;
Athirady Tamil News

சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – டக்ளஸ் எம்.பி!!

0

சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

தென்னிலங்கை தலைவர்களோடு சுயலாப தரகுத்தமிழ் தலமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டம் மட்டுமே! குடியிருக்க ஒரு துண்டு நிலமோ குச்சு வீடோ இன்றி வாக்களித்த தமிழ் மக்கள் அங்கே தவித்திருக்க, தமக்கு மட்டும் ஆடம்பர மாளிகைகையும், சொகுசு வாகனங்களும் கேட்டு பெறுவதை தேசிய நல்லிணக்கம் என்று கூறிவிட முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அரசியல் தீர்விற்கு ஒத்துவரவில்லை என்று எதிர்க்கட்சி மீது பழி சுமத்திவரும் இவர்கள், தமக்கு கிடைத்திருக்கும் சலுகைகளுக்கு அதே எதிர்க்கட்சியினர் ஆதரவு வழங்கியதும், அதற்கு மட்டும் யாரும் அறியாமல் தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்து வருவதை தேசிய நல்லிணக்கம் என்று கூறி விட முடியுமா?

தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும், அன்றாடத்தேவைகளையும், பெற்றுக்கொடுக்க மறந்தவர்கள், அதற்காக கடந்த காலங்களைப்போல் அண்மையிலும் கனிந்து வந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த மறுத்தவர்கள், இலங்கையில் பெய்கின்ற மழைக்கு ஜெனீவாவில் குடை பிடிக்க போகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் நோக்கி எமது மக்கள் செத்து செத்து ஓடிக்கொண்டிருந்த அவலம் கண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வெளியுலகம் வந்து எமக்கு விடுதலை பெற்றுத்தருவார்கள் என்று யாருக்கு இவர்கள் புலுடா விடுகிறார்கள்? அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும். தேவையென்றால் ஒரு மருத்துவிச்சியின் துணைபோல் ஐ.நா அல்ல எந்த நாடும் வந்து எமக்கு பங்களிக்கட்டும்.

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் தேடி ஊரெல்லாம் அலைவது போல், பேரம் பேசி எந்த தீர்வையும் பெறவல்ல அரசியல் பலத்தை தம் வசம் வைத்துக்கொண்டு உலகெல்லாம் இவர்கள் சுற்றி வர நினைப்பது ஏன் என்று நான் கேட்கின்றேன்.

மேலும், விவசாய மக்கள் மற்றும் கடல் தொழிலாளர்கள் சார்ந்து பெரிதாக அவதானங்கள் செலுத்தப்படாத நிலை காணப்படுகின்றது. அதேநேரம் தனியார்த்துறை பணியாளர்கள் தொடர்பிலும் அக்கறை இம்முறை செலுத்தப்படவில்லை.

அதேபோன்று மாற்று வலுவுள்ளோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு மத வழிபாட்டுத் தலங்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு, கட்டுமானப் பொருள் இறக்குமதிக்கான செஸ் வரி குறைப்பு, முதியோருக்கான ஓய்வூதியத் திட்டம், மாணவர்களுக்கான வெளிநாட்டுப் புலமைப்பரிசில், மலசல கூடங்கள் அமைப்பு போன்ற திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. எனினும் அவற்றினை செயற்படுத்துவதில் எதிர்நோக்கப்பட வேண்டிய நிதிக்கு என்ன வழி என்பது தெரியவில்லை.

அதேநேரம், இம்முறையும் பாதுகாப்புக்கென அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னரான கடந்த காலங்கள் அடங்கலான இக்காலகட்டங்கள் பகை மறுப்புக் காலங்களாக உருவாகியிருக்க வேண்டியவை. எனவே, அவ்வாறானதொரு நிலைமையினை ஏற்படுத்தும் முகமாக அதிக நிதியினை யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாராங்களை உயர்த்துவதற்கு, அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு எனப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அத்தகையதொரு நிலையினை முதலில் ஏற்படுத்த முனையுங்கள் என்ற கோரக்கையினையும் இங்கு முன் வைக்க விரும்புகின்றேன்.

கடந்த வருடங்களில் கடன் வட்டிகளை செலுத்துவதற்கு மாத்திரம் 85,200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில், அது இவ்வருடம் 91,300 கோடி ரூபா வரையில் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் கடன் தவணையானது 30,700 கோடி ரூபாவாக இருந்து இந்த வருடம் அது 66,500 கோடி ரூபாவாக அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது ஒரு வருடத்தில் கடன் தவணையானது நூற்றுக்கு 217 வீதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் மக்களுக்கு மிக அதிகமான வரிச் சுமை தொடர்வதையும் அவதானிக்க முடிகின்றது. கடந்த வருடம் ஒர் இலட்சத்து எழபத்தொரு ஆயிரத்து இருநூறு கோடி ரூபா என்ற வகையில் எதிர்பார்க்கப்பட்ட முழு வருமான வரித் தொகையானது இந்த வருடம் இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து எழுநூறு கோடி ரூபா என எதிர்பார்ககப்படுகின்றது.

எனவே, நாடளாவிய ரீதியில் மக்களது சுமைகள் நீக்கப்படக்கூடிய வகையிலான பொருளாதார ஏற்பாடுகள் அவசியமாகும். ஒரு பக்கத்தில் கவர்ச்சியான விடயங்களைக்காட்டிவிட்டு, மறுபக்கத்தில் அதிகமான சுமைகளை மக்கள் மீது திணிப்பதால் மக்கள் எவ்விதமான நன்மைக்கும் ஆளாகப் போவதில்லை.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*