“பேட்ட” “விஸ்வாசம்”; வவுனியாவில் நடந்தது என்ன? “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு”…

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு… (சமூகவலைத் தங்களில் இருந்து)
வவுனியாவில் தம் தலைவனின் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்று இரு தமிழ்ப் படத் தீவிரவாத குழுக்களிற்குள்ளே நடந்த உரிமைப் போராட்டத்தில் ஒரு தமிழ்ப் படத் தீவிரவாதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கிறாராம். இந்தப் போராட்டத்தினால் வவுனியா – கண்டி வீதி போக்குவத்தும் தடைப்பட்டதாம்.
தீவிரவாதிகளின் சண்டித்தனத்தினால் படம் பார்க்காமல் திரும்பிய அகிம்சை வழி ரசிகர்கள் தம் வாழ்வின் பொன்னான சந்தர்ப்பத்தை இழந்து விட்டோம் என்று கதறி அழுத கண்ணீரினால் வவுனியாவின் குளங்கள் எல்லாம் நிறைந்து கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதாம்.
இந்தக் கொடுமை நமது மண்ணில் தான் நடந்திருக்கிறது. செயங்கொண்டார் பாடிய கலிங்கத்து பரணியில் போர் நடந்த இரவுகளில் பேய்கள் பிணம் தின்று குருதியும், நிணமும் குடிக்கும் கற்பனைக்காட்சிகளை விட பயங்கரமான கொலைகளும், வன்முறைகளும் நடந்த நம் தேசத்து மண்னில் தான் இது நடந்திருக்கிறது.
இலங்கை இராணுவம் என்னும் கொலைகாரர்களின் வன்முறைகளிற்குள் சிக்கி, சிதறி நமது மக்கள் அவலக்குரல் எழுப்பி மரணித்த மண்ணில் தான் இந்த ரசிகர்கள் என்னும் வீணர்கள் கும்பல்கள் ஒரு மூன்றாந்தர தமிழ்ப்படத்திற்காக அடிபட்ட அவலம் நடந்திருக்கிறது.
மன்னாரில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட மரணக்குழிகளில் இருந்து இருநூற்று எண்பத்துமூன்று மனிதர்களின் உடல்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. அவற்றில் இருபத்தொரு பிஞ்சுக் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. துள்ளித் திரிந்த குழந்தைகளைக் கூட துரத்திச் சென்று கொன்ற கொலையாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தக் குழந்தைகள் போல கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எமது குழந்தைகளின் மரணங்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை நோக்கி எடுக்கப்படும் போராட்டங்களில் மிகக் குறைவானவர்களே கலந்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு பேர் கூடிச் சண்டையிடும் கேவலமான கூட்டமாக நமது இளைஞர்களில் ஒரு பகுதியினர் உருவாகியிருக்கிறார்கள்.
பச்சிளம்பிள்ளைகள் பாலிற்கு அழுகையில் கல்லிற்கு பால் ஊற்றுகிறார்கள் என்று தமிழ்நாட்டு பகுத்தறிவாளர்கள், கடவுள் என்னும் கற்சிலைக்கு பால் ஊற்றுபவர்களை பார்த்து கோபத்தோடு அன்று கேட்டார்கள்.
பாலும் இன்றி, பால் தந்த தாயும் இன்றி பல ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாக நெல்லிக்காய்மூட்டை சிதறியது போல தமிழ்மண் எங்கும் சிதறிப்போயிருக்கிறார்கள். இந்தச் சின்னஞ் சிறார்களின் வாழ்விற்கான வேலைத் திட்டங்களில் நெஞ்சு நிறைய அன்புடன் உழைப்பதற்கு மிகச் சில மனிதர்களே இருக்கிறார்கள்.
ஆனால் எது விதமான கலைத்துவமோ, யதார்த்தமோ அறவே இல்லாத தமிழ்படங்களில் வந்து போகிற கோமாளிகளிற்காக தமது பணத்தையும், நேரத்தையும் ஒரு பெருங் கூட்டமே வீணடிக்கிறது.
“ஜய, ஜய சங்கர” என்ற கதையினை எழுதி பிராமணியத்திற்கும், பின்பு காங்கிரசு களவாணிகளிற்கும் தலை சாய்ப்பதற்கு முன்பு முற்போக்கு, இடதுசாரி கொள்கைகளை தூக்கிப் பிடித்து ஜெயகாந்தன் எழுதிய கதை “சினிமாவிற்கு போன சித்தாளு”. அன்றைய காலகட்டத்து தமிழ்ச் சினிமா உழைக்கும் மக்களது வாழ்க்கையை எப்படி சீரழித்தது என்பதன் இலக்கிய ஆவணமாக இந்தக் கதை அமைந்திருக்கிறது. அரசியலிலும், சினிமாவிலும் உச்சத்தில் இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனை அம்பலப்படுத்தி இந்தக் கதையை ஜெயகாந்தன் எழுதியிருந்தார்.
இலங்கையின் வவுனியாவில் போக்குவரத்தை தடை செய்யும் அளவிற்கு அடிபட்ட கூட்டம் “சினிமாவிற்கு போன சித்தாளு” காலகட்டத்து சமுதாயத்து பகுத்தறிவற்ற தன்மையையும், பாமரத்தன்மையையும் நாம் எள்ளளவும் கடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கிறது.
தமிழகத்தில் இதே படத்திற்கு பாலபிசேகம் செய்ய கட் அவுட்டில் ஏறிய ஒருவர் கீழே விழுந்து மரணம் அடைந்திருக்கிறார். அரை அடிக்கு உடம்பு முழுக்க பவுடரை பூசிக்கொண்டு அசடு வழிய ஓடித் திரியும் வேதாளங்களின் படங்களிற்காக உயிரை விடும் கொடுமையை என்னவென்று சொல்ல.
சாராயங்கள், போதைப்பொருட்கள், நீலப்படங்கள் போன்றே பொழுதுபோக்கு என்ற பெயரில் கொட்டப்படும் குப்பைகள் எவ்வாறு சமுதாயத்தை சீரழிக்கின்றன என்பதற்கு இந்த அவலங்களை விட வேறு சான்றுகள் எதுவும் தேவை இல்லை.
(படித்ததில் பிடித்தது )
“விஸ்வாசம்”; வவுனியா வசந்தி திரையரங்கில் அடிதடி, பலர் காயம்..!. (படங்கள்)
அட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்!! (வீடியோ)