;
Athirady Tamil News

கலைஞனாக வலம் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல்- நிலவன்!! (படங்கள்)

0

கலைஞனாக வலம் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல்- நிலவன். பாலசுந்தரம் ரஜிந்தன் , ஆசிரியர் ( விசேட கல்வி) ஈழத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலண ஊரில் பிறந்து வேலணையூர் ரஜிந்தன் எனும் பெயரில் கவி படைத்து வருகின்றார். கவி ஆர்வம் கவித்துவம் பல காலமாக தன்னுள் அடைபட்டுக் கிடந்தாலும் கடந்த சில
வருடங்களாக கவிதைத் துறையில் கலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் யாழ்.இலக்கிய குவியத்தினுடாக சமூகத்தில் கவிதை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதோடு,
வேலணை துறையூர் கலை இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தும் வருகின்றார். முகநூல் குழுமங்களில் அதிக கவிதைகளை எழுதி 150 இற்கு மேற்பட்ட பல சான்றிதழ்களும் பல விருதுகளும் பெற்று தனது கவிதைப் பயணம் வலுப்பெற்ற குறுகிய காலத்தில் 'அழகோவியம்' எனும் மின்நூல் வெளியிட்டுள்ளார் விரைவில் சமூகம் சார் காதல் சார் கவிதை நூல்கள் வெளியிடவும் தயாராகி உள்ள வேலணையூர் ரஜிந்தன் அவர்களுடன் உரையாடல்.

நிலவன் :- இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டுள்ளவர் நீங்கள். உங்களின்
குடும்பப்பின்னணி, கல்விப் பின்னணி என்பன பற்றிக் கூறுவீர்களா? எனது குடும்பம் 4 அங்கத்தவர்களைக் கொண்டது ,அப்பா,அம்மா,தம்பி,நான் .அப்பா கட்டடக்கலைஞர், அம்மா இல்லத்தரசி, தம்பி யாழ்.போதனா வைத்திய சாலை ஊழியர்
.தந்தை பிரபல நாடக கலைஞர் அவரின் "கண்ணாடி உறவுகள்" இசையும் கதையும் 80பதுகளில் பிரபலமாகப் பேசப்பட்டது.

நிலவன் :- தங்கள் பிறந்து வளர்ந்த சூழல், எத்தகைய கல்வி, இலக்கிய பின்புலம் கொண்டது?
நாட்டின் யுத்தம் காரணமாக பல பாடசாலைகளில் கல்வி பயின்றாலும் குறிப்பிட்டு சில பாடசாலைகளை கூறுகிறேன் . ஆரம்பக் கல்வி – யாழ்/வேலணை ஐயனார் வித்தியாலயம் , இடைநிலைக் கல்வி – கிளி/முழங்காவில் மத்திய கல்லூரி , சாதாரண தரம் – யாழ்/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி , உயர்தரம் – யாழ்/வேலணை மத்திய கல்லூரி , ன்பு யாழ்ப்பாணம்
தேசிய கல்வியியற்கல்லூரியில் 3 வருடங்கள் ஆசிரிய பயிற்சி முடித்து, விசேட கல்வி ஆசிரியராக , மன்/ சென். லூட்ஸ் மகா வித்தியாலயத்தில் 6 வருடங்கள் கடமையாற்றிய வருகின்றேன் . அண்மையில் தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி மாணிப் பட்டக் கற்கையையும் பூர்த்தி செய்துள்ளேன்.

நிலவன் :- உங்களின் பெயர் எதை குறித்து நிற்கின்றது அது இயற்பெயர அல்லது
புணைபெயர அது உருவாகியது பற்றி கூறுங்கள் ?
நான் பிறந்து வளர்ந்த சூழல் யுத்தம் நிறைந்த கலகட்டமாகும் வறுமை, பஞ்சம் நிறைந்தது. இருந்த போதும் கல்விக்கும் கலை இலக்கியத்துக்கும் பஞ்சம் இல்லை . பரட்சிகரமான தெருக்கூத்து, நாடகம் , இசை கச்சேரிகள் பார்த்து வளர்ந்தேன் . முக்கியமாக தமிழை உயிராக மதித்தவர்கள் சூழலில் தமிழ்ப் பற்று மிகுதியாக எனக்குள்ளும் இருந்தது. தமிழிலும் ஊரிலும்
மிகுந்த ஆர்வமும் பற்றும் காரணமாக இலக்கிய உலகில் என்னை அடையாளப் படுத்த எனது பெயரின் முன்னே ஊரின் பெயரை இணைத்து வேலணையூர் ரஜிந்தன் ஆக வலம் வருகின்றேன்.

நிலவன் :- இதுவரை உங்களுக்கு கிடைத்த பட்டங்கள் விருதுகள் பற்றி கூறுங்கள் ?
என் கவிதைகளுக்கான 7 உயர் விருதுகள்…

1 கவிச்சிற்பி (தமிழமுது கவிச்சாரல் )
2 கவித்தீபம் (தடாகம் கலை இலக்கிய வட்டம் )
3 பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் விருது (இலக்கம் 83 கவியுலகப் பூஞ்சோலை )
4 இசைக்கவி (சிறந்த பாடலாசிரியர் விருது – ஊ…ல…ழ…ள – கவிதைகள் சரணாலயம்)
5 கவிச்சரம், கவித்தாமரை விருது ( டாக்டர் ஜீவாவின் கவிதைப்பூங்க )
6 இளங்கவி விருது (முத்தமிழ் களம் /கம்பன் கவிக்கூடம்)
7 கவிச்சாகரம் விருது (சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா )
இலக்கிய மன்றங்களின் சான்றிதழ்கள், முகநூலில் 100 இற்கு மேற்பட்ட கவிச் சான்றிதழ்கள்.
அதைத் தொடர்ந்து இலங்கையின் முன்னணி வானொலிகளான சூரியன்fm, சக்திfm களிலும்
சர்வதேச வானெலிகளான புரட்சிfm, Cmr radio , ITR FM , லண்டன் வானொலி ,சுவிஸ்
வானொலி மற்றும் பல முன்னணி இணையத்தளங்களிலும் என் கவி உலா வந்தது ,
நிகழ்ச்சிகளிலும் முழுமையாக தனி நிகழ்ச்சியாக இடம் பிடித்தது, உதயன், மெட்ரே நியூஸ் ,
தினக்குரல், சுடரொளி, தினகரன் போன்ற இலங்கை பத்திரிகையிலும், ஜீவநதி போன்ற
சஞ்சிகைகளிலும் பல மின்நூல்களிலும் எனது கவி தடம் பதித்தது. டான் தொலைக்காட்சியில்
கவிதைகள் சொல்லவா நிகழ்ச்சியில் கவியும் அரங்கேறியது.
DD Tv(யாழ்ப்பாணம்), வியூகம் தொலைக்காட்சி (கல்முனை) நேரடியாக கவிதை நிகழ்ச்சியும்,
சத்தி FM இல் நிலாச்சோறு நிகழ்ச்சியில் நேரடியான கவி விவாதம் செய்யும் வாய்ப்பும்
கிடைத்தது.
இவ்வாறாக எனது கவிதைகள் பல சமூக ஆர்வலர்களின் விருப்பத்துக்குரியதாகவும்
,ரசனைக்குரியதாகவும் வலம் வருவதாலும், முன்னணி கவிஞர்கள் ஊக்கங்கள் கிடைக்கப்
பெறுவதாலும் தொடர்ந்தும் கவி வானை கவிதைகளால் அலங்கரித்து வருகிறேன்.

நிலவன் :- படைப்பாக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்த உங்கள் குடும்பப் பின்னணி,
சிறுபராயம் ?
தந்தை நாடகக் கலைஞர் அவ்வப்போது புரட்சி கவிதைகள் எழுதுபவர், சிறு வயதில் தந்தை பாடல்கள் எழுதி என்னைப் படுவதற்கு ஊக்கம் தருவார், அன்னையும் தந்தையும் என் கவிதை முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாகவும் ஊக்கம் தருபவர்களாகவும் இருந்து வருகின்றார்கள்.

நிலவன் :- நீங்கள் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு உந்த சக்தியாக அமைந்த
பிரதான காரணியென எதனைக் கருதுகிறீர்கள்?
எனது எழுத்துத் துறைக்கான உந்து சகதியாக அமைந்த பிரதான காரணி கவிதை என்றே கூறுவேன். அதாவது பாடசாலைப் பருவத்தில் பத்திரிகை வாசிப்பின் மூலம் என் கவிப்பிரியம் முளைவிட்டது. தமிழ் மன்றங்களில் பிடித்த கவிதையை படித்து பாராட்டுக்களில் உத்வேகம் பெற்ற எனது ஆர்வம் உயர்தரப் பிரிவில் கவியரங்கில் முதற் பரிசையும் தட்டிச் சென்றது.

நிலவன் :- தங்களுடைய ஆரம்பக்கால எழுத்திற்கும் இன்றைய எழுத்திற்கும்
உள்ளவித்தியாங்கள் என்ன?

எனது ஆரம்ப கால எழுத்துக்கள் உணர்வுகளின் கிறுக்கல்கள் என்றே கூறுவேன் அவை இன்று சற்று விருத்தியடைந்து, வளர்ச்சியடைந்து கவிதைப் பரப்புக்குள் தவழ ஆரம்பித்திருக்கின்றது.

நிலவன் :- நீங்கள் வரு விசேட கல்வி ஆசிரியர் என்றவகையில் தற்கால சூழலில் மாணவர்கள்
எதிர்கோள்ளும் சவால்கள் பற்றி கூறுங்கள் ?
தற்கால சூழலில் மணவர்கள் கல்வியில் பெரும் சவாலை எதிர் நோக்குகின்றார்கள் அசுர வளர்ச்சி அடையும் தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்களுக்கான கற்கை நுப்பங்களில் மாற்றம் வேண்டும் மணவர்களை ஈக்கக்கூடி கற்கை முறையே அத்தியவசியமாகின்றது. மாணவர்கள் தற்காலத்தில் கல்வியில் விரக்தி ஏற்பட்டு போதை வஸ்த்து, அடிதடி போன்ற வன்முறை
கலாச்சாரத்திற்குள் தம்மை மறந்து சென்றுகொண்டிருக்கிறார்கள் சீரான கல்வி முறையை அமுல்ப்படுத்துவதே இன்றைய முக்கியமான தேவையாக உள்ளது.

நிலவன் :-உங்கள் முதல் கவிதை அனுபவத்தைச்சிறிது கூற முடியுமா? உங்களை பல
கவிதையினை எழுதத்தூண்டிய காரணிகள் எவை எனக்கூற முடியுமா?அதற்கான பின்புலம்
ஏதாவது இருந்ததா? எனது முதல் கவிதை அன்னைக்கானதே, உயர்தர மாணவனாக இருக்கின்ற சமயம் ஒரு மதிய
வேளை எங்கள் ஓலைக் குடிசை வீட்டில் அம்மா சமைத்துக் கொண்டிருக்க நான் பாடம் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது கூரை தூவாரத்தின் வளியாக பொட்டு வெய்யில் என்மேல் பட அம்மா அக்கறையோடு அவதிப்பட்டு என்னை நிழலுக்க இருந்து படிக்கும்படி கூறினார் அந்த அன்பில் உதித்ததே எனது முதல் கவிதை ( " பொட்டு வெய்யில் என்மேல்
பட்டதற்கு பட்டுப் புளுவாய் துடித்தவள்………." ) என்னை பல கவிதை எழுதத் தூண்டிய காரணி என்றல் ஆரம்பத்தில் என் பருவம் அதாவது இள வயதில் காதல் கவிதைகளும், பின்பு சமூகம் சார் கவிதைகளும் அதாவது நாட்டின் அவலங்கள் அநீதிகளை கண்முன்னே கண்டு நெஞ்சம் கொதிக்க அவற்றை எடுத்துக்கூற கவிதையைக் கையள்கிறேன்.

நிலவன் :- எளிமையாகவும் நேரடியாகவும் எழுதுகிறீர்கள். அப்படி ஒரு கொள்கை
கொண்டிருக்கிறீர்களா? அல்லது உங்கள் இயல்பா?
உண்மையில் எனது எழுத்துக்கள் சகல தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பது எனது எண்ணம் எனவே எளிமையான நடை சிறப்பானதாக உள்ளது. ஆயினும் மரபு சார் கவிதைகளை படைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டிருக்கின்றேன். கருத்துகளை சாதாரணமாக சொல்லவதை விட இலக்கிய படைப்புகளில் கருப்பொருளாகச் கொள்ளும் போது அப்படைப்புக்கள் ஊடாக சொல்ல வேண்டியவற்றை செவ்வனே தெளிவாகச் சொல்ல முடியும்.

நிலவன் :- உங்களின் நூல்கள் பற்றிய சுருக்கமான விபரங்களைக் கூறுங்கள்?
இரு நூல்கள் ஒரு மேடையில் வெளியீடு நூல்கள். பொற்கனவு :- சமூகம் , சூழல் என்ற பரந்துபட்ட பார்வையிலும் சமூகத்தின் அவல நிலைகளையும், எமது ஈழத்தமிழன் அவலங்களையும் மற்றும் பல பொது
விடயங்களையும் தாங்கிய கவிதை தொகுதி நிச்சயமாக சமூகத்திற்கு நல்ல பல செய்திகளைக் கூறும் குறிப்பாக வாழ்வின் மகத்துவத்தை எடுத்துரைக்கும்.. அன்பின் வழி வாழ வழிகாட்டும்.

நிலா நாழிகை :- காதல் சார்பான ஒருதலைக் காதல், இரு மனம் இணைந்த காதல்,
காதலின் இன்பம், துன்பம், பிரிவு என்ற இன்னோரன்ன விடயங்களை சுவைபடக்
கூறும் கவிதைகளின் தொகுதி.
எனது கவிக்கான கரு சமூகப் பிரச்சினைகள் மட்டுமல்லாது நெஞ்சைத் தொடும் முக்கிய விடயங்களையும் உள்ளடக்கியே உருவாகின்றன . அந்த வகையில் கரு இரண்டு வகைகளில் உருவாகின்றன ஒன்று உள்ளதை உள்ளபடி கவிநயத்துடன் பதிவு செய்வது , மற்றயது பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் கரு , இரு நூல்கள் முதல் பிரசவமாக வெளிவர உள்ளன
இரண்டிற்கும் எனது உழைப்பு மட்டுமல்லாமல் பெற்றோரின் வழிகாட்டுதல் , மூத்த கவிகளின் ஆலோசனை ஊடகங்கள், உறவுகள் பங்களிப்பு ,ஊக்கம் என்பவற்றுடன் கவிஞர் த. ஜெயசீலன், கவிஞர் அகளங்கன் அவர்களது அணிந்துரைகள் .
கவிஞர் நெடுந்தீவு முகிலன், வேலணையூர் சுரேஸ், வேலணையூர் தாஸ், பைந்தமிழ் செம்மல் நிர்மலா சிவராஜசிங்கம், சக்தி எவ்எம் மூத்த அறிவிப்பாளர் செல்டன் அன்ரனி போன்ற பலரது வாழ்த்துரைகளுடன் வவுனியா விஜய் அச்சகம் அட்டைப்படம் உட்பட கவிநூலை அச்சிடுகின்றார்கள்.

நிலவன் :- ஈழ இலக்கியம் தமிழக இலக்கியத்தின், வாசகர்களுடனான உங்கள் அனுபவம்
பற்றி?
நிச்சயமாக ஈழத்து இலக்கியங்கள் தனித்துவமானவை . அவற்றின் பண்புகள் தனிச்சிறப்பு உடயவை நமது மொழியாடல்கள், சொல்லாடல் என்று எங்கள் கிராமிய மணம் வீசுபவை, அழகு தமிழ் பேசுபவை . வாசகர்கள் என் உயிரானவர்கள் அவர்களே எனது பலம் பலவீனம்
என் நிலைக்கு காரணம் வாசகர்களின் உண்மையான விமர்சகர்கள், ஊக்குவிப்புக்களும் செய்கின்றார்கள்.

நிலவன் :- விமர்சனங்கள், அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள் ?
வளந்துவரும் இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல வருப்புகின்றீர்கள் ?
கசப்பான அனுபவங்கள் நிறையவே உண்டு அத்தனையும் என் இலக்கிய பயணத்தில் என்னை திடமாக்கியவை அவற்றைக் கண்டு அஞ்சவில்லை அனுபவமாக ஏற்றுக் கொண்டேன் . இலக்கிய விமர்சனக் கருத்துகள் கொள்கைகளை நிச்சயமாக கவனிப்பேன் எதுவாகினும் ஏற்றுக்கொள்வேன் விமர்சகர்கள் நிச்சயமாக எம்மை வளப்படுத்தும்.

நிலவன் :- ஈழத்தில் உள்ள தற்போதுள்ள சூழல் தொடர்பாக உங்கள் பார்வை…?
ஈழத்தில் தற்போதுள்ள சூழல் இதுவரை காலமும் எதற்காக எம்மவர்கள் உயிர்களை விலை
கொடுத்து தியாகங்கள் செய்தார்கள், போராடினார்கள் என்பதை மறந்து இன்றைய
இளைஞர்கள் யுவதிகள் தவறான பாதையில் சென்றுகொண்டிருப்பது மிகவும் மன
வேதனைக்குரியதே…!

நிலவன் :- நிறைவாக என்ன சொல்ல. விரும்புகின்றீரகள் ..?
களம் தேடி அலைந்த இளையவர்கள்,பெரியவர்கள் ஆக்கங்கள் தாங்கி கடுமையாக உழைத்து
வெளியீடு செய்தோம். எங்கள் உன்னதம் எம்மின மகத்துவம் எம் மொழி மேன்மை எழுவதும் வீழ்வதும் எங்களது கைகளிலேயே ! என் மூச்சும், வாய்ப் பேச்சும், கவி வீச்சும் தமிழையே உயர்வாய்ப் போற்றும் – என்றும்
தரணியில் தமிழைப் பறை சாற்றும் !!! இச்சந்தர்ப்பத்தை வழங்கிய சகோதரன் நிலவன் மற்றும் உயிர்ப்பூ இணையத்தளத்திற்கும் என் இதயபூர்வ நன்றிகளும் வாழ்த்துகளும்.
நிலவன் :-உங்கள் படைப்புக்களை பார்ப்தற்கு நானும் ஆவலுடன் இருக்கின்றேன் . உங்கள்முயற்சிகள் வெற்றி
பெற எனது வாழ்த்துக்கள்.
-நிஜத்தடன் நிலவன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + two =

*