ஆப்கானிஸ்தான் தலைநகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் உள்ள புலி மஹ்மூத் கான் பகுதியில் அந்நாட்டின் அதிபர் மாளிகையின் அருகே ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்கும் மிகப்பெரிய கிடங்கு உள்ளது.
இந்த கிடங்கை சுற்றிலும் ராணுவ உயரதிகாரிகளுக்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இந்நிலையில், இன்று காலை இப்பகுதியில் ஏராளமான வெடிப்பொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு கார் பயங்கரமான சப்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் 34 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும் சுமார் 70 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.