;
Athirady Tamil News

இளைஞர்களை மோடி வஞ்சித்து விட்டார்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

0

200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று இங்குள்ள பல மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் செய்து அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், ஆல்வார் மாவட்டம், மாலகேடா நகரில் இன்று பிற்பகல் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், 2014-பாராளுமன்ற தேர்தலின்போது ’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலை அளிப்போம்’ என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, நாட்டில் உள்ள படித்த, வேலையில்லாத இளைஞர்களை வஞ்சித்து விட்டார் என குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக இளைஞர்களை மோடி வஞ்சித்து விட்டார். இதே ஆல்வார் மாவட்டத்தில் வேலை கிடைக்காத 4 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

2014-ம் ஆண்டு தேர்தலின்போது ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் நான் உங்களது பாதுகாவலனாக இருப்பேன் என்று அவர் பேசினார். ஆனால், நாட்டின் பாதுகாவலன் ஆனபிறகு, சில தொழிலதிபர்களுக்கு மட்டும் அவர் பாதுகாவலராக மாறிவிட்டார்.

ஒவ்வொரு மேடைப்பேச்சின்போதும் பாரத மாதா கி ஜே என்று கூறும் மோடி, பாரத மாதா என்றால் இந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களை குறிக்கும் என்பதை மறந்து விட்டார். மக்களை மறந்துவிட்டு பாரத மாதாவுக்கு சேவை செய்யாமல் அனில் அம்பானிக்கு மட்டும் அவர் சேவை செய்து வருகிறார்.

தனக்கு வேண்டிய சில தொழிலதிபர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்த மோடி, ராஜஸ்தானில் உள்ள விவசாயிகளின் கடனில் ஒரு ரூபாய்கூட தள்ளுபடி செய்ய முன்வரவில்லை.

இப்படிப்பட்டவர் பாரத மாதா கி ஜே என்று கூறுவதை விட்டுவிட்டு, அனில் அம்பானிக்கு ஜே, மெகுல் சோக்சிக்கு ஜே, விஜய் மல்லையாவுக்கு ஜே என்றுதான் இனிகூற வேண்டும் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசி வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − four =

*