;
Athirady Tamil News

நான் கஜானாவை சுரண்டும் அரசியல்வாதி அல்ல- கமல்ஹாசன் பேச்சு..!!

0

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் தனியார் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். வைஷ்ணவ கல்லூரி மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கமல் பேசியதன் விபரம்:

நான் இங்கு வந்தது பொது நலத்திற்காக. நாளைய தமிழகம் எங்கே இருக்கிறது என்று சிலர் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் எனக்கு தெரிகிறது நாளைய தமிழகம் இங்கே என்று. புதிய அரசியலை உருவாக்கும் கூட்டம் இது என்று நம்புகிறேன். நான் உங்களை போன்ற வயதில் பேசி இருந்தால் கிராமங்கள் இந்நேரம் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறி இருக்கும். அரசியல் என்றால் தெரு தெருவாக உண்டியல் குலுக்குவது அல்ல. அது கடமை.

உங்கள் பிள்ளைகள் அற்புதமான தமிழ்நாட்டில் வலம் வர வேண்டும் அதற்கான விதையை நீங்கள் விதைக்க வேண்டும். பல்வேறு சாதனைகள் செய்ய முடியும் உங்களால் தமிழகத்திற்கு கை கொடுத்து தூக்கி விட முடியாதா? நாம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டால் கோழைகளின் ராணுவம் பயந்து நடுங்கும்.

அரசியல் என் கடமை என் வேலை அல்ல. நான் மிகவும் நேர்மையான அரசியல்வாதி. நடிப்பை விட்டு கஜானாவை சுரண்டும் அரசியல்வாதி அல்ல. அரசியலில் வந்து சேவை செய்ய வேண்டியது அல்ல. அது கடமை. சம்பளம் வாங்கிக்கொண்டு மேலும் சுரண்டினால் அது திருட்டு. திருடனுக்கு அளவுகோல் இல்லை.

இங்கிருந்து தான் அரசியல் தொடங்கவேண்டும். நேர்மையான அரசியல் வேண்டும் என்று நினைப் பவர்கள் அதற்கு அனுமதி அளிக்கவேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாங்கள் தத்தெடுக்கும் கிராமத்தில் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்க உள்ளோம். அந்த வேலை முடிந்தவுடன் நானே அதை சுத்தம் செய்ய உள்ளேன். உங்களால் முடிந்தவரை அரசியலுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

ஒரு கண்ணை அரசியலில் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது இவ்வளவு அநியாயம் நடக்காது. சினிமாவிற்கு பின் என் கடமையை செய்யப்போகிறேன். சொன்னான் செய்தான் சென்றான் என்ற போது நான் எப்போதும் வாழ்ந்துக் கொண்டே இருப்பேன். திட்டம் கொள்கையை காப்பாற்றப்போராடுவது. அதை மாற்றினால் இலக்கை அடையலாம் என்றால் மாற்ற வேண்டும்.

பொய் சொல்லக்கூடாது என்பது தான் எங்கள் முதல் கொள்கை. ஊழலை பெருக்கி வெளியில் தள்ள வேண்டும். அதற்கு பெரிய ஆயுதம் வேண்டும். அந்த ஆயுதத்தை தேடித்தான் இங்கு வந்துள்ளேன். கல்லூரி மாணவர்கள் முழுவதுமாக வாக்காளர் அட்டை வைத்துள்ளார்களா என்பதை சோதிக்கவேண்டும். எந்த கல்லூரி முதலில் செய்து முடிக்கிறதோ அவர்களே வெற்றியாளர்கள். ஓட்டின் முக்கியத்துவத்தை 100 பேரிடமாவது எடுத்துக்கூற வேண்டும். யாராக இருந்தாலும் யோசித்து வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை. நோட்டாவில் வாக்களிப்பது பெருமை அல்ல.

நல்ல சாயல் தெரியும் போது உதவிக்கரம் நீட்டுங்கள். புதிய வாக்காளர்கள் இளம் வாக்காளர்கள் தான் என்னுடைய ஆயுதம். தமிழன் என்பது தகுதி அல்ல. முகவரி. இந்த அரங்கில் இருக்கும் இளைஞர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கின்ற பல இளைஞர்களும் முதல் முறை வாக்காளர்களாக இருக்கக்கூடும். நீங்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்வதை மிகவும் பொறுப்புணர்வுடன் செய்திட வேண்டும்.

நான் அரசியல் கட்சி துவங்கியதற்கு முக்கிய ஊக்கசக்தியே இளைஞர்கள் தான். வாக்குகளை பணம் கொடுத்து வாங்க நினைப்பவர்களுக்கு எதிரான ஆயுதமே இளைஞர்கள் நீங்கள் தான். இன்று வாக்காளர் தினத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு கல்லூரியில் இருக்கும் மாணவ மாணவியரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்திட வேண்டும்.

அதை பிற கல்லூரிகளில் படிக்கும் உங்கள் சக மாணவியரிடம் பகிர்ந்து அவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்ய வைத்திட வேண்டும். இதை ஒரு போட்டியாக செய்திட வேண்டுகிறேன். எந்த கல்லூரி முழுவதுமாக அனைத்து மாணவியரையும் வாக்காளர்களாக பதிவு செய்து முடித்திடுகிறார்களோ அவர்களை பாராட்டி மரியாதை மக்கள் நீதி மய்யம் கட்சி செய்திடும்.

இங்கு மாற்றுத் திறனாளிகள் பலர் இருக்கின்றனர். இவர்களை கருணையுடன் பார்க்க வேண்டும் என்று பலர் சொல்கின்றனர். ஆனால் நான் இவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். வியந்து தான் பார்க்கிறேன். இருப்பதை வைத்துக் கொண்டு மற்றவர்கள் செய்ய முடியாததை இவர்கள் செய்கிறார்கள்.

இவர்களுக்கு நீங்கள் பரிதாபமோ கருணை காட்ட வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். தமிழக வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கும் வீல்சேர் வழங்குவதை எனது கடமையாக கருதுகிறேன்’.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − thirteen =

*