;
Athirady Tamil News

அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் என்பது ஒரு பகல் கனவு: தவராசா!!

0

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு எனப் பல தடைகளைத் தாண்டி அரசியலமைப்பு வரைபு நிறைவேற்றப்படும் என்பது ஒரு பகல் கனவு என முன்னாள் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கையில்,

“கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் இவ்வரைபு சமர்ப்பிக்கப்பட்ட போது அங்கு பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இதற்கு சான்று பகிர்கின்றது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 56 பேர் மட்டுமே அங்கு பிரசன்னமாக இருந்துள்ளனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்க்கட்சி அணியினர் இதற்கு அதரவு வழங்க மாட்டார்கள் என்பது முற்றாக தெரிந்திருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசுடன் சேர்வதன் மூலம் இதனை சாதிக்க முடியும் என்ற ஓர் நம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்தும் காணப்படுகின்றது.

இந்நிலையில், இவ்வரைபு முழுமையான தமிழ் மக்களின் அபிலாசைகளான சமஸ்டி, இணைந்த வடக்கு கிழக்கு என்பவற்றை வழங்குவதற்கான சொற்பதங்கள் அடங்கிய ஒரு வரைபாக இல்லாவிட்டாலும் சமஸ்டிக் குணாம்சங்கள் அடங்கிய, மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் ஒரு தெளிவான அதிகாரப்பகிர்வினை உள்ளடங்கிய வரைபாக காணப்படுகின்றது.

இருப்பினும் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு எனப் பல தடைகளைத் தாண்டி இவ்வரைபு நிறைவேற்றப்படும் என்பது ஒரு பகல் கனவு என்றே கருதவேண்டியுள்ளது” எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*