;
Athirady Tamil News

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி வாலிபர் மரணம்..!!

0

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கல்லக்குடியில் செல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி போட்டி நடைபெறும் பகுதியில் தடுப்பு கம்பிகள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அமர்வதற்காக பாதுகாப்பான கேலரிகள், வாடிவாசல் மற்றும் காளை, மாடுபிடி வீரர்களை மருத்துவ பரிசோதனை செய்ய இடங்கள், டாக்டர்கள் அமரும் இடங்கள், வீரர்கள் காயம் அடைந்தால் உடனே அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தனி இடம் அமைக்கப்பட்டிருந்தது.

வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி அளித்ததையடுத்து இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் வாடி வாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளின் திமில்களை பிடித்து அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றது.

இந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற லால்குடி அடுத்த ஆனந்திமேடு கிராமத்தை சேர்ந்த மருதை மகன் விவசாயி மணிகண்டன் (வயது 23), கல்லக்குடி வைத்தியநாதன்பேட்டையை சேர்ந்த மைனர் மகன் வேல்முருகன் (22) ஆகிய 2 பேரும் காளை மாடு ஒன்றை அடக்க முயன்றனர்.

அப்போது 2 பேரையும் கூர்மையான கொம்புகளால் மாடு குத்தி தூக்கி வீசியது. இதில் 2 பேரின் வயிற்றில் கொம்புகள் குத்தியதில் 2 பேரும் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.

இதையடுத்து 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். வேல்முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் காளையை அடக்க முயன்ற மால்வாய் கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன் (24), கோவண்டாகுறிச்சியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (36) ஆகியோரும் காளைகள் முட்டியதில் பலத்த காயம் அடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவ சிகிச்சையை தீவிரப்படுத்துமாறு லால்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சூப்பர் டி.என்.டி.நடேசன் அறிவுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 12 =

*