;
Athirady Tamil News

தண்ணீரின் பயன் அறிவோம்!! (மருத்துவம்)

0

நீரின்றி அமையாது உலகு!
மனிதனோ, மரமோ…
புல்லோ, புழுவோ…

எந்த உயிருக்கும் தண்ணீரே ஆதாரம். உணவு, உறக்கம் இல்லாமல்கூட ஒருவரால் உயிர் வாழ்ந்து விட முடியும். தண்ணீர் இல்லாமல் எதுவுமே சாத்திய மில்லை. மனித வாழ்க்கை சீராக இயங்க இன்றியமையாத திரவம் தண்ணீர். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அவசியம். 1 கிராம் உணவு செரிக்க, 5 மி.லி. தண்ணீர் தேவை. தோராயமாக ஒரு நாளைக்கு 500 கிராம் உணவு எடுத்துக் கொள்கிறோம் என வைத்துக் கொண்டால், 500 ஙீ 5 மி.லி, அதாவது, 2,500 மி.லி. தண்ணீர் தேவையில்லையா? இது உணவு செரிமானத்துக்கு மட்டுமே. மற்றபடி வேலை, வியர்வை போன்றவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால், குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அவசியமாகிறது.

தண்ணீரால் என்ன நன்மைகள்?

நிறைய தண்ணீர் குடிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களுக்கு பருமன் வராது. குறிப்பாக காலையில் எழுந்ததும் 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால், உள் உறுப்புகள் சுத்தமாகும். வளர்சிதை மாற்றச் செயல்பாடு மேம்படும். உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யாமல், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதிலும் வெயில் காலத்தில், உடல் வெப்பநிலை எகிறாமலிருக்க, தண்ணீர் அவசியம் என்பதால்தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. நமது உடலில் 60 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். அந்த அளவு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். குறையவும் செய்யலாம். அதிகமாவதை நீர்கோர்ப்பு (வாட்டர் ரிட்டென்ஷன்) என்றும், குறைவதை
உடலில் நீரற்ற வறட்சி நிலை (டீஹைட்ரேஷன்) என்றும் சொல்கிறோம்.

நீர்கோர்ப்புக்கான காரணங்கள்…

உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வது, மசாலா அதிகமுள்ள உணவு, அரிசி போன்ற எளிதில் ஜீரணமாகும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பது, பருமன், நீண்ட நேரம் நின்றபடியோ, நடந்து கொண்டோ, உடலை வருத்தி வேலை பார்ப்பது, ஒரே நிலையில் உட்கார்வது, கர்ப்பம்… சிலருக்குத் தூங்கி எழுந்ததும், முகமெல்லாம் வீங்கினாற்போல இருக்கும். களைப்பாகவே உணர்வார்கள். இதெல்லாம் உடலில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்னைக்கான அறிகுறிகள்.

சிறு நீரகக் கோளாறு உள்ளவர்கள், பருமனானவர்கள், ஹைப்பர் டென்ஷன் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த அறிகுறி இருந்தால், அது அவர்களது நோயின் விளைவாக இருக்கலாம். மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகே எதையும் செய்ய வேண்டும். மற்றபடி நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்கள் இப்படி உணர்ந்தால், அவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அரிசி உணவைக் குறைத்து, கோதுமை, கேழ்வரகு, ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். கீரை மாதிரியான நார்ச்சத்துமிக்க உணவுகள் அவசியம். உப்பின் அளவை உடனடியாகக் குறைத்தாக வேண்டும்.

தண்ணீர் கோர்த்துக் கொள்வது எத்தனை ஆபத்தானதோ, அதே மாதிரிதான் நீரற்ற வறட்சி நிலையும். 10 நபர்களில் ஒருவருக்கு இப்பிரச்னை வருகிறது. மயக்கம், தலைசுற்றல், களைப்பு, தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில் தண்ணீர் வற்றும்போது தீராத தலைவலி வரும். உடலுக்குத் தேவையான தண்ணீர் சேர்ந்த பிறகுதான், அந்தத் தலைவலி நீங்கும். அதிக வெயில் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகிய இரு விஷயங்களினால்தான் பெரும்பாலும் உடலில் தண்ணீர் வற்றும்.

நாக்கு வறண்டு போவது, உதடுகள் வெடிப்பது, இதயத்துடிப்பு அதிகமாவது, சிறுநீர் அடர்த்தியாக வெளியேறுவது போன்றவையும் இதன் விளைவுகளே… நம்மில் பலரும் செய்கிற தவறு என்ன தெரியுமா? தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிப்பது. அப்படியில்லாமல், அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பழக வேண்டியது அவசியம். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு டீஹைட்ரேஷன் பிரச்னை ரொம்ப சுலபமாக வரலாம். அதன் அடுத்த விளைவாக நுரையீரல் புற்றுநோய் தாக்கலாம். புகையை நிறுத்துவதும், அதிக தண்ணீர் குடிப்பதும்தான் தீர்வு.

எப்படிக் குடிப்பது?

தினம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானாலும், எல்லோராலும் வெறும் தண்ணீரைக் குடிக்க முடியாது. சிலருக்கு தண்ணீர் குடிப்பதென்றாலே வாந்தி வரும். என்ன செய்ய? ஒரு லிட்டர் தண்ணீரில் கால் மூடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அவ்வப்போது குடிக்கலாம். 100 மி.லி கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, நீர் மோராக்கி, அடிக்கடி சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.

சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். சுவையாகவும் இருக்கும். செரிமானத்துக்கும் நல்லது. உடல் வறட்சியைப் போக்க இளநீரைப் போன்ற மகத்தான திரவம் வேறில்லை. வெயிலின் கடுமையை விரட்ட, குளிர் பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து இளநீர் குடிப்பதே சிறந்தது.

சத்து?

இத்தனை மகிமை வாய்ந்த தண்ணீரில் ஏதேனும் சத்துகள் இருக்கிறதா எனப் பார்த்தால் இல்லை. ஆனால், தண்ணீர் அதிகமுள்ள காய்கறி, பழங்களுக்குப் பஞ்சமே இல்லை. அவற்றைச் சாப்பிடுவதன் மூலம் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும். காய்கறி, பழங்களில் உள்ள சத்துகளும் உடலுக்குப் போகும். பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளிலும், தர்பூசணி, கிர்ணி, பேரிக்காய் போன்ற பழங்களிலும் தண்ணீர் அதிகம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், வறட்சியும் போகும். வைட்டமின் சி சத்தும் சேரும்.

குளிர் நீர் குடித்தால் எடை கூடுமா?

அப்படியெல்லாம் இல்லை. குளிர்ந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும், அதை, நம் உடல், தன்னுடைய வெப்பநிலைக்கு மாற்றித்தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால், கொழுப்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இதுதான். வெந்நீரை தனது வெப்பநிலைக்கு மாற்றும் வளர்சிதை மாற்ற இயக்கம் அதிகரிப்பதால், உடலில் கொழுப்பு தங்குவதில்லை.

யாருக்கு தண்ணீர் கூடாது?

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய நோயாளிகளுக்கு (இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை 30க்கும் குறைவானால்) நாளொன் றுக்கு 1,000 மி.லி. தண்ணீர் மட்டுமே அனுமதி. அது அவர்கள் மருந்து எடுத்துக்கொள்ள, சமைக்க என எல்லாம் அடக்கியது. அளந்து அளந்துதான் எடுத்துக் கொள்ள வேண்டும். கிட்னி பாதித்தவர்களுக்கு, பாதிப்பின் தீவிரம் பொறுத்து, தண்ணீரின் அளவு 500 மி.லி. வரை
குறைக்கப்படவும் கூடும்.

குழந்தைகளுக்குத் தண்ணீர்?

பள்ளிக்கூடம் செல்கிற குழந்தைகள், பள்ளிக் கழிவறையின் சுகாதாரமற்ற சூழலுக்குப் பயந்து, சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க, தண்ணீரே குடிக்க மாட்டார்கள். இது மிகவும் தவறு. தண்ணீரே குடிக்காமலும், சிறுநீரை அடக்கியும் பழகினால், மிக இளம் வயதிலேயே யூரினரி இன்ஃபெக்ஷன் வரும். சிறுநீர் கழிக்கும்போது வலி, கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறுவது, அடர்த்தியாக, அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்றவை இன்ஃபெக்ஷனுக்கான அறிகுறிகள். அந்த அளவுக்குப் போக விடாமல், முன்கூட்டியே அடிக்கடி தண்ணீர் குடிக்கப் பழக்குவது ஆரோக்கியமானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 4 =

*