;
Athirady Tamil News

யாழ். குப்பிழான், ஏழாலை விவசாய நிலங்களில் திருடர்கள் பெரும் அட்டகாசம்!! (படங்கள், வீடியோ)

0

யாழ்.குப்பிழான் தெற்கு,ஏழாலை கிழக்குப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் நேற்று வியாழக்கிழமை(07)அதிகாலை சென்ற திருடர்கள் பல ஆயிரக்கணக்கான உருளைக்கிழங்கு, கறி மிளகாய், வெங்காயம் ஆகிய மரக்கறி வகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் பயிர்களையும் நாசமாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குப்பிழான் தெற்கு காடகடம்பை இந்து மயானத்திற்கு அண்மையிலுள்ள விவசாய நிலத்திற்குள் உட்சென்ற திருடர்கள் அங்கு விளைந்த நிலையில் காணப்பட்ட சுமார்- 250 கிலோ உருளைக்கிழங்கை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.சுமார் 15 பாத்தியில் பயிரிடப்பட்டிருந்த இன்னும் பத்து நாட்களுக்குள் அறுவடை செய்யத் தயாராகவிருந்த பெறுமதி வாய்ந்த உருளைக்கிழங்குகளே இவ்வாறு திருட்டுப் போயுள்ளது. திருட்டுப் போன பகுதியில் திருடர்கள் மது அருந்தியதற்கான தடயங்களும் காணப்படுகின்றன.

திருட்டுப் போன பகுதிக்கு அயலிலுள்ள புகையிலைச் செய்கை பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தினுள்ளும் சில புகையிலைக் கன்றுகள் முறிக்கப்பட்டிருந்ததுடன் திருடிய உருளைக்கிழங்கின் சிறு பகுதி கொட்டப்பட்டுமிருந்தன.

அப்பகுதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் ஏழாலை கிழக்குப் பகுதியில் விவசாய நிலத்திற்குள் சென்ற திருடர்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 400 கிலோ கறி மிளகாயைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் நூற்றுக்கணக்கான கறி மிளகாய்ச் செடிகளையும் முறித்து நாசமாக்கிச் சென்றுள்ளனர்.

ஏழாலை கிழக்கைச் சேர்ந்த தவகுலசிங்கம் உதயகுமார் என்பவரின் விவசாய நிலத்திலேயே மேற்படி இரு திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

மேற்படி இரு திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையாக அமைந்துள்ள மற்றொரு விவசாய நிலத்திற்குள் சென்ற திருடர்கள் அங்கு நன்கு விளைந்திருந்த வெங்காயத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். குறித்த விவசாய நிலத்திற்குள் திருடர்கள் கொண்டு வந்த உரப்பையொன்றும், நீர் இறைக்கும் இயந்திரத்தின் சிறிய நீர்க் குழாயொன்றும் மீட்கப்பட்டுள்ளன. இந்த நீர்க் குழாய் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது குறித்த பகுதிக்கு விவசாய நில உரிமையாளர் அல்லது பொதுமக்கள் வந்தால் அவர்களைத் தாக்குவதற்காகத் திருடர்களால் எடுத்து வரப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. வெங்காயப் பயிர்ச் செய்கைக்கு அருகில் அதே விவசாயி பயிரிட்டிருந்த உருளைக்கிழங்குச் செடியைப் பிடுங்கிய திருடர்கள் அது விளையாத காரணத்தால் அப்படியே விட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் விவசாயியான கணேசநாதன் பமிலன் என்பவரின் பல ஆயிரக்கணக்கான பெறுமதியான வெங்காயமே இவ்வாறு திருட்டுப் போயுள்ளது.

விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாக நம்பியுள்ள நிலையில் குறித்த திருட்டுச் சம்பவங்களால் தாம் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக இரு விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,மேற்படி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக நேற்றுக் காலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற போதும் பொலிஸார் அவர்களின் முறைப்பாட்டை அடியோடு ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

திருட்டு இடம்பெற்ற விவசாய நிலங்களில் திருடர்களின் கால் அடையாளங்கள் தெளிவாக காணப்படுவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொலிஸாரிடம் தெரிவித்த போது குறித்த கால் அடையாளங்களுக்குரியவர்களை இனங்கண்டு தமக்கு அடையாளம் காட்டுமாறு பொலிஸார் சிரித்துக் கொண்டே கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”


You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*