;
Athirady Tamil News

இளஞ் சைவப்புலவர் தேர்வில் யாழ். மாற்றுத் திறனாளி மாணவன் சாதனை!! (படங்கள், “வீடியோ செய்தி”)

0

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இவ்வருடம் நடாத்திய இளஞ்சைவப்புலவர் தேர்விற்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனான கலாமோகன் பிரகான் குறித்த தேர்வில் முதலாம் தரத்தில் சித்திபெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் நேற்று சனிக்கிழமை(15-12-2018) முற்பகல்-08.30 மணி முதல் யாழ்.வண்ணை நாவலர் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த விழாவில் கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் கலாநிதி- சுகந்தினி சிறீமுரளிதரன், அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தப்பிள்ளை ஆகியோர் இணைந்து முதலாம் தரத்தில் சித்திபெற்ற மேற்படி மாணவனுக்கான இளஞ்சைவப்புலவர் பட்டத்தை சம்பிராதயபூர்வமாக வழங்கி சிறப்பித்தனர்.

13.01.1994 இல் யாழ். புலோலி தெற்கில் பிறந்த கலாமோகன் பிரகான் மாற்றுத் திறனாளி மாணவராவார்.

இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக சுன்னாகம் வாழ்வகத்தில் இணைந்து கல்வி கற்று வருகின்றார். கடந்த- 2016 ஆம் ஆண்டு க. பொ. த உயர்தரப் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற இவர் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு கலைப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.

இவர் நேற்றைய தினமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பரீட்சையொன்றில் தோற்றிவிட்டே இளஞ் சைவப்புலவர் பட்டமளிப்பினைப் பெற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டார். சபையில் கூடியிருந்தோரின் பலத்த கைதட்டலுக்கு மத்தியில் மேற்படி பட்டமளிப்பை ஏற்றுக் கொண்டார்.

இணுவிலில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த பயிற்சி மையத்தில் சைவசித்தாந்தம் பயின்று வரும் இவர் இந்து கலாசாரத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற ஆன்மீகப் பிரசார பயிற்சி நெறியிலும் இணைந்து பயின்று வருகின்றார். அத்துடன் இவர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவனுமாவார்.

மாற்றுத் திறனாளியாகவிருந்த போதும் தனது இடைவிடாத முயற்சியினாலும், சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற இல்லத்தினரின் பூரணமான அரவணைப்பாலும் பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் கலாமோகன் பிரகான் கல்வித் துறையில் பிரகாசித்து வருவது பாராட்டுதற்குரியது.

அந்த வகையில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இவ்வருடம் நடாத்திய இளஞ்சைவப்புலவர் தேர்வில் முதலாம் தரத்தைப் பெற்றுச் சாதனை பெற்றமைக்காக அவரை மனதாரப் பாராட்டி வாழ்த்துவதுடன் மென்மேலும் பல்வேறு சாதனைகள் படைக்கவும் வாழ்த்துவோம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*