;
Athirady Tamil News

கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்!!

0

அரச பாடசாலைகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின்போது, மாணவர்களில் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு 02, ரி.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரியின் நான்கு மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (04) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது, ரி.பி. என்ற நாமம் இலங்கையின் சுதந்திர போராட்டத்தில் மிக முக்கியமாக பங்காற்றியவர்களில் ஒருவராக கருதப்படுவதோடு, முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த ஒருவருமாவார். கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஆரம்பகால அதிபராக கடமையாற்றிய அவர், ஆற்றிய கல்விச் சேவை அவர் அரசியலில் அறிமுகமாவதற்கும் ஏதுவாக இருந்தது.

முஸ்லிம்களின் கல்வித்துறையில் ஒரு இலக்கணமாக கருதப்படும் ரி.பி. ஜாயாவின் பெயரில் இயங்கும் இந்த பாடசாலையில் சில காலங்களுக்கு முன்னர் சுமார் முந்நூறு மாணவர்கள் கல்வி பயின்றார்கள். இன்று அது எழுநூறாக அதிகரித்துள்ளது. இதற்கு எமது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் இந்தப் பாடசாலையின் முன்னேற்றத்து செய்த பணிகளும் ஒரு காரணமாகும். மாகாண முதல்வருக்கும் இதிலே பங்குண்டு என்பதையும் நினைவுகூர வேண்டும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது என்பது ஒரு கஷ்டமான விடயம். இந்த சவாலை பாடசாலையின் அதிபர், பழைய மாணவர் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பதற்கு இந்த கட்டிடத் திறப்புவிழா ஒரு கட்சியாக உள்ளது.

இப்பிரதேசத்தில் குறைந்த இடவசதியுடன் அதிக மாணவர்கள் இந்தப் படாசலையில் கற்கின்றனர். பக்கத்திலுள்ள காணிகளைப் பெறுவதற்கும் ஏனைய பாடசாலைகளிலிருந்த இடவசதிகளை மாற்றிக் கொள்வதற்கும் அர்ஷாத் நிசாம்தீன் முயற்சிகளை செய்துவருகிறார். இவ்விடயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர் குழுவொன்றை ஆதாரம் காட்டி, 1995-96 காலப்பகுதியில் அல் இக்பால் மற்றும் ரி.பி. ஜாயா பாடசாலைகள் மூடப்படவேண்டும் என்று அப்போது முயற்சி செய்யப்பட்டது. பாடசாலையை மூடாது பாதுகாப்பதற்காக எமது ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப், முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சேர்ட் பதிரணவுடன் ஒரு பாரிய மோதலை மேற்காள்ள வேண்டியேற்பட்டது. எனினும் சிறிது சிறிதாக நிலைமை மாறிப்போனது.

தாய் மொழி மூலம் கல்வி கற்பது என்பது அத்தியவசியமானது. ஆரம்பக் கல்வி என்பது, உளவியல் ரீதியான மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அடிப்படை அம்சமாகும். இதனால்தான், தேசிய பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளை ஆங்கிலத்தில் ஆரம்பிப்பதில்லை. ஆனால், ஆங்கில மோகம் என்பது இப்போது எல்லோரின் மத்தியிலும் இருக்கிறது.

வருமானம் குறைந்த குடும்பங்களிலுள்ள பிள்ளைகளும் ஆங்கில மொழியில் கற்கவேண்டும் என்பதற்காக சர்வதேச பாடசாலைகளில் சேர்க்கின்றனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர்.

கொழும்பில் அரசாங்க பாடசாலைகளை விட, ஆங்கில மொழியில் கல்வி போதிக்கின்றன சர்வதேச பாடசாலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அரச பாடசாலைகளில் கல்வித்தரம் குறைவாக இருக்குமோ என்ற யூகத்தில், மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளுடன் போட்டிபோட்டு, தரமான மாணவர்களை அரச பாடசாலைகளுக்குள் உள்ளீர்க்கவேண்டும். இது எமக்கு மத்தியிலுள்ள மிகப்பெரிய சவாலாகும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துத்தான் இந்தப் பாடசாலையை வளப்படுத்தவேண்டும்.

பகுதிநேர வகுப்புகளை நடத்தியாவது அரச பாடசாலைகளில் கல்விரத் தரத்தை மேம்படுத்தமுடியுமா என்பது குறித்தும் சில அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அரசியல்வாதிகளால் மாத்திரம் மாணவர்களை ஊக்கப்படுத்த முடியாது. அதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

பாடசாலைகளில் பெளதீக வளங்களை அதிகரிப்பதுடன், கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்தும் தீவிரமாக சிந்திக்கவேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின்போது, மாணவர்களில் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும். பெற்றோர்களுடன் சினேகபூர்வமாக அணுகித்தான் இந்த விடயத்தை கையாளவேண்டும்.

ஆசிரியர்கள் மீதுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் இவற்றை ஒரு சுமையாக சுமத்தவில்லை. வெளிநாடுகளில் நடப்பதை அடிப்படையாக வைத்து கற்பித்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்து, நவீன உபாயங்களை உட்புகுத்தித்தான் இப்படியான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + eleven =

*