;
Athirady Tamil News

வீட்டை விட்டு தப்பியோடிய சவுதி இளம்பெண்ணுக்கு அடைக்கலம் அளித்தது கனடா..!!

0

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணான ரஹாஃப் முஹம்மது அல்-குனுன் சமீபத்தில் இஸ்லாம் மதத்தை துறந்ததுடன் பெற்றோருக்கு தெரியாமல் துபாயில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக பல வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.

அவரது இந்த நடத்தைக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால் இவ்விவகாரம் பலரின் கவனத்தை கவர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் தனது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று அஞ்சிய ரஹாஃப், வழியில் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் வந்து சேர்ந்தார்.

பாங்காக் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் தஞ்சம் கேட்டு மனு அளித்தார். அங்கு ஒரு அறை எடுத்து தங்கிய அவர், தனது கைபேசி மூலம் அவசரமாக டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். டுவிட்டர் பக்கத்தின் மூலம் தன்னுடைய நிலையை உலக மக்களுக்கு தெரியப்படுத்தினார். ஒரு வாரத்தில் அவருக்கு டுவிட்டரில் சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் குவிந்தனர்.

அகதியாக வந்த தன்னை தாய்லாந்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து அகதிகள் முகாமில் அடைக்கலாம். சிறைக்கும் அனுப்பலாம் என்று கருதிய அந்த இளம்பெண், அவர் தங்கியிருந்த அறையின் கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு தனது டுவிட்டர் பிரசாரத்தை நடத்தி வந்தார்.

அதேவேளையில், அவருக்கு டுவிட்டர் மூலம் ஏகப்பட்ட கொலை மிரட்டல்களும் வந்ததால் திடீரென்று தனது டுவிட்டர் பக்கத்தை அவர் முடக்கினார். எனினும், #SaveRahaf என்ற ஹேஷ்டாக் மூலம் அவருக்கு ஆதரவான பிரசார இயக்கத்தை பலர் நடத்தி வந்தனர். சமூக வலைத்தளங்களில் #SaveRahaf வைரலானது.

இதற்கிடையில், அவருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை அளிக்கக் கூடாது என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தாரும் பாங்காக்கில் உள்ள சவுதி தூதரக அதிகாரிகளும் வலியுறுத்தினர். இந்த பிரச்சனை சர்வதேச மனித உரிமை அமைப்பின் கவனத்துக்கு சென்றது.

உயிர் பயத்தில் நடுங்கி கொண்டிருக்கும் ரஹாஃப் முஹம்மது அல்-குனுன்-க்கு எந்த நாடாவது அடைக்கலம் அளிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேவேளையில், அந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும் தாய்லாந்துக்கு புறப்பட்டனர்.

இந்நிலையில், அவரது நிலைமையை கண்டு மனமிரங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, ரஹாஃப் முஹம்மது அல்-குனுன்-க்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தார். இதையடுத்து, மனித உரிமை அமைப்பு அதிகாரிகள் மற்றும் தாய்லாந்து போலீசார், குடியுரிமைத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் ரஹாஃப் டொரான்ட்டோ நகருக்கு விமானம் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

சர்வதேச மனித உரிமை அமைப்பின் கோரிக்கையை ஏற்று கனடா அரசு இந்த முடிவுக்கு வந்ததாக டுருடேயு குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கை ஏற்கனவே பூசலில் இருக்கும் சவுதி-கனடா உறவில் மேலும் விரிசலையும், பகையையும் உருவாக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இஸ்லாமிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நடத்திவரும் சவுதி அரேபியாவில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக கனடா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சமீபத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கி நாட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் கனடா அரசு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கனடாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் சவுதி துண்டித்து விட்டது. ரியாத்தில் இருந்த கனடா தலைமை தூதரும் திருப்பி அனுப்பப்பட்டார்.

சவுதி அரசுக்கு எதிராக வலைத்தளங்களில் (பிளாக்) கருத்து வெளியிட்ட பலரை அந்நாட்டு அரசு கைதுசெய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. அவர்களில் கனடா நாட்டின் கியூபெக் நகரில் வசிக்கும் ரைஃப் படாவி என்ற பெண்ணின் சகோதரரான சமர் படாவி என்பவரும் ஒருவராவார்.

சமர் படாவி உள்பட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தற்போது கனடா அரசு மிக தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.

இத்தனை விவகாரங்களுக்கு இடையில் சவுதி பெண்ணுக்கு கனடா தஞ்சமளித்துள்ள சம்பவம் அந்நாட்டின் ஆட்சியாளர்களின் ஆத்திரத்தை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 10 =

*