;
Athirady Tamil News

கோத்தாவே வேட்பாளர்: அதில் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்கிறார் கெஹெலிய!!

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன அல்லது கூட்டு எதிரணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடப்போவது கோத்த பாய ராஜபக் ஷவே என்பது உறுதியாகிவிட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எமது தரப்பு சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றியீட்டுவார் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஸ்திரமான நாடு ஒன்றை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். அதற்கு ஒரு சிறந்த தலைவர் தேவைப்படுகின்றார். அனைத்து மக்களினதும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியீட்டுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்பாளர் விவகாரம் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்

நாங்கள் எந்தவொரு தேசியமட்ட தேர்தலுக்கும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் தற்போதைய சூழலில் முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதாவது சட்டப்படி ஜனாதிபதி தேர்தல் சில மாதங்களில் நடைபெறவேண்டும். ஆனால் அதற்கு முன்னர் எவ்வாறான தேர்தல் நடைபெற்றாலும் அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கி பயணிக்கின்றது. இவ்வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. அவ்வாறாயின் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது கேள்வியாகும். இவ்வாறு ஸ்திரமற்ற நிலையில் நாடு இருக்கும்போது பொருளாதாரம் பாரிய சிக்கலை எதிர்கொள்ளும். அதுதான் தற்போது நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றது. இவ்வாறு நாட்டில் ஸ்திரமற்ற நிலை தொடர்ந்தால் பாரிய சிக்கல் நிலை ஏற்படலாம்.

எனவே தேர்தல் ஒன்றின் ஊடாக நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். எந்தத் தேர்தலானாலும் நாங்கள் அதில் போட்டியிட்டு வெற்றிபெற தயாராக இருக்கின்றோம்.

கேள்வி: அப்படியானால் உங்கள் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

பதில்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷதான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது. கோத்தபாய ராஜபக்ஷ எமது தரப்பு வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெறுவார்.

கேள்வி: கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைவரும் அதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனரா?

பதில்: 90 வீதமானவர்கள் அவரை விரும்புகின்றனர். எனவே அவர் எமது தரப்பு சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்.

கேள்வி: வாசுதேவ நாணயக்கார போன்றோர் எதிர்ப்பு வெ ளியிட்டனரே?

பதில்: வாசுதேவ நாணயக்காரவுக்கு சில சிக்கல் இருந்தாலும் பெருமபான்மையோரின் தீர்மானத்துடன் தான் இணங்கிப்போவதாகவும் அதற்காக முன்னின்று உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதில் எந்த சிக்கலும் இல்லை.

கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையே?

பதில்: அவர் விரைவில் அது தொடர்பில் அறிவிப்பார். எமது அனைவரதும் தீர்மானமே அவரது தீர்மானமாகும்.

கேள்வி: டிலான் பெரெரா போன்றவர்களும் விருப்பமின்மையை வெளியிட்டுள்ளனரே?

பதில்: அவர் இறுதியில் இணங்கிவிடுவார். அவற்றை நாங்கள் முகாமைத்துவம் செய்வோம்.

கேள்வி: சிறுபான்மை மக்கள் தொடர்பில் ?

பதில்: சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற முடியும். குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிப்பார்கள். இந்த நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை நிறுவவேண்டும். அதனையே சிறுபான்மை மக்களும் விரும்புகின்றனர். எனவே கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சிறுபான்மை மக்களும் ஆதரவு வழங்குவார்கள் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 12 =

*