;
Athirady Tamil News

அரசியலமைப்பை நிறைவேற்ற அமெரிக்கா, இந்தியா வலியுறுத்தும் நம்ப முடியும்? – லலீசன்!!

0

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவது இலகுவான காரியமல்ல. 1947 ஆம் ஆண்டு தொடக்கம் ஆளுமை மிக்க தமிழ்த் தலைமைகளை சிங்களத் தலைமைகள் ஏமாற்றுவதே வரலாறாகவுள்ளது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அமெரிக்கா வலியுறுத்தும் இந்தியா வலியுறுத்தும் என்பதை எப்படி எங்களால் நம்ப முடியும்? என்று வினாத் தொடுத்தார் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 12.01.2019 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் அரசியல் ஆர்வலர் குழாத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கருத்தரங்கிற்கு தலைமைவகித்து உரையாற்றும் போதே செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் இன்று அரசியல் என்ற பதத்தில் இருந்து யாரும் ஒதுங்கி இருக்க முடியாது. உண்ணும் உணவில் இருந்து குடிக்கும் நீரில் இருந்து அரசியல் இருக்கின்றது. அரசியலைப் புறந்தள்ளி வாழ்ந்துவிடுவோம் என்று யாரும் ஒதுங்கி இருக்க முடியாது. இதனாலேயே சிவில் சமூகப் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தங்கள் கருத்துரைகளை முன்வைக்க வருகை தந்துள்ளனர். இதில் சமயத் தலைவர்களுக்கும் ஆன்மீக வாதிகளுக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டிருப்பது நல்லதோர் மாற்றம். அது இன்றை கருத்தரங்கில் கைகூடியிருக்கின்றது.

கடந்த காலம் முதல் தமிழ்த் தலைமைகள் தமது புத்திசாதுரியத்தால் நாட்டின் தேசிய நலனுக்காக உழைத்துள்ளனர். சேர். பொன். இராமநாதன், சட்டத்தரணி ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற வரிசையில் இன்று எம். ஏ. சுமந்திரன் அவர்களும் இடம்பெற்றுள்ளார்.
இதன் அறுவடையாகத் தமிழ்த் தரப்பிற்குக் கிடைத்த அறுவடைகளை மீட்டிப் பார்க்கின்ற போது இந்த ஆளுமைகளின் ராஜதந்திரத்தால் தமிழினம் பெற்ற நன்மை என்ன என எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கின்றது.

கடந்த ஒக்டோபர் 26 புரட்சியை நேர்ப்படுத்தி நீதிமன்றத்தின் ஊடாக ஜனநாயக உரிமையை நிலைநிறுத்திய தமிழர் தரப்பு என்ன கைம்மாறைப் பெறப்போகின்றது?

புதிய அரசியல் அமைப்புப் பற்றி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றார். ஆனால் பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த போன்றோருடைய கருத்துக்கள் எங்களுள் அவநம்பிக்கையையே விதைக்கின்றன. அகிம்சை வழியில் போராடி பின் ஆயுத வழியில் போராடி இன்றும் உரிமை கிடைக்க வேண்டும் என்ற தமிழர் தரப்பின் அபிலாசைகளுக்கு ராஜதந்திர வழியில் வெற்றியை பெறமுடியும் என நம்பிக்கை ஏற்படுத்துகின்ற முயற்சியில் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் இறங்கி இருக்கின்றார். தேர்தல் நெருங்கும் நிலையில் எமது கரங்களைப் பலப்படுத்துங்கள் என்பதற்கான கோஷமாகவா இதை நாம் கொள்வது?

ஐக்கிய தேசியக் கட்சி அரசமைக்கும் போது நிபந்தனையற்ற ஆதரவு என்ற நிலையை வெளிப்படுத்திய பின்னர் எப்படி தீர்வுக்கு நிபந்தனைகளை விதிக்க முடியும். அரசமைக்கும் போது ஏற்பட்ட வாய்ப்புக்களை தமிழ்த்தரப்பினர் தவறவிட்டுவிட்டனரா? என்றவாறு தனது உரையை ஆற்றினார்.

தொடர்ந்து வல்வெட்டித்துறை சிவன் கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ ப.மனோகரக்குருக்கள் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்துச் சமயங்களும் அனைத்து இனங்களும் சமமாக வாழக் கூடிய தீர்வு அவசியமானது என்பதை வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய யாழ். தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் அதிவண. டானியல் தியாகராஜா, ஏக்கிய ராஜ்ஜிய என்ற பதம் ஐக்கிய இலங்கை என்றவாறாக அமையுமாறு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். இதனைத் தெளிவாக வலியுறுத்த வேண்டும் எனக் கோரினார்.

அதனை அடுத்து உரையாற்றிய யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் எனக்குறிப்பிட்டதோடு போர் வலியைத் தாங்கியபின் தான் சந்தித்த அனுபவங்களையும் முன்வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் கலாநிதி சு.சிவகுமார், அரசியல் அமைப்பு அமுலாக்கத்திற்கு ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் நகர கட்டுமாணங்கள் குறித்துச் சிந்திக்கும் போது தெளிவான திட்டமிடல் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

நிறைவாகக் கருத்துரை வழங்கிய மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் பல வினாக்களை முன்வைத்தார். சனநாயக வழியில் சிங்களவர்களிடம் இருந்து தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டதோடு ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்னர் நம்பிக்கை ஊட்டுகின்றவர்கள் ஆட்சியைப் பெற்ற பின்னர் உரிமைகளைக் கிடைக்கவிடாமல் செய்வதே இந்த நாட்டின் சனநாயகமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.

இறுதியாக சிவில் சமூகத்தினர் முன்வைத்த கருத்துக்களை அடியொற்றி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பதிலுரை ஆற்றினார். மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் அவசியம் குறித்து உரையாற்றியதோடு ஊடகங்கள் விடயங்களைத் தெளிவாக ஆராய்ந்தபின்னர் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படக் கூடாது எனவும் வேண்டிக்கொண்டார்.
புதிய அரசியல் அமைப்பு கைகூடுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகளவில் இருப்பதாகப் பல கருத்துக்களை உதாரணங்கள் காட்டிக் குறிப்பிட்டார்.
நிகழ்வில் மதத்தலைவர்கள் அரசியல் தலைவர்கள் கல்வியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

உலக அரங்கில் ஆதரவு தற்போது தமிழர்களுக்கு கிடைத்துள்ளது – சுமந்திரன்!!

“கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு !! (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 13 =

*