ரணிலும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துகிறார்: அநுரகுமார திஸாநாயக்க..!!

அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கிருப்பதன் மூலம், அரச சொத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தவறாக பயன்படுத்துகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்திற்கான நிதியொதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், குறித்த பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை இல்லையென்றும், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் குறிப்பிட்ட அநுரகுமார, அவரது அலுவலகத்திற்கு அரச நிதி ஒதுக்கப்படுவது சட்டவிரோதமானதென குறிப்பிட்டார். அந்தவகையில், பிரதமர் அலுவலகம், அமைச்சரவை ஆகியவற்றிற்கு ஒதுக்கப்படும் நிதியை உடன் நிறுத்தவேண்டுமென வலியுறுத்தினார்.
அதுமாத்திரமன்றி, அலரி மாளிகைக்கும் அரச நிதி பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்ட அநுரகுமார, ரணில் விக்ரமசிங்கவும் அரச நிதியை தவறாக பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். அத்துடன், அலரி மாளிகையை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அலரி மாளிகைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் நிதியே பயன்படுத்தப்படுவதாகவும், அரச நிதியை பயன்படுத்தவில்லையென்றும் கூறியுள்ளார்.