;
Athirady Tamil News

மத்திய-மாநில அரசுகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை- ஜி.கே.வாசன் பேச்சு..!!

0

அரியலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் த.மா.கா. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

த.மா.கா. ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த ஆர்வம் இன்றும் மக்களிடம் உள்ளதை காண முடிகிறது. லட்சியத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி த.மா.கா. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே 2,3 புயல் தாக்கிய போதும் மத்திய அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை. ரூ.1000 கோடி நிவாரணம் என்பது போதுமானதல்ல. கூடுதலாக நிதியை அரசு வழங்க வேண்டும்.

வீடுகளை இழந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிதர வேண்டும். மத்தியில் உள்ள பா.ஜ.க. மதவாத கட்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. அரசுகளின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறைந்து வருவது தெரிகின்றது.

மாநில அரசை பொருத்த மட்டில் விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கும் அரசாக இல்லை. மக்கள் விரும்பாத எதிர்க்கின்ற திட்டங்களை செயலாக்கும் அரசாக மத்திய மாநில அரசுகள் உள்ளது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு தருவதாக தெரிகிறது. அதனை கண்டித்து வரும் 8-ந்தேதி கிருஷ்ணகிரியில் த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு மாற்று நிலைபாட்டில் ஈடுபட கூடாது. அங்கு பணியில் இருந்தவர்களுக்கு அரசு மாற்று வேலையை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி தமிழகத்தில் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வருவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க கூடாது. பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி உள்ளிட்ட பிரச்சினைகளில் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்தவுடன் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறிய மோடி இதுவரை தர வில்லை. மேலும், கருப்பு பணத்தை இதுவரை மீட்கவில்லை. பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு மக்களின் மீது அக்கறையில்லை. புயல் நிவாரணத்துக்கு மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்பை பிரதமர் பார்க்காதது கண்டனத் திற்குரியது. த.மா.கா.எந்த பலமும் இல்லாமல் மக்கள் பலத்தை மட்டுமே நம்பி இயங்கும் கட்சி. தேர்தல் நேரத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்கும். அக்கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அரியலூர் மாவட்ட த.மா.கா. சார்பில் ஜி.கே.வாசனுக்கு வீரவாள் வழங்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் ரூ.1லட்சும் நிவாரணத்துக்கான காசோலை ஜி.கே.வாசனிடம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில துணை தலைவர் ஞான தேசிகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.மூப்பனார், சுரேஷ் மூப்பனார், மாநில பொதுச் செயலாளர் கோவை தங்கம், நிர்வாகிகள் சித்தன், விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள்,தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*