு ஆணும், 2 பெண்களும் கயிற்றை கத்தியால் வெட்டி எறிந்து விட்டு குழந்தையை காரில் கடத்திச் சென்று விட்டனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் கைப்பற்றப்பட்டன. அதனை வைத்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனால் கடந்த 2½ ஆண்டாக பெருமாளும், லட்சுமியும் தவியாய் தவித்து வருகிறார்கள். காணாமல் போன இந்த 2 குழந்தைகளும் எங்கு இருக்கின்றன என்பது மர்மமாகவே உள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற போது காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து கொடுக்க கோர்ட்டு உத்தர விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பெற்றோர்களை போன்று கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ பெற்றோர் தங்களது குழந்தைகளை தொலைத்து விட்டு காத்திருக்கிறார்கள். எனவே கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க போலீசார் வேகம் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*