;
Athirady Tamil News

மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களை வெளியேற்றுமாறு உத்தரவு..!! (படங்கள்)

0

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகட்டிலிருந்து மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களை எதிர்வரும் (01-12-2018) அன்று வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக செட்டிக்குளம் பிரதேசசபை தவிசாளர் ஆசிர்வாதம் அந்தோனி தலைமையில் இன்று (27) நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த நானாட்டான் பிரதேசத்திலிருந்து கால்நடைகளை செட்டிக்குளம் பெரியகட்டிற்கு ஓட்டிவரும் கால்நடை வளர்ப்பாளர்கள் அங்கு பயிர்செய்கை மேற்கொள்ளும் மேட்டு நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதினால் அக்கிராம மக்கள் விவசாயம் செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு 2014 ஆம் ஆண்டு தொடக்கம் பெரியகட்டு கிராம மக்கள் கால்நடைகளை வெளியேற்றி தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கிராம மக்களுடன் பிரதேச சபை தவிசாளர், பெரியகட்டு கிராமத்தின் கிராம உத்தியோகத்தர் எஸ்.இராதகிருஸ்ணன் மற்றும் பிரதேசபை உறுப்பினர் இ.பரிகரன் ஆகியோர் கால்நடை வளர்ப்பாளர்கள் முன்னிலையில் நிலைமைகளை ஆராய்ந்ததுடன் (01-12-2018) குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் கால்நடை வளர்ப்பாளர்கள் வெளியேற வேண்டும் அல்லாத பட்சத்தில் பொலிசாரின் உதவியுடன் கால்நடைகளையும், வளர்ப்பாளர்களையும் வெளியேற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சுமார் மூவாயிரம் கால்நடைகளை பெரியகட்டு கிராமத்தில் மேச்சலில் ஈடுபடுத்திவருவதனால் கிராம மக்கள் மாடுகளினால் பெரும் தொல்லைகளை அனுபவித்துவரும் நிலையில் மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் செல்லும் வாகனங்கள் தினமும் பாரிய விபத்துக்களை சந்தித்து வருகின்றன.

நானாட்டான் பிரதேச சபையானது கால்நடைகள் விவகாரத்தில் அசமந்தமாக செயற்பட்டதன் காரணமாகவும், மேய்ச்சல் தரையை ஏற்படுத்த கால்நடை அபிவிருத்தி அமைச்சினால் நானாட்டான் பிரதேசபைக்கு வழங்கப்பட்ட நூறு கோடி ரூபா பணம் பயன்படுத்தப்படாத நிலையில் திரும்பிச் சென்றுள்ளது என நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தின் உபதலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெரியகட்டை அண்மித்த கிராமங்களிலுள்ள குடும்பங்களில் கால்நடை வளர்ப்பாளர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகவும், யானைத் தொல்லைகளுடன் மாரிகாலத்தில் மாட்டுத்தொல்லை காரணமாகவும் எவ்விதமான பயிர் செய்கைகளிலும் ஈடுபட முடியாத நிலைமை காணப்படுகின்றது என கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 1 =

*