தியாகராய நகரில் தண்ணீர் பிடித்து கொடுத்து ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கும் பெண்..!!

சென்னையில் தண்ணீர் பஞ்சத்தால் தண்ணீரை விற்று சம்பாதிக்கும் பெரிய மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சாதாரண ஏழைப்பெண் நேர்மையாக உழைத்து மாதம் ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கிறார்.
தியாகராய நகர் தாமஸ் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர் நாகம்மாள். இவரது கணவர் கார் டிரைவர். கணவரின் சம்பாத்தியத்தில்தான் அந்த குடும்பம் ஓடுகிறது.
அங்குள்ள அபார்ட்மென்டில் வசிக்கும் 5 குடும்பத்தினர் வேலைக்கு செல்பவர்கள். தண்ணீர் வரும்நேரங்களில் தண்ணீர் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டனர். அவர்களுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்து நாகம்மாள் உதவி செய்தார்.
தினமும் அவரை வேலை வாங்க விரும்பாத 5 குடும்பத்தினரும் தண்ணீர் பிடித்து தாருங்கள் அதற்கு சம்பளமும் வாங்கி கொள்ளுங்கள் என்றனர். அதற்கு நாகம்மாளும் ஒத்துக் கொண்டார். இப்போது அந்த வீடுகளில் உள்ளவர்கள் வீட்டின் முன்பு பேரல்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள். காலையில் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள்.
நாகம்மாள் தண்ணீர் பிடித்து 5 பேரல்களையும் நிரப்பி வைத்துவிடுவார். மாலையில் வீடு திரும்பியதும் மோட்டார் மூலம் அந்த தண்ணீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி விடுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆயிரம் வீதம் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளமாக வழங்கி வருகிறார்கள்.
அவர்களுக்கு தண்ணீர் பிடித்து கொடுப்பது மட்டுமல்ல தனது வீட்டு தேவைக்கும் தினமும் 13 குடம் தண்ணீர் பிடிப்பதாக கூறுகிறார் நாகம்மாள். வருமானத்துக்காக உடலை வருத்தி நேர்மையாக உழைக்கும் நாகம்மாளை அனைவரும் பாராட்டு கின்றனர்.