;
Athirady Tamil News

ஆரோக்கியம் உங்கள் சாய்ஸ்!!(மருத்துவம்)

0

உங்களுக்கு வீட்டில் தினமும் உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கமுண்டா? ஜிம் போகிறீர்களா?

சான்ஸே இல்லை என்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் காரணங்கள் ஏராளம் இருக்கும். அவை எல்லாம் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வதற்கான சமாதானங்கள் என்பதை அறிவீர்களா?!

ஜிம்மா… எனக்கா? நான் சரியான வெயிட்லதான் இருக்கேன் என்று மார்தட்டிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு உடற்பயிற்சி தேவையா என்பதை உங்கள் உடல் மட்டுமே தீர்மானிப்பதில்லை. உங்கள் உடலுழைப்பும், இயக்கமும்தான் தீர்மானிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டரின் முன்னால் உட்கார்ந்தபடி வேலை செய்கிறவர் என்றால் சீக்கிரமே உங்களுக்கு தோள்பட்டை வலியும், முதுகுவலியும் வரலாம். டூ வீலரில் நீண்ட தூரம் பயணம் செய்கிறவர் என்றால் முதுகுவலி வரலாம். எனவே, உடல் பருமன் இருந்தால்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. ஆரோக்கியமான வாழ்வுக்கும் அது அவசியம் என உணருங்கள்.

முதலில் ஃபிட்னஸ் நிபுணரை அணுகுங்கள். உங்கள் எடை மற்றும் உயரத்துக்கேற்ற பி.எம்.ஐ இருக்கிறதா என்று சரி பாருங்கள். பி.எம்.ஐ அதிகமிருக்கிறதா? அன்றே ஜிம்மில் சேர்வதென முடிவெடுங்கள். ஜிம்மெல்லாம் சரிப்படாது என்றால் உங்களுக்கேற்ற ஜிம்மில் சேர்வதென முடிவெடுத்தால் போதாது. அந்த இடம் சரியானதுதானா, அங்குள்ள ஃபிட்னஸ் நிபுணர்கள் முறைப்படி படித்து, சான்றிதழ் பெற்றவர்களா என பார்க்க வேண்டும்.

எக்சர்சைஸ் எல்லாம் குழந்தை பெற்ற பெண்களுக்கும், நடுத்தர வயசுப் பெண்களுக்கும்தான் என்கிற எண்ணமும் பல பெண்களுக்கு உண்டு. அதுவும் தவறு. நிறைய இளம்பெண்களுக்கு PCOD எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கிறது. அது உடல்பருமனுக்கு காரணமாகலாம். டீன் ஏஜிலிருந்தே உடற்பயிற்சி செய்கிற பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டால் பி.சி.ஓ.டி பாதிப்பு குறைவதுடன், பருமன் ஏற்படுத்தும் பல பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே அண்ட விடாமல் செய்யலாம்.

ஜிம்முக்குப் போகலாம்தான்… ஆனால் நிறுத்திட்டா மறுபடி உடல் எடை அதிகமாயிடுமாமே என்கிற பயத்தின் காரணமாக அதைத் தவிர்ப்பவர்களும் உண்டு. அதுவும் தவறான நம்பிக்கையே. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்கிற வரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பார்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்வார்கள், அதை நிறுத்தியதும் உணவுக் கட்டுப்பாடு தளர்ந்து, கண்டதையும் சாப்பிடுவார்கள். தினசரி உடற்பயிற்சி என்பதும் மாறிப் போகும். இப்படி இல்லாமல், ஜிம்முக்கு போவதை நிறுத்தினாலும் உணவுக்கட்டுப்பாட்டையும் தினசரி உடற்பயிற்சியையும் தவறாமல் செய்கிறவர்களுக்கு நிச்சயம் எடை ஏறாது.

எனக்கும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என ஆசைதான். ஆனால், ஒரு வாரத்துக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. மறுபடி உடற்பயிற்சியில்லாத வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறேன். என்ன செய்வது?

– இது பலரின் கேள்வி.

எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு முறையான பழக்கமாக மாற குறைந்தது 21 நாட்கள் முதல் அதிகபட்சம் 48 நாட்கள் வரை ஆகும். எனவே, எப்படியாவது முயற்சி செய்து அந்த இலக்கை எட்டிவிடுங்கள்.

20 நாட்கள் உடற்பயிற்சி செய்த நீங்கள், 21-வது நாள் அதிலிருந்து பின் வாங்கினாலும் அத்தனை நாட்களாக நீங்கள் செய்த முயற்சிகள் வீண். ஒரு நாள் தொடர்ந்திருந்தால் இலக்கை எட்டியிருப்பீர்கள். ஆரோக்கியம் என்பது உங்கள்
வாழ்நாளின் அம்சமாக மாறியிருக்கும்.

சேர்ந்து செய்கிறபோது சில விஷயங்கள் ரசிப்புக்குரியதாக இருக்கும். உடற்பயிற்சியையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடன் உங்கள் நண்பர்கள் யாரையாவது உடற்பயிற்சி பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள்.

இருவருக்குள்ளும் யார் சீக்கிரம் ஃபிட்னஸ் லட்சியத்தில் ஜெயிப்பது என போட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாள் உடற்பயிற்சியை மிஸ் பண்ணினாலும் அந்த நபர் இன்னொருவருக்கு ஏதேனும் அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என பேசிக் கொள்ளுங்கள். ஒரு நாள்கூட உங்கள் பயிற்சியை தவறவிடத் தோன்றாது.

‘ஜிம்முக்குப் போகவும், எக்சர்சைஸ் செய்யவும் டைம் இல்லை’ என்பது பலரும் சொல்லும் சாக்கு. ஒரு நாளைக்கு உங்கள் நண்பர்களிடமும், அன்புக்குரியவர்களிடமும் எத்தனை மணி நேரம் போன் பேசுவீர்கள்? அப்படிப் பேசும்போது வாக்கிங் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். ட்ரெட் மில்லில் நடந்தபடியே பேசலாம். சீரியல் பார்த்துக் கொண்டே ஸ்டாண்டிங் சைக்கிளை மிதிக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் முடிந்துவிடும்.

தினமும் உங்கள் ஒரு வேளை உணவை பழங்கள் அல்லது பச்சைக் காய்கறிகளாக சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியோடு இந்த உணவுப்பழக்கமும் கடைப்பிடிக்கப்பட்டால் எடை விஷயத்தில் சீக்கிரமே உங்கள் இலக்கை அடைவீர்கள்.

சரியான அளவுள்ள உடைகளை அணியுங்கள். பெரிதான அளவில் அணியும்போது உங்கள் உடலின் அளவுகள் தெரியாமல் போகலாம். கரெக்ட் ஃபிட்டிங்கில்தான் பிதுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் தொப்பையும், இடுப்புச் சதையும் தெரியும். நான்கு பேராவது அதைச் சுட்டிக்காட்டி உங்களிடம் விசாரிக்கும்போதுதான் ஃபிட்னஸ் பற்றிய உங்கள் அக்கறை எட்டிப் பார்க்கும்.

‘வெயிட்டைக் குறைச்சிடலாம்தான்…. ஆனா எனக்கு அழகே என் கொழுகொழு முகம்தான். வெயிட் குறைஞ்சா முகமும் இளைச்சிடுமே’ என்கிற காரணமும் பலரிடம் உண்டு. அதெல்லாம் தவறான நம்பிக்கை. உங்கள் எடை குறையும்போது ஒட்டுமொத்த உடலிலுள்ள உபரிக்கொழுப்பும் குறையும் என்பது உண்மையே. ஆனால், அது உங்களை இன்னும் இளமையாகக் காட்டுமே தவிர அவலட்சணமாக்கிவிடாது. கவலை வேண்டாம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + eighteen =

*