;
Athirady Tamil News

ஊர்காவற்றுறை பிரதேச சபைச் சாரதியை நீதிமன்று கண்டிப்பு!!

0

“மக்களுக்கு சேவையாற்றவேண்டிய நீங்கள் – அவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்படவேண்டும். மதுபோதையில் அதுவும் இரவுவேளையில் சாரத்தியம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இனி இந்தத் தவறைச் செய்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் எச்சரித்தார்.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளரின் சாரதி மதுபோதையில் சாரத்தியம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் மன்றில் முற்படுத்திய போதே நீதிவான் இவ்வாறு அவரைக் கண்டித்ததுடன், சாரதி அனுமதிபத்திரத்தை 3 மாதங்களுக்கு இடைநிறுத்த உத்தரவிட்டார்.

மேலும் தவிசாளரின் சாரதி குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் அவரை அரச செலவாக ஆயிரத்து 500 ரூபா செலுத்துமாறும் மன்று கட்டளையிட்டது.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிகிழமை இடம்பெற்றது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளருடைய வாகனம் கடந்த வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் பயணித்த போது, அதனை இடைமறித்த போக்குவரத்துப் பொலிஸார், சாரதியிடன் ஆவணங்களைப் பரிசோதித்துள்ளனர்.

அதன்போது அவர் மதுபோதையில் இருந்தமை பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் தவிசாளரும் அவரது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருந்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாகக் கைது செய்யப்பட்ட பிரதேச சபை வாகனச் சாரதி, மதுபோதைச் சோதனை அறிக்கையுடன் மறுநாள் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போதே அவரைக் கண்டித்த நீதிமன்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தியதுடன் அரச செலவாக ஆயிரத்து 500 ரூபா பணத்தைச் செலுத்தவும் உத்தரவிட்டது.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட செயலக சாரதி ஒருவரும் இதே குற்றச்சாட்டில் அன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரையும் எச்சரித்த நீதிவான், சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தியதுடன் அரச செலவாக ஆயிரத்து 500 ரூபா பணத்தைச் செலுத்தவும் உத்தரவிட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 15 =

*