;
Athirady Tamil News

மாநகரசபையின் 2ஆவது விசேட பொதுக்கூட்ட தீர்மானங்கள் தொடர்பில் மாநகர முதல்வரின் ஊடக அறிக்கை..!!

0

யாழ்ப்பாணம் மாநகரசபையின் 2ஆவது விசேட பொதுக்கூட்டம் 2018.11.29 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மாநகர சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முதலில் நிதிக்குழுக் கூட்ட அறிக்கை தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. நிதிக் குழுத்தீர்மானங்கள் தொடர்பில் பல உறுப்பினர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியாக மாநகர மக்களின் நலன் முக்கியத்துவம் பெறும் விதமாகவும், சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவும் அனைத்து திட்டங்களையும் சகல உறுப்பினர்களினதும் ஒத்துழைப்போடு செயற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் 2019 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவு சபைக்கு சமர்பிக்கப்பட்டது. உத்தேச வரவு செலவுத் திட்ட முன்மொழிவு தொடர்பில் உறுப்பினர்களுக்கிடையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக வரவு செலவுத்திட்ட முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளமையானது மாநகர சட்ட நடைமுறைக்கு அமைவாக காணப்படவில்லை என்றும், அதனை மாநகர கட்டளை சட்டத்திற்கு ஏற்ப மீண்டும் சமர்பிக்குமாறு குறிப்பிடப்பட்டது. தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச வரவு செலவுத் திட்டதிட்ட முன்மொழிவு தொடர்பிலான அபிப்பிராயங்கள் மற்றும் கோரிக்கைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் முதலில் பார்வைக்காக மாநகரசபை காரியாலயத்திலும், முதல்வரினால் தீர்மானிக்கப்படும் இடங்களிலும் காட்சிப்படுத்துமாறும், வரவு செலவுத் திட்ட முன்மொழிவு காட்சிப்படுத்தப்படும் இடங்கள் குறித்த தகவல் உள்;ர் பத்திரிகைகள் இரண்டின் மூலம் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் விசேட கூட்டத்தை கூட்டி அதில் விதாதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டது. இக் கருத்தானது சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் 2018.11.30 ஆம் திகதி பத்திரிகைகளின் ஊடாக உத்தேச வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் தொடர்பில் மாநகர மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும், அதன் பின்னர் எதிர்வரும் 2018.12.07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தேச வரவு செலவுத் திட்டம் தொடர்பான விசேட பொதுக் கூட்டம் கூட்டப்படும் என்றும் முதல்வரால் குறிப்பிடப்பட்டது. மேலும் (2018.11.29) சபையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பிரயோகங்களில், தலைப்புக்களில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அம் மாற்றங்களுடன் மக்கள் பார்வைக்காக உத்தேச வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் காட்சிப்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்களே மக்களின் தேவைகளை ஆராய்ந்து, அறிந்து சட்டதிட்டங்களுக்கு அமைய மக்கள் நலனை முன்னிறுத்தி சேவை செய்யவேண்டும் எனவும், அதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான தீர்மானங்களுடன் யாழ் மாநகரசபையின் 2ஆவது விசேட கூட்டம் 1.15 மணியளவில் நிறைவுற்றது.

இவ்வண்ணம்
இம்மானுவல் ஆனல்ட்
யாழ் மாநகர முதல்வர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − five =

*