;
Athirady Tamil News

பள்ளி சேதமடைந்து இருப்பதாக ஆர்டிஓ அலுவலகத்தில் 1-ம் வகுப்பு மாணவி புகார்..!!

0

பொன்னேரி சிவன்கோவில் தெருவில், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியின் கட்டிடம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கல்வித்துறைக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவியான பொன்னேரி தாயூமான் செட்டி தெருவை சேர்ந்த அதிகை முத்தரசி (வயது 6) இன்று காலை திடீரென பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தாள். அவள் தனது பள்ளி மிகவும் சேதமடைந்து இருப்பதாக புகார் மனுவை ஆர்.டி.ஓ. நந்தகுமாரிடம் கொடுத்தாள்.

இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.டி.ஓ. நந்தகுமார் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக மாணவியிடம் கூறி அனுப்பி வைத்தார்.

மாணவி கொடுத்த புகார் மனுவில், “எங்கள் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் பழுதடைந்து உள்ளது. தரை பகுதியும் பெயர்ந்து இருக்கிறது. இதனால் மாணவர்கள் நடந்து செல்ல முடியவில்லை. குடிநீர் குழாய், கழிவுநீர் கால்வாய் உடைந்துமோசமான நிலையில் காணப்படுகிறது.

மேலும் பள்ளியின் பின்பக்க பகுதி மது அருந்தும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

மாணவியுடன் அவரது தந்தை பாஸ்கரனும் உடன் வந்திருந்தார். அவர் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு சிக்கல்கள் இடையூறுகளுக்கு நடுவில் அரசு பள்ளியில் தான் எனது மகளை சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அரசு பள்ளியில் சேர்த்தேன்.

ஆனால் பள்ளி சுற்றுபுறம் தூய்மையான நிலையில் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை விளையாட்டு திடல், பள்ளி மேற்கூரை ஓடுகள் உடைந்து காணப்படுகிறது.

மழைக் காலங்களில் மழையில் நனைந்தபடி படிக்கின்றனர். தரைப்பகுதி பெயர்ந்து போய் நடக்க முடியாமல் உள்ளது. பள்ளியின் மோசமான நிலை குறித்து ஏற்கனவே அதிகாரிகள், கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*