;
Athirady Tamil News

காலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என்று கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகள் – சக்திவேல்!!

0

காலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என்று கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிக்கின்றார்கள் சமூக செயற்பாட்டாளர் பாதிரியார் சக்திவேல் தெரிவிப்பு;

காலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என்று கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிக்கின்றார்கள் என சமூக செயற்பாட்டாளரும் அரசியல்கைதிகளின் விடுதலைக்காக செயற்பட்டு வரும் பாதிரியார் சக்திவேல் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று 19.1 சிவில் சமூக பிரதிநிதிகளை தனியார் விடுதியொன்றில் சந்தித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

2018ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நடந்த ஆட்சி அதிகாரம் தொடர்பான இழுபறி நிலை 2019ம் ஆண்டிலும் தொடரத்தான் போகின்றது. அதிலும் இந்த ஆண்டு தமிழர்களிற்கு எதிரான ஒரு ஆண்டாக தெற்கு சமூகம் பாவிக்கப்போகின்றது. என்கின்ற செய்தியோடு 2019ம் ஆண்டு தமிழ் மக்களை பொறுத்தவரை இரண்டு வகையில் இது முக்கியமான ஆண்டாகும். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பத்தாவது ஆண்டாகவும், பயங்கவாத தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 40வது ஆண்டில் காலடி வைக்கின்றோம்.

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்ததும் மாத்திரமல்ல அதுவே தமிழ் மக்களுடைய அரசியலையும். துமிழ் மக்களின் இருப்பையும், தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் சிறைக்குள் தள்ளியது என கூறினாலும் அது மிகையாகாது. இந்த அவலங்களோடு நாம் 2019ம் ஆண்டு காலடி வைத்திருக்கின்ற இந்தச்சூழலில் மன்னாரில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகளை தோன்டி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

2009ம் ஆண்டு நாங்கள் சடலங்களை கண்டோம், தற்போது நாங்கள் எலும்புக்கூடுகளை காண்கின்றோம். இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார். இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களிற்கு தற்போது அதிகாரம் கையளிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இது தமிழர்களிற்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்கின்ற செய்தியைதான் சொல்கின்றது. யார் இந்த யுத்தக்குற்றங்களிற்கு காரணம் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்களோ, அவருக்கு இராணுவத்தில் பாரிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனால் இந்த அரசாங்கம் தமிழர்களிற்கு கூறும் செய்தி என்ன?.

அதாவது நீங்கள் எங்களிற்கு எதிராக செயற்பட்டீர்கள். தற்போது உங்களிற்கு எதிராக செயற்படுவதற்கு நாங்கள் எல்லா வகையிலும் தயாராகி விட்டோம் என்ற செய்தியையே ஜனாதிபதி கூறி நிற்கின்றார். அது மாத்திரமல்ல மகாவலி எல் வலையம் என்பதற்கூடாக காணிகளை அபகரிப்பதற்கு திட்டமிடுகிறார். ஆதை போன்றே தொல்பொருளியல் திணைக்களம் அபகரிக்கின்றது. வனஇலாகா திணைக்களமும் காணிகளை அபகரிக்கின்றது. அதற்கும் மேலாக மீன்பிடித்துறை அமைச்சர் கரையோர பிரதேசங்கள் எல்லாவற்றையும் கையகப்படுத்துகின்றார். இந்தநிலையில் வடக்கிலே நடைபெற்று வருகின்ற இன அழிப்பு தொடர்பாக சிவில் அமைப்புக்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ் மக்களினுடைய போராட்டங்களை சிதைப்பதற்கு திட்டமிட்டு செயற்படுகின்ற அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. அதேபோல் வெளியில் இருந்து பணம் உழைக்கின்ற அமைப்புக்களும் இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய கைகளிலே போராட்டங்களை எடுக்கின்றார்கள் இடைநடவிலே கைவிட்டு விடுகின்றார்கள். இது அவர்களுடைய அரசியலுக்கானது. இதன் காரணமாகத்தான் எமது போராட்டங்கள் சிதைந்து போய் இருக்கின்றன. இந்த சிதைவுக்கு காரணம் தெற்கு அரசியல் மாத்திரமல்ல எங்களுடைய தமிழ் அரசியல் தலைமைகள் என கூறிக்கொள்பவர்களும் இதற்கு காரணமாக இருக்கின்றார்கள். ஆகவே மக்களிற்கு தெளிவுபடுத்தி மக்களை கட்டியெழுப்புவதன் மூலமாகவே எமக்கான எதிர்காலம் இருக்கின்றது.

மக்களின் சக்தி ஒன்றுபட்டாலே அரசியல் கட்சிகளை இயக்க முடியும். 2009ம் ஆண்டு வரை இயக்கம் கட்சிகளை இயக்கியது. கட்சிகளும் இயக்கத்திற்கு பயந்து செயற்பட்ட காலம் இருந்தது. தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது. அந்த நிலையை மக்கள் தங்களது கைகளில் எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அரசியல் கட்சிகள் கட்சி அரசியலை நடாத்துகின்ற போது தமது சுயத்திற்காக செயற்படுகின்றார்கள் என்பது தமிழ் மக்கள் மட்டுமேயல்ல நாடே அறிந்த விடயம்.

அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் கூட எத்தனை பேர் பணத்திற்காக கட்சி மாறியதும் தெரியும் பின்பு மீண்டும் தமது கட்சிகளிற்கே வந்து சேர்ந்ததும் தெரியும். இவற்றிற்கு மத்தியில்தான் எமது தமிழ் கட்சிகளும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. இவர்களும் அதே குட்டையில் ஊறியவர்கள்தான். ஆகவே இவர்களும் காலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என கூறுபவர்கள்தான்.

இவற்றையெல்லாம் நம்பி ஏமாந்த தமிழ் மக்கள்தான் தற்போது இருக்கின்றார்கள். தற்போதும் அவர்களிற்கு வாக்களித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே அவ்வாறு வாக்களிக்கின்ற மக்கள் இருக்கின்ற வரையில் அவர்களும் ஏமாற்று அரசியலை செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

2009ம் ஆண்டுக்கு பின்னரான இன அழிப்பின் உச்சக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த தன்மை இன்னும் தொடருமாயின் தமிழ் மக்களின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குள்ளாக்கப்படும். இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுடைய அரசியலை யாழ் தீபகற்பத்திற்குள் உள்ளடக்குவதற்கே தெற்கு அரசியல் முயற்சித்துக்கொண்டு இருக்கின்றது. வடக்கையும் கிழக்கையும் பிரித்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் வன்னியையும் யாழ் தீபகற்பத்தையும் பிரிக்கின்ற செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதன் ஒரு அங்கமாகவே அவர்கள் வன்னி மக்களிற்கு பொருளாதார அபிவிருத்தியே தேவைப்படுவதாகவும், தீபகற்பத்திற்குள் இருப்பவர்களிற்கே அரசியல் தீர்வு தேவையாக இருப்பதாகவும் ஒரு பிரசாரத்தை முன்னெடுக்கிறார்கள்.

ஆகவே இந்த நேரத்தில் வன்னிக்கும் யாழ் தீபகற்பத்திற்கும் இடையில் பலமான உறவு ஏற்பட வேண்டும் என்பதோடு வடக்குக்கும் கிழக்குக்கும் பலமான உறவு ஏற்பட வேண்டும்.

இதே போல்தான் அவர்கள் 1000 ரூபா சம்பள பிரச்சனைக்கு போராடுகிறார்கள் என சொல்லப்பட்டாலும் கூட அதற்கு பின்னால் மலையகத்தில் பாரிய இன அழிப்பு இடமட்பெற்று இருக்கின்றது. அதில் ஒரு கட்டம்தான் 1000 ரூபா சம்பள உயர்வை கொடுக்க மாட்டோம் என கூறுவதும் கூட எனத்தெரிவித்திருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*